போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பு – கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, வீடுகளை தீக்கிரையாக்கி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்ட விரோத செயல் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராகத் தான் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், எதிர்காலமொன்றை அமைக்க வேண்டும் என போராடுவார்களாயின், அதற்கு முழுமையான ஆதரவை நான் வழங்குவேன். அமைதியாக போராடுவோருக்கு நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். வேண்டுமென்றால், அமைதியாக போராடுவோருக்கு மற்றுமொரு மேடையை நான் அமைத்துக்கொடுப்பேன்.
இந்த நாட்டின் நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு, ஒத்துழைப்புடன் செயற்பட நான் எதிர்பார்க்கின்றேன். ஒன்றாக இணைந்து பணியாற்ற ஏன் முடியாது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டை இல்லாதொழிப்பதற்காகவே நாம் எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம் என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது மிக முக்கியமான கேள்வி.
நானும் அது குறித்து சிந்தித்து பார்த்துள்ளேன். அப்படியென்றால், இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். இளைஞர்களின் குரல் மற்றும் ஏனையோரின் குரல்களை நாம் செவிமடுக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறைக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நடைமுறையை மாற்றுமாறு கூறுகின்றார்கள். அமைதியாக கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கு, அவர்களின் கருத்துக்களை வெளியிட நாம் இடமளிக்க வேண்டும். எமக்கும் அதற்கு பதிலளிக்க முடியும். அமைதியாக இருப்போரின் கருத்துக்களையும் நாம் கேட்டறிந்துக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, இலங்கையின் 8வது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை இந்தப் பதவியேற்பு நடந்தது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, மக்கள் வீதிக்கு வந்துப் போராடத் தொடங்கினர். அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவையும் வெளியேற்றவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், முதலில் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் பதவி விலகி வெளியில் தெரியாக இடத்தில் பாதுகாப்பாக இருந்து வருகிறார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யாக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஆக்கினார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டைவிட்டுத் தப்பி மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கிருந்து தமது விலகல் கடிதத்தையும் அவர் அனுப்பிவைத்தார்.
இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசமைப்புச் சட்டத்தின்படி பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இலங்கையில் ஜனாதிபதிகள் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். ஆனால், அசாதாரண சூழ்நிலையில், ஜனாதிபதி விலக நேர்ந்தால், அவரது மீதமிருக்கும் பதவிக் காலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக நாடாளுமன்றமே தேர்ந்தெடுக்க அரசமைப்புச் சட்டம் வழி செய்துள்ளது.
இந்த அடிப்படையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, தனது பதவிக் காலத்துக்கு முன்பே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் பதவி விலகினார். இதனால், இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆனார் ரணில் விக்கிரமசிங்க.
இவர் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் மீதமுள்ள காலத்துக்கு இந்தப் பதவியை வகிப்பார். கடந்த ஜனாதிபதி தேர்தல் 2019ம் ஆண்டு நடந்ததால் இந்தப் பதவிக் காலம் 2024 வரை நீடிக்கும்.
ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோ போட்டியிட்டனர்.