>இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களையும் சம்பவங்களையும் அவதானிக்கையில் எப்போதுமே ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அதுவும் வெறும் 134 வாக்குளால் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றால் இலங்கையில் மாத்திரம் அல்ல உலக அரசியல் வரலாற்றிலேயே இதுவே முதற்தடவையாகும்.
எவ்வாறாயினும் தனது நீண்டகால சிம்மாசன கனவை ரணில் விக்கிரமசிங்க நனவாக்கியுள்ளார். இந்த அரசியல் வெற்றி இலக்கை அடைவதற்கு அவருக்கு தேர்தல்கள் கைகொடுக்கவில்லை. மாறாக ‘அரகலய’ போராட்டமே வழிவகுத்தது.
நிலைமை இவ்வாறு இருக்க, ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் அன்றைய தினம் பாராளுமன்றத்திற்குள் செல்லகையில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) அநுகுமார திசாநாயக்க எதிரே வந்துள்ளார்.
‘இரு துப்பாக்கிகளும் எங்கே’ என ஜனாதிபதி ரணில் கேட்டுள்ளார். சிறு சஞ்சலத்துடன் எந்த துப்பாக்கிகள் என இதன்போது அநுர பதிலளித்துள்ளார்.
பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்திடமிருந்து களவாடி சென்றீர்களே அந்த துப்பாக்கிகளை தான் கேட்கிறேன் என ஜனாதிபதி ரணில் குறிப்பிடவே, கேலி செய்யாது எடுத்துச் சென்றவர்களிடம் கேளுங்கள் என அநுர கூறியுள்ளார்.
பரவாயில்லை கூடிய விரைவில் இராணுவத்திடம் ஒப்படைத்து விடுங்கள் என கூறியவாறு ஜனாதிபதி ரணில் அங்கிருந்து சென்றுள்ளார்.
மறுநாள் வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் 2 ஆவது மாடியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்தார்.
இந்த நிகழ்வில் கட்சி தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பதவிப்பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து கூறிய கட்சி தலைவர்களிடம் கூடிய விரைவில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ‘அதிமேதகு’ என உங்களை அழைக்க மாட்டேன். ஏனெனில் அவ்வாறு அழைக்க வேண்டாமென நீங்கள் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘அதிமேதகு’ என்ற சொல்லுக்கு தடைவிதித்துள்ளேன். எனவே அந்த சொல்லை பயன்படுத்தினால் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என புன்னகையுடன் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உட்பட அருகில் இருந்தவர்கள் மௌனித்த புன்னகையுடன் இருந்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களிலுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பிரதிப்பலிப்புகளை உணர முடிகின்றன.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த கூடியவராகவே ஜனாதிபதி ரணில் தற்போதுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் 19 ஆவது அரசியலமைப்பை நீக்கி மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை தன்னகப்படுத்திய போதிலும் அந்த அதிகாரத்தின் ஊடக பயன்பெற முடியாது போனது.
மறுபுறம் தன்னகப்படுத்திய முழுமையான நிறைவேற்று அதிகாரத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்து விட்டு நாட்டை விட்டே தப்பிச்சென்றுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியில் உள்ளார்.
விளையாடு ஆனால் விதியை பின்பற்று ( Play the Game But Follow the Rules) என்பது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் போதனையாகவே இந்த வாசகம் உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பல ஆண்டுக்கால காத்திருப்பின் பின்னர் அதிகாரத்தை அடைந்துள்ளார்.
மக்களாணைக்கு முன் எதுவும் சாத்தியமில்லை என்றாலும் குறுகிய காலத்திற்கேனும் விதியை பின்பற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் விளையாட்டுக்களை காண கூடியதாக இருக்கும்.