முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி நந்தசேன கோத்தபாய ராஜபக்சாவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக உடனடியாகக் கைதுசெய்யக்கோரி சிங்கப்பூர் சட்டமாஅதிபரிடம் itjp ஐச் சேர்ந்த சட்டவாளர்கள் குற்றவியல் முறைப்பாடு ஒன்றினைச் சமர்ப்பித்திருக்கின்றார்கள்.
அவர்சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராகப் பதவிவகித்த காலப்பகுதியில் ஜெனிவா உடன்படிக்கைகளின் பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டார் என்றும் அவை சர்வதேச சட்ட அதிகாரவரம்பின்கீழ் சிங்கப்பூரில் உள்ளூரிலேயே விசாரணைக்கு உட்படுத்தத் தகுந்த குற்றங்கள் என்றும் 63 பக்கங்களைக் கொண்ட அக்குற்றவியல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி பல மாதங்களாக நடந்த பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து யூலை நடுப்பகுதியில் திரு. ராஜபக்சா சிங்கப்பூருக்குத் தப்பியோடினார்.
‘பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் நிலைகுலைந்தது எனினும் கடந்த மூன்று தசாப்தங்கள் அல்லது அதற்கும் மேலாகத் தொடர்ந்துவரும் மோசமான சர்வதேச குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து கட்டமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுவரும் விலக்களிப்பு போக்குடன் இது உண்மையில் தொடர்புபட்டுள்ளது” என itjpஇன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார். ‘வெறுமனே ஊழல் தவறான பொருளாதார முகாமைத்துவம் பற்றியது மட்டுமன்றிஇ பாரிய மோசமான குற்றச்செயல்களுக்கான பொறுப்புக்கூறலும் இதில் உள்ளது என்பதை இக்குற்றவியல் ஆவணம் அடையாளம் கண்டுள்ளது.”
கோட்டாபய ராஜபக்சாவைக் கைதுசெய்து விசாரணை செய்துஇ அவர் மீதான வழக்கினைப் பதிவுசெய்யுமாறு சட்டமா அதிபரிடம் itjp (சர்வதேச உண்மை மற்றும்
நீதிக்கான செயற்றிட்டம் )சமர்ப்பித்துள்ள ஆவணம் வேண்டுகோள் விடுக்கின்றது 1989ஆம் ஆண்டில் இராணுவ கட்டளை அதிகாரியாக ஒரு மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் ஆகக்குறைந்தது 700 மக்கள் காணாமற்போனதில் அவருக்கிருந்த வகிபாகத்தினை இவ்வாவணத்தின் தொடக்கத்தில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2009இல் நாட்டின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக அவர் பதவிவகித்தமை மீதே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டுப்போரின்போது ஜெனீவா ஒப்பந்தங்களின் பாரதூரமான மீறல்களிலும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களிலும் சர்வதேசக் குற்றவியல் சட்டமீறல்களிலும் ஈடுபட்டார் என்றும் இக்குற்றவியல் முறைப்பாடு கூறுகிறது.
கொலை, படுகொலை, சித்திரவதை, மனிதநேயமற்ற நடத்தை, பாலியல் வன்புணர்வு, இதர பாலியல் ரீதியான வன்முறைகள், உரிமைகளைத் தடுத்தல், மோசமான உடல், உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தல், பட்டினி ஆகிய குற்றச்செயல்கள் இதில் உள்ளடங்கும்.
கோட்டாபய வலிந்த தாக்குதல்களுக்குத் தலைமைதாங்குவதற்கு மேஜர் ஜெனரல்களாக தான் நியமித்த தனது இராணுவ சகாக்களுக்கு தொலைபேசி மூலம் நேரடியாக கட்டளைகளை வழங்கினார் என்பதற்கும், தலைமையகத்தில் இருந்தவாறு நேரடியான மேற்பார்வை மற்றும் ஆளில்லா வேவுவிமானக் காட்சிகள் மூலம் சண்டை நடத்தப்படுவதை பார்வையிட்டார் என்பதற்குமான விபரமான ஆதாரங்கள் இவ்வாவணத்தில் இணைக்கப்பட்டுள்ளன. நிலக்கீழ் பதுங்குகுழிகளில் காப்பெடுத்திருந்த பொதுமக்கள் மீதும், உணவுக்காக வரிசைகளில் நின்றிருந்த அல்லது தற்காலிக மருந்து நிலையங்களில் மோசமாக நிலைமைகளில் நிலத்தில் படுக்கையில் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்த மக்கள் மீதும் வேண்டுமென்றும் தொடர்ச்சியாகவும் இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு, அவர்களை கொலை செய்தமை தொடர்பான விபரங்களும் இச்சட்ட ஆவணத்தில் உள்ளன.
2008 செப்ரெம்பரில் உதவிப் பணியாளர்களை போர் வலயத்திலிருந்து வெளியேற்றுவதற்கு கோத்தபாய எவ்வாறு முடிவெடுத்தார் என்பதையும், உலகிடமிருந்து மனித அவலத்தின் மோசமான நிலைமையை மறைப்பதற்கு அது அவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதையும் இவ்வாணம் விளக்கமாகக் கூறியுள்ளது.
போர் வலயத்திலிருந்து உதவிப்பணியாளர்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்கள் கூட சிறிலங்கா விமானப்படையால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன.
இருந்தும் விமானப்படையால் இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடாத்தமுடியும் என்று கோத்தபாய ராஜபக்சாவே பெருமிதம் கொண்டார்;
இலக்குகளைக் கண்காணித்து, ஒவ்வொரு தாக்குதல்களையும் திட்டமிட்டு, ஆய்வுக்குட்படுத்தியே நடாத்தியதாக அவர் கூறினார்.
போர் வலயத்திற்கு மனிதாபிமானப் பொருட்களின் விநியோகங்களை அனுப்புவதற்குரிய அனுமதி வழங்குவதற்கு கோத்தபாய ராஜபக்சாவின் அமைச்சே பொறுப்பாக இருந்தது.
போர் வலயத்திலுள்ள மக்களுக்கு உயிர்காப்பு மருந்துகளும் உணவும் அவசரமாகத் தேவைப்படுகின்றன என மனிதாபிமான அமைப்புக்கள் அவர் அமர்ந்திருந்த பல கூட்டங்களில் எச்சரித்தபோதும், அவற்றை அங்கே அனுப்பி வைப்பதற்கான அனுமதி அவரால் மறுக்கப்பட்டது.
போர் வலயத்தில் பெண்களும் பிள்ளைகளும் பால்மாவுக்காகவும் உணவுக்காகவும் வரிசைகளில் நின்றபோது, ஆளில்லா வேவு விமானங்கள் மேலாகப் பறந்தபின்னர்,
கடுமையான ஆட்லறித் தாக்குதல்கள் திரும்பத் திரும்ப நடாத்தப்பட்ட நிலையில், மோசமான பசி காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கே தாய்பால் கொடுக்கமுடியாத நிலையில் தாம் இருந்ததாக போரிலிருந்து தப்பிய தமிழ்த் தாய்மார்கள் விபரிக்கின்றார்கள். போர்ப் பிரதேசத்திலிருந்த ஒவ்வொரு வைத்தியசாலைகளும், தற்காலிக மருத்துவ நிலையங்களும் 2009 ஆம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் தாக்கப்பட்டன.
இதில் புதுக்குடியிருப்பிலிருந்த மாவட்ட வைத்தியசாலையும் உள்ளடங்கும். பொதுமக்களுக்கான பிரதேசம் என அரசாங்கம் சுயாதீனமாகப் பிரகடனம் செய்த எல்லைக்குள் இவ்வைத்தியசாலை உள்ளடங்கவில்லை என்பதால் அது ஒருசட்டபூர்வமான இலக்கே என நேர்காணலில் கோட்டாபய ராஜபக்சா தெரிவித்திருந்தார்.
ஐ.நா.விசாரணையில் தெரிவிக்கப்பட்டதன்படி, காயமடைந்தவர்கள் நிறைந்திருந்த அவ்வைத்தியசாலை மீது தாக்குதல் நடந்த இரவு 50 இற்கும் மேற்பட்ட எறிகணைகள் அங்கு விழுந்து வெடித்துள்ளன. ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்சா அன்றைய இரவுமுழுதும் நடவடிக்கை கட்டளைமையத்திலேயே இருந்து தாக்குதலை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
‘பொதுமக்களை வேண்டுமென்றே கொலைசெய்தமை, மற்றும் 2009 இல் நடந்த சித்திரவதை, பட்டினிபோடுதல், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட இதர கொடூரமான குற்றச்செயல்கள் என்பவற்றிக்கு கோட்டாபய உடந்தையாக இருந்தார் என்பதையே இவ்வாறான தகவல்கள் வெளிப்படுத்துகின்றன” என சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட இம்முறைப்பாட்டினை வரைவதில் பங்குவகித்த சட்டவாளர்களில் ஒருவரான அலெக்சாட்ரா லில்லி காதர் கூறியுள்ளார்.
‘நடந்த இடம், யாருக்கு எதிராக, அல்லது யாரால் என்பதையெல்லாம் தாண்டி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு கரிசனையை ஏற்படுத்தும் சில குற்றச்செயல்கள்மீது உள்நாட்டிலேயே வழக்குத்தொடர்வதற்கான கடப்பாடு அரசுகளுக்கு உண்டு என்பதையே உலகளாவிய சட்ட அதிகாரவரம்பு என்ற கருத்தியல் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் தனது சொந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டவும், சிறிலங்காவில் பல்வேறு சமூகங்களுக்கு எதிராக கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு மனிதரிடமிருந்து உலகைப் பாதுகாக்கவும் அந்நாட்டுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பே இதுவாகும். தொடர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமேயன்றி, அவர்களுக்கு விசா வழங்கப்படகூடாது” என அவர் மேலும் கூறினார்.
2019 ஆம் ஆண்டில், சித்திரவதைக்கு உள்ளாகிய 11 பேர் கலிபோர்னியாவில் கோத்தபாயவுக்கு எதிராக பொதுவழக்கு ஒன்றினைப் பதிவுசெய்வதற்கு சர்வதேச சட்ட அமைப்பான hausfeld LLP உடன் இணைந்து ITJP உதவி செய்திருந்தது.
ஆனால் 2019 இல் அவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டபோது இவ்வழக்குப் பின்வாங்கப்பட்டதுடன், அரசுத்தலைவர் என்ற ரீதியில் அவர் சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்களிப்புப் பெற்றார்.
அவர் தற்போது தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளமையால், அவ்விலக்களிப்பும் செல்லுபடியற்றதாகின்றது. இதுவே அவருக்கெதிரான முதலாவது குற்றவியல் முறைப்பாடாக உள்ளது என நம்பப்படுகின்றது.
2009 மே மாதம் போரின் இறுதி நாள்களின்போது, கோட்டாபய ராஜபக்சா தேசிய பாதுகாப்பு மாநாட்டைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். எறிகணைத் தாக்குதலை நிறுத்தி, உணவுப்பொருட்களை அனுப்புமாறு அமெரிக்கா தூதுவர் அவருக்கு வேண்டுகோள்களை விடுத்தார், ஆனால் அவர் அதற்கு உண்மையில் செவிசாய்க்கவில்லை. விரைவுபடுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோத்தபாய ராஜபக்சா தங்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைத்துக்கூறியதாக களமுனையில் செயற்பட்ட இராணுவத் தளபதிகள் போர் முடிவின் நேரத்தில் தெரிவித்தார்கள்.
இந்த நேரத்தில்தான், சரணடைய முற்பட்ட நிராயுதபாணியிலிருந்த காயப்பட்ட போராளிகளையும், பொதுமக்களையும் படையினர் கண்டபடி படுகொலை செய்ததை தாம் கண்டதாக பல சாட்சிகள் விபரித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வெள்ளைக்கொடியுடன் சரணடையும் திட்டத்தினை கோட்டாபய ராஜபக்சாவும் அவருடைய சகோதரர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தற்போது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருக்கும் சவேந்திர சில்வாவே அவர்கள் சரணடைந்த நேரத்தில் அங்கு பொறுப்பாக இருந்ததாகவும், சரணடைந்த நேரத்தில் அவர்களை நேரில்சென்று கைகொடுத்து வரவேற்றதாகவும், ஆனால் சிறிது நேரத்தில் இராணுவத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
தமிழ் அரசியல் தலைவர்களைப் படுகொலைசெய்யுமாறு சவேந்திர சில்வாவிற்கு கோத்தபாய ராஜபக்சாவே நேரடியாக கட்டளை வழங்கியதாக சிறிலங்காவில் முன்னாள் இராணுவத் தளபதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களில் ஒன்றான பரணகம ஆணைக்குழு இந்த சரணடைதல் தொடர்பாக சட்டவிசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் 13 வருடங்கள் கடந்தும் அப்படி எதுவுமே நடைபெறவில்லை.
உயிர்தப்பியவர்கள், மற்றும் இராணுவத்திலுள்ளவர்கள் ஆகியவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் மட்டுமன்றி, போரின் முடிவில் படைவீரர்களால் எடுக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுடைய பாலியல் அவையவங்கள் சிதைக்கப்பட்டுள்ள சடலங்களைக் காட்டும் பயங்கரமான புகைப்படங்களும் இவ்வாவணத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இவை, அவர்கள் கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் பாலியல்வன்புணர்வுகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான நியாயமான சந்தேகத்தை எழுப்புகின்றன.
சிங்கப்பூர் எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரட்ணம் அவர்கள் கோட்டாபய ராஜபக்சா சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுச் சுமத்தப்படுவதற்காக முயற்சியினை வரவேற்றுள்ளார்:
‘சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு, சிறிலங்கா மக்களுக்கு, தங்கள் உறவினர்களை இழந்துள்ள அல்லது போர் காரணமாக சிறிலங்காவை விட்டு தப்பி, வெளியேறவேண்டியிருந்த, அல்லது தங்கள்
சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள பரந்துபட்ட சமூகத்திற்கே இது ஒரு அவமானகரமானதும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புமே ஆகும்.
என்னுடைய சொந்தக் குடும்பமுமே போரினால் பாதிக்கப்பட்டது, என்னுடைய உறவினர் ஒருவருடைய கணவர் அவர் கண்முன்னாலேயே வெட்டிக்கொல்லப்பட்டார்.
ராஜபக்சாக்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கும், சிங்கப்பூர் தன் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சர்வதேச சமூகம் தற்போது அதிகபட்ச அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டும்.
கோத்தபாயவும் அவருடைய சகோதரரும் போர்க் குற்றவாளிகளாகவும் இனப்படுகொலையாளர்களாகவும் விசாரணைகூண்டில் நிறுத்தப்படவேண்டும். அவர்களுக்கும் புட்டினுக்கும் அல்லது அசாத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.