இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம், இன்றுடன் 100 நாட்களை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய, பிறகு தமது பதவியில் இருந்து விலகி, புதிய அரசு அமைய வழியேற்படுத்தியிருக்கிறார். நூறாவது நாளாக தொடர்ந்து நடக்கும் தங்களுடைய போராட்டத்தை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று கூறி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியன்று கொழும்பு – காலி முகத்திடலில் பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் ஆரம்பம் முதலே வலுவாக இருந்தது. இந்த நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு, ரணில் நாட்டின் பிரதமரானதும் மக்கள் போராட்டம் சற்றே தணிந்து காணப்பட்டது. ஆனால், வலுவிழக்கவில்லை.

இந்த நிலையில், நாட்டில் எரிவாயு விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை போன்வை ஏற்றத்துடனேயே இருந்ததால் மக்களின் கோபம் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தினர், மக்கள் போராட்டம் மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த மக்கள், அதற்குள்ளாகவும் செல்ல முற்பட்டபோது, அவர்களை நோக்கி போலீஸார் தொடர்ச்சியாக கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகங்களை நடத்தி கட்டத்தைக் கலைக்க படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், அதிகரித்து வந்த மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப்படையினர் தோல்வி அடைந்தனர். இதையடுத்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் இல்லத்தை கடந்த 9ஆம் தேதி போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.

கோட்டாபய விலகலால் சமாதானம் அடையாத மக்கள்

இவ்வாறான பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி நாட்டை விட்டு தப்பிச் சென்ற அவர், முதலாவதாக மாலத்தீவுக்கும் அதற்கு மறுநாள் சிங்கப்பூருக்கும் சென்றார். இதேவேளை, தாம் வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக கோட்டாபய அறிவித்தார்.

இதன் பின்னர், சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதர் மூலம் தமது பதவி விலகல் கடிதத்தை ஜூலை 14ஆம் தேதி அனுப்பி வைத்தார் கோட்டாபய.

அவரது கடிதத்தை உரிய பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜூலை 15ஆம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து இலங்கையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி புதிய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு முறைப்படி நடைபெறவுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியபோதும் அந்த செயல்பாடு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவில்லை. கோட்டாபய, மஹிந்த குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக ரணில் விக்ரமசிங்க கருதப்படுவதால், அவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இந்த மக்கள் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது.

“இது வாழ்வதற்கான போராட்டம்”

இதையொட்டி கொழும்பு – கொச்சிகடை பகுதியில் இன்று பல்வேறு இடங்களில் நூறாம் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

அப்போது, “வாழ்வதற்கான போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்,” என இந்த 100 நாள் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று வெற்றி கொண்டாட்டங்களை நடத்தி வரும் சிங்கள மொழி யுவதியான ஹிமாஷி ரெஹானா தெரிவித்தார்.

”போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த போராட்டம் இத்துடன் முடிவடைந்துள்ளதா என கேட்டால் இல்லை என்பதே எங்களுடைய பதில். இந்த நாட்டிற்கு சாதகமான மாற்றம் கிடைக்கும் நாளிலேயே இந்த போராட்டம் முடிவடையும். சிஸ்டம் சேஞ்ச் ஒன்று ஏற்படும் தினத்திலேயே போராட்டம் முடிவடையும்.

அவ்வாறு நடக்குமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆம் அவ்வாறு நடக்கும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறு ஒன்றிணைய வேண்டும். அரசியல், கட்சி பேதங்கள் எதுவும் வேண்டாம். நாட்டிற்கு உண்மையாகவே நன்மை நடக்கும் என்றால், அதை யார் செய்தாலும், எந்த கட்சியினர் செய்தாலும் அதனை நாம் வரவேற்க வேண்டும். யாராவது தவறு இழைக்கும் போது, அதற்கு எதிராக குரல் எழுப்பும் இடத்திற்கு நாம் வர வேண்டும்.

அதற்கான முதுகெலும்பு எமக்கு இருக்க வேண்டும். எமக்கு நாடு வேண்டும். வாழ்வதற்கான நாடு வேண்டும். கடன் இல்லாத நாடு வேண்டும். எமது குழந்தைகளுக்கு கையளிக்க முடிந்த நாடொன்று வேண்டும். எமக்கு வாழ வேண்டும். நீங்களும் வாழ வேண்டும். அதற்காகவே இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

காலி முகத்திடலில் மாத்திரமே போராட்டம் நடக்கின்றது. எதிர்காலத்தில் போராட்டத்தை வெற்றி கொள்ள முடியுமா என பலரும் கேட்கின்றார்கள். முடியும் என்றே நான் கூறுகின்றேன். ‘காலி முகத்திடல்’ என்பது போராட்டத்திற்கான ஒரு அடையாளம் மாத்திரமே.

சில சந்தர்ப்பங்களில் அது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அம்மாவை வெற்றி பெற செய்வோம். அம்மா வெற்றி பெற்றால், நாமும் வெற்றி அடைவோம். வாழ்வதற்காக போராட்டம் வெற்றி பெறட்டும். மக்களுக்கு வெற்றி” என்கிறார் ஹிமாஷி ரெஹானா.

புதிய கலசாரத்தின் எழுச்சி

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியே, இந்த போராட்டத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஸ்டின் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

”கோட்டாபய அரசாங்கம் இன ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தி, மக்களை பிரித்துத்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். அதேபோல இன்று மக்கள் ஒற்றுமை ஆகி அவர்களை அனுப்பி இருக்கிறார்கள். எந்த இனங்களை பிரித்து இந்த ஆட்சிக்கு வந்தார்களோ, அந்த அத்தனை இனங்களும் ஒன்றாக இணைந்து, அவர்களை துரத்தி அடித்திருக்கிறது.

இந்த போராட்டக்களம், அத்தனை மக்களையும் ஒன்றிணைத்துவிட்டது. இனி எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் பிரிய மாட்டோம் என்ற அளவிற்கு இந்த போராட்டம், மக்களின் உள்ளங்களை பலப்படுத்தி இருக்கின்றது.

அரசியல் ரீதியில் பிரித்தாலும் சக்தியானது, இவர்கள் இனி அரசியல் செய்ய முடியாது என்ற இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ போக வேண்டும் என்று வந்தவர்கள், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போக வேண்டும் என்ற இடத்திற்கு வந்தார்கள்.

இந்த போராட்டத்தின் முதல் வெற்றியானது, கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தி அடித்தது. இந்த வெற்றியை இன்று கொண்டாடி வருகின்றனர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு சாதகமாக செயற்படும் ரணில் விக்ரமசிங்க தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார். அவரையும் துரத்தி, இந்த அரசியல் சிஸ்டத்தை முற்றுமாக துடைத்தெறிவோம். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கிய பிறகே இந்த போராட்டத்தை விட்டு வெளியேறுவோம்” என போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஸ்டின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நாட்டை இழிவுப்படுத்தி, சீரழித்து, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த அரசியல்வாதிகள், நாட்டை விற்றுள்ளதாகவும், இனி அவ்வாறு இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடும் விக்னேஷ்வரன் கூறுகின்றார்.

”இந்த போராட்டத்தின் வெற்றி இலக்கை இன்று நாம் அடைந்திருக்கின்றோம். அதேபோன்று, இங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அனைவரையும் குறைக்கூற முடியாது. அதேபோன்று அனைவரையும் சரி என்றும் கூற முடியாது. இவ்வளவு நாள் இலங்கையர்களாக இருக்கக்;கூடிய நாங்கள், இரண்டு மொழிகளாலும், 4 மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தோம்.

இனவாதத்தையும், மதவாதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைவரும் அரசியல் செய்தார்கள். அனைவரையும் பிளவுப்படுத்தி அரசியல் செய்திருக்கின்றார்கள். நாங்கள் அதனை ஒட்டு மொத்தமாக ஒழித்து இன்று இலங்கையர் என்று வாழ்வதற்கான அடிப்படை தளத்தை இட்டிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடக்கூடியவர்களுக்கு இது அச்சுறுத்தலாக அமையும். சரியாக அரசியல் செய்பவர்களுக்கு இது பலமாக அமையும். எதிர்காலத்தில் இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.

இதுவரை அரசியல்வாதிகளாக இருந்தவர்கள், ஒட்டு மொத்த இலங்கையையும் சூரையாடி, நாட்டை இழிவுப்படுத்தி, சீரழித்து, தமது சுகபோக வாழ்க்கைக்காக முழு நாட்டையும் விற்றிருக்கின்றார்கள். இனி இவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரன்.

Share.
Leave A Reply