வெயாங்கொட வதுரவ ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கம்பஹாவைச் சேர்ந்த 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஷெர்லி லக்ஷ்மன் திஸாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான ரயிலில் இருவர் மது அருந்தியதாகவும், அவ்வாறு செய்ய வேண்டாம் என ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்திய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரயிலில் மது அருந்திக்கொண்டு பயணித்த இருவர் தொடர்பில் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர்கள் விடுத்த அறிவித்தலின் பேரில், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் அங்கு சென்று சோதனையிட்ட போது, மது போதையில் இருந்த இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டியுள்ளனர்.
குறித்த இருவரையும் அந்த ரயில் பெட்டியில் இருந்து மற்றுமொரு ரயில் பெட்டிக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது, அவர்களில் ஒருவர் அதிகாரியொருவரை எட்டி உதைத்த போதே பாதுகாப்பு அதிகாரி ரயில் கதவில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த மீரிகம பொலிஸ் அதிகாரிகள் குழு, சந்தேக நபர்கள் இருவரையும் மீரிகம ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் ரயில் சிற்றுண்டிச் சாலையில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.