நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பொதுப் போக்குவரத்து , சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தனிப்பட்ட தேவைகளுக்கு உபயோகிக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

எரிபொருள் விநியோகத்திற்காக ‘தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை’ அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

டீசல் கப்பல்கள் வருகை தந்துள்ளமையினாலும் , 18 – 19 ஆம் திகதிகளுக்கிடையில் பெற்றோல் கப்பல் வரவிருக்கின்றமையினாலும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

‘தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை’ நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரே சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (16) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

டீசல் கப்பல் வருகை தந்துள்ளது என்பதற்காக சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நடைமுறைக்கு வந்ததன் பின்னரே சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான கியூ.ஆர். (QR) குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு  www.fuelpass.gov.lk  என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து , தமது வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பேரூந்து, புகையிரதங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர, வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டை , கடவுச்சீட்டு இலக்கம், வர்த்தக அல்லது வியாபார பதிவு இலக்கம் (Business registration Number) என்பவற்றைக் கொண்டு மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திற்குள் பிரவேசித்து வாகனங்களை பதிவு செய்ய முடியும். ஒரு வாகனத்திற்கு ஒரு கியூ.ஆர். குறியீடு மாத்திரமே வழங்கப்படும்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நடைமுறைக்கு வரும் வரை லங்கா ஐ.ஓ.சி. வழமை போன்று எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும்.

ஒரு தேசிய அடையாள இலக்கத்தைக் கொண்டு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும். ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் காணப்படுமாயின் , குறித்த வீட்டிலுள்ள ஏனைய நபர்களின் அடையாள அட்டை இலக்கத்தினைக் கொண்டு ஏனைய வாகனங்களைப் பதிவு செய்ய முடியும்.

பதிவு செய்த பின்னர் வழங்கப்படும் கியூ.ஆர். குறியீட்டைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு வாகனத்திற்கு மாத்திரமே எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு அந்த வாகனத்திற்கு ஒரு வாரத்திற்கு வழங்கப்படக் கூடிய எரிபொருளின் அளவு எம்மாலேயே தீர்மானிக்கப்படும்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கக் கூடிய அளவை தீர்மானிப்பதற்கு ஏற்ற வகையில் , 6 வகைகளுக்குள் வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய கார், வேன், பஸ், லொறி, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன அந்த 6 வகையான வாகனங்கள் ஆகும்.

இவற்றில் வேன் என்ற வகைக்குள் ஜூப் மற்றும் கெப் ரக வாகனங்கள் உள்ளடக்கப்படும். லொறி என்ற வகைக்குள் ஏனைய கனரக வாகனங்கள் உள்ளடக்கப்படும்.

இவற்றின் பயன்பாட்டுக்கு அமையவே வழங்கப்படவுள்ள எரிபொருளின் அளவு தீர்மானிக்கப்படும்.

அத்தோடு வாகன இலக்க தகட்டின் இறுதி எண் 0,1,2 ஆகக் காணப்படின் அவற்றுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் , இறுதி இலக்கம் 3,4,5 ஆகக் காணப்படின் அவற்றுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், இறுதி இலக்கம் 6,7,8 ஆகக் காணப்படுடின் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும். கையிருப்பின் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

அரச அல்லது தனியார் நிறுவனங்களில் சாரதிகளாக தொழில் புரிபவர்களுக்கு சொந்த வாகனம் காணப்பட்டால், அவர்களுக்கும் ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும்.

எவ்வாறிருப்பினும் இந்த சிக்கலை தீர்ப்பதற்கான முறைமை குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

அதே போன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் பதிவு செய்துள்ள தொழிற்துறைசார் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக பிரத்தியேக அனுமதி அட்டையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இந்த முறைமை நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கவில்லை. எவ்வாறிருப்பினும் ஒப்பீட்டளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோகத்தில் காணப்படும் சிக்கலுக்கு ஓரளவு தீர்வாக அமையும் என்று நம்புகின்றோம் என்றார்.

Share.
Leave A Reply