பிரித்தானியாவின் இலக்கம் பத்து டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம் முக்கியமானது. இங்கு தான், பிரதமர் அலுவலகம் உள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இதுவே தான்.
சமீபகாலமாக ‘டவ்னிங் ஸ்ட்ரீட்’ அலுவலகம் பற்றி பல நகைச்சுவைகள் உள்ளன. காலனித்துவ ஆட்சியால் இந்தியாவை அடக்கியாண்ட வின்ஸ்ட்டன் சேர்ச்சிலும் வாழ்ந்த இடமும் இதுதான். இங்கு விரைவில் மாவிலைத் தோரணம் கட்ட தயாராகுங்கள் என்று கேலி செய்கிறார்கள், சில வெள்ளைக்காரர்கள்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னோக்கி நகருகின்றார் ரிஷி சுனாக் என்ற இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரஜை. பெரும்பாலும் இந்தியர்கள் என்றாலே ஆங்கிலேயர்களுக்கு கேலி தான். ஒரு இந்தியனாவது, பிரித்தானிய பிரதமராவது என்பார்கள்.
சூரியன் மறையாத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த பிரித்தானிய தேசத்தின் முதலாவது இந்திய வம்சாவளிப் பிரதமர் என்ற வரலாற்றைப் படைக்கவுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர், ரிஷி சுனாக்கிற்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமென எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஏனெனில், பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலொன்றில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வரலாறு காணாத வெற்றியை ஈட்டித்தந்த சமகால பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இடத்தை ரிஷி சுனாக் அடைவதொன்றும் இலகுவான காரியம் அல்ல.
பொரிஸ் ஜோன்சனை பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் ‘கிறிஸ் பூசிய பன்றி’ என்று வர்ணிப்பார்கள். எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் வழுக்கிச் செல்லக்கூடிய தந்திரசாலியாக அவர் பார்க்கப்படுகிறார்.
கேளிக்கையில் நாட்டம் கொண்ட பொரிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற வாழ்க்கை முறை, அவரது பிரதமர் பதவிக்கே ஆப்பு வைத்துள்ளது என்பதே உண்மை.
கொரோனா தொற்று காரணமாக, பிரித்தானியா முடங்கியிருந்த காலப்பகுதியில் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
எனினும், டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்கவில்லை. விருந்துகள் களைகட்டின. அரசியல்வாதிகள் ஆடம்பரமாக பொழுதைக் கழித்தார்கள். இந்த விவகாரம், ‘பார்ட்டி-கேட் ஊழல்” என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு மக்களின் கோபத்தைத் தூண்டியது.
ஊழல் பற்றி உள்ளக விசாரணை இடம்பெற்றது. அரசியல்வாதிகள் விதிமுறைகளை மீறியதுடன் நில்லாமல், அதீத மதுபோதையுடன் அடித்துக் கொண்டதும், பொருட்களை சுக்குநூறாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில், விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 126அபராதங்கள் விதிக்கப்பட்டன. பொரிஸ் ஜோன்சனின் மீது ஒரேயொரு சந்தர்ப்பம் தொடர்பில் அபராதம் விதிக்கப்பட்டபோதிலும், விதிமுறைகள் நிகழ்ந்த பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் ஸ்தலத்தில் இருந்திருக்கிறார்.
எனினும், ஆரம்பத்தில் தாம் ஒன்றுமே செய்யவில்லை என்று பாளுமன்றத்தில் கூறிய, பொரிஸ் ஜோன்சன் சில நாட்களுக்குப் பின்னர், தவறு தான் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்.
இது விக்டோரியன் கலாசாரத்திற்குள் பிரித்தானிய மக்கள் எதிர்ப்பார்க்கும் கனவான்தனத்திற்கு முற்று முழுதும் முரணானது அல்லவா? பொரிஸ் ஜோன்சன் மாத்திரமன்றி, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பலரும் சல்லாபிகளாகத் தான் இருந்தார்கள். இவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
கன்சர்வேட்டிவ் கட்சியின் அங்கத்தவர்கள் மத்தியில் ஒழுங்கைப் பேணும் பொறுப்பிற்கு ஜோன்சனால் நியமிக்கப்பட்ட கிரிஸ் பின்ஸர் என்ற அரசியல்வாதியும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அடுத்தடுத்து பலர் பதவி விலகினார்கள். பொரிஸ் ஜோன்சன் மீதான அவநம்பிக்கை மென்மேலும் வலுப்பெற்றது. பிரித்தானிய ஆட்சி நிர்வாக முறையைப் பொறுத்தவரையில், ஒரு பிரதமரை பதவியில் இருந்து தூக்கியெறிவது சாத்தியமற்ற விடயம் அல்ல. எனினும், அது கொஞ்சம் கஷ்டமானது.
பாராளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சியின் தலைவர் பிரதமராக இருப்பார். எனவே, கட்சியின் தலைமைப் பதவியை மாற்றினால், இயல்பாகவே பிரதமர் மாறிவிடுவார்.
இதன் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஜோன்சனுக்கு ஆதரவாக 211 வாக்குகளும், எதிராக 148 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
கட்சி நலன்கள் என்று பார்த்தால், ஜோன்ஸன் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். எனினும், இது இரகசிய வாக்கெடுப்பு என்பதால், கூடுதலானவர்கள் எதிர்த்தே வாக்களித்திருந்தார்கள்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பையும் தாண்டி ஜோன்சன் புகழை இழந்திருப்பதாகக் கருதியதால், அவரது அமைச்சரவையில் இருந்தும், தாம் வகித்த அரச பதவிகளில் இருந்தும் பலர் விலகினார்கள்.
இதன் பின்னர், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்காக நடந்த போட்டியில் பத்துப் பேர் வரை குதித்தார்கள். இந்தப் போட்டியில் கடைசியாக, ரிஷி சுனாக்கும், லிஸ் ட்ருஸ் என்ற பெண்மணியும் எஞ்சி இருக்கிறார்கள்.
கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் சுனாக் 137 வாக்குகளையும், ட்ருஸ் 113 வாக்குகளையும் பெற்றார்கள். வர்த்தக அமைச்சராகக் கடமையாற்றியவர் தோல்வி கண்டார். இதன் பிரகாரம், அடுத்து வரும் நாட்களில் கன்சர்வேட்டிவ் கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும். இதற்காக தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறும். பொதுக்கூட்டங்களில் பேசுவார்கள்.
ஆகஸ்ட் ஐந்தாம் திகதி ஏறத்தாழ 160,000 அங்கத்தவர்கள் வாக்களிப்பார்கள். செப்டெம்பர் ஐந்தாம் திகதி முடிவு தெரிந்து விடும். இதற்கு இடையிலான காலப்பகுதியில் பொருளாதாரம் பற்றி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறலாம். சேறுபூசல்கள் நிகழலாம். திரைமறைவு காய்நகர்த்தல்களையும் தவிர்க்க முடியாது.
இப்போதைக்குள்ள கருத்துக் கணிப்புகள், ட்ருஸ் அம்மையாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டுகின்றன. எது எப்படியிருந்தாலும், பிரித்தானிய சமூகத்தில் ஆசிய நாட்டவர்கள் பற்றிய நிலைப்பாடு மாறியிருப்பதை சமகால அரசியல் நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.
அன்று, இளவரசி டயானாவை விமர்சிப்பதற்காக, இவளை ஓர் இந்தியனுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறிய கடும்போக்காளர்கள் இருந்த பிரித்தானிய சமூகத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் கடைசிப் படிக்கட்டில் நிற்கிறார்.
அவர் மாத்திரமல்ல. வேறு நாடுகளைச் சேர்ந்த பலரும் வேட்பாளர் பட்டியலில் இருந்தார்கள். போட்டியில் குதித்து தோல்வி கண்ட நைஜீரிய வம்சாவளிப் பெண், கடைசி நிமிடத்தில் போட்டிபோடும் எண்ணத்தை விலக்கிக் கொண்ட இந்திய வம்சாவளி உட்துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல், முதல் தடவையாக பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பிரதமர் பதவிக்காக போட்டியிட முன்வந்து, தமது முடிவை மாற்றிக் கொண்ட பங்களாதேஷ் வம்சாவளி போட்டியாளர் ரெஹ்மான் ஷிஸ்த்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் கடைசி பத்து வேட்பாளர்களது பட்டியலில் இடம்பிடித்திருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட், சட்டமா அதிபர் சுவெல்லா பிரேவர்மன் ஆகியோரும் தெற்காசிய வம்சாவளி அரசியல்வாதிகளாவர்.
மிகவும் பழமைவாத சிந்தனையுடன் இந்தியர்களை இன்னமும் காலனித்துவ அடிமைகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கும் பிரஜைகள் பிரித்தானிய சமூகத்தில் இருக்கலாம். இருந்தபோதிலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ரிஷி சுனாக் அமுலாக்கிய சில திட்டங்களின் வெற்றி கண்டு, அவரது திறமைகளை அங்கீகரிக்கும் அரசியல்வாதிகளும் உள்ளார்கள்.
முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் முற்போக்கான சிந்தனையால் தான் ரிஷி சுனாக்கும், கறுப்புத் தோல் உடையவர்களாக வர்ணிக்கப்படும் ஏனைய அரசியல்வாதிகளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உயர் பதவிகளை வகிக்கும் அளவிற்கு உயர முடிந்திருக்கிறது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை