வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனப் பதிவு எண்ணின் இறுதி இலக்கம் 0, 1, 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கப்படுகிறது.

இறுதி இலக்கம் 3, 4, 5 எனில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இறுதி இலக்கம் 6, 7, 8, 9 ஆக இருந்தால், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. .

இந்த எரிபொருள் விநியோக திட்டம் இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாவும், முச்சக்கர வண்டிகளுக்கு 2,000 ரூபாவும், ஏனைய வாகனங்களுக்கு 7,000 ரூபாவும் எரிபொருள் வழங்கப்படும்.

இதேவேளை, இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இன்று 6 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 30 இலட்சம் வாகனங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தை பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply