காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னரும் ஜனாதிபதி செயலகத்தை எமது கட்டுப்பாட்டில் வைத்தவாறே போராட்டத்தை தொடர்ந்து நடத்தவுள்ளோம்.

எவரும் மக்களின் பக்கம் இல்லையென்பதை இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் நீரூபித்துள்ளன.

மக்களுக்கு எதிரானவரை ஆட்சியாளராக நியதித்துள்ள நிலையில், போராட்டம் தொடர்கின்றது.

இந்த போராட்டத்தின் மூலம் தேவையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை அடைய நாங்கள் எண்ணியுள்ளோம் என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே தமது இரண்டாவது முக்கிய கோரிக்கை எனவும் காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாராளுமன்றம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இன்று ஒரு முடிவை எடுத்துள்ளது. ராஜபக்ஷவினரே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர்.  எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கு எதிராகவும் எமது அமைதியான போராட்டங்கள் தொடரும்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply