சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்’ என்பது முஸ்லிம் அரசியல் தலைவர்கள்; எல்லாக் காலத்திலும் உச்சாடனம் செய்கின்ற தாரக மந்திரமாகும்.

‘செய்ய முடியாத காரியங்களை செய்துகாட்டும் கலைதான் அரசியல்’ என்றும் அவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

வாய் வார்த்தைகள் எல்லாம் சரிதான். ஆனால் நிஜத்தில் கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் எந்த முஸ்லிம் கட்சி, தலைவர் அல்லது பாhரளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர், ஆளுநர் இதனைச் செயலில் நடைமுறைப்படுத்திக் காட்டிருக்கின்றார்கள்? என்பதுதான் இங்குள்ள மில்லியன் டொலர் கேள்வியாகும்.

பெருந்தேசியக் கட்சிகளுக்கு மாறிமாறி முட்டுக்கொடுத்ததையும், அதிலிருந்து கிடைக்கின்ற பணத்தை, பதவியை, கைமாறுகளை சுகித்ததையும் தவிர முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கின்றார்கள்? எந்த அபிலாசையை நிறைவேற்றியிருக்கின்றார்கள்?

சமூகம் எதிர்கொண்டுள்ள இனவாத நெருக்கடிகளை கவனமாக கையாள்வது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களின்  நீண்டகால காணிப் பிரச்சினைகள், இருப்பு பற்றிய நெருக்கடிகள், இன விகிதாசார ஒதுக்கீட்டில் நடக்கின்ற அநியாயங்கள், உரிமை மறுப்புக்களை எத்தனை எம்.பி.க்கள் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்?

கடந்த 5 பாராளுமன்ற ஆட்சிக் காலங்களில் எம்.பி.க்களாக, அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு மாகாண சபை முதலமைச்சர்களாக பதவி வகித்த இருமுஸ்லிம்கள்;, ஆளுநர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் யாராவது தற்போதுவரை முஸ்லிம் சமூகத்தின் மேற்குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து சாதனை படைத்த வரலாறு உண்டா?

89வயதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இந்த தள்ளாத வயதிலும் இருக்கின்ற நெஞ்சுரமும், சமூக அக்கறையும் 60வயதான முஸ்லிம் தலைவர்களிடமும், 38 தொடக்கம் 55 வயதிற்கிடைப்பட்ட எம்.பி.க்களுக்கும் அரைவாசியளவுக்குக்கூட இருப்பதாக தெரியவில்லை. யாருக்கு கோபம் வந்தாலும் இதுதான் நிதர்சனமாகும்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா முன்னாள் முஸ்லிம் முதலமைச்சர்கள், முன்னாள் முஸ்லிம் ஆளுநர்கள் உள்ளடங்கலாக கடந்த 30வருடங்களில் எம்.பி.க்களாக பதவி வகித்த, இப்போது பதவிவகிக்கின்ற எல்லோரும் விடைதேட வேண்டிய கேள்விதான் இது.

ஆகவே, ராஜபக்சக்கள், ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச போன்றோர் மக்கள் சார்பு அரசியல் தோல்வியடைந்திருக்கின்றார்கள் என்று கூறுவோமானால், உண்மையில், இதற்கெல்லாம் பல வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘பெயிலாக’ தொடங்கி விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

இலங்கையின் தேசிய அரசியலில் அதேகுட்டையில் ஊறிய  தலைவர்களே மாறிமாறி ஆட்சிபீடம் ஏற்றப்படுவதைப் போல, முஸ்லிம் மக்களும் தொடர்ச்சியாக தங்களால் விமர்சிக்கப்பட்ட, பொருத்தமற்ற  அரசியல்வாதிகளையோ அல்லது அவர்களை விடவும் மோசமானவர்களையோ தான் திரும்பத்திரும்ப தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த வகையில், முஸ்லிம் சமூகமும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒருவர் அல்லது இருவரிடம்தான் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய ஆவணப்படுத்தல் உள்ளது.

ஆயினும் தற்போது அதிகாரத்தில் உள்ள எம்.பி.க்களிடம் இவ்வாறான ஆவணங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அதேபோன்று, மக்களது குறைகளை, தேவைகளைக் கேட்டறிவதற்கான எந்த பொறிமுறையும் இல்லை. வெறும் ஏமாற்றத்துடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு பொதுமகன் தமது மக்கள் பிரதிநிதியை நேரடியாகவோ, தொலைபேசியிலோ தொடர்புகொள்வதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை.

‘இந்த முஸ்லிம் எம்.பியை இந்த திகதியில் இந்த இடத்தில் மக்கள் வந்து சந்திக்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டதாக ஞாபகமே இல்லை. ஆனால் சிங்களவர், தமிழர் அரசியலில் இந்த நடைமுறை கொஞ்சமாவது உள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு நல்ல, ஆரோக்கியமான ‘அழுத்தக் குழு’ கட்டமைக்கப்படவில்லை.

அந்தப்பெயருடன் வந்தவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு அரசியல் அணிக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டார்கள்.

மறுபுறத்தில், பள்ளிவாசல்களோ, புத்திஜீவிகளோ, பல்கலைக்கழக சமூகமோ முஸ்லிம் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்பதும் இல்லை.

சில அரசியல்வாதிகள் தம்மைச் சுற்றி ஒரு வட்டத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் குறித்த தலைவரை, எம்.பியை வெளியில் இருந்து வரும் பொதுமக்கள் யாரும் சந்திக்க விடாதபடி ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டிருப்பார்கள்.

இது எங்கே தாக்கம் செலுத்தும் என்பதை முன்னுணராத அந்த அரசியல்வாதியும் அந்த சுய சிறைக்குள் இருப்பார்.

முன்னொரு காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்முடன் ஆளுமையான, துறைசார்ந்த நபர்களை வைத்திருந்தார்கள்.

நாமறிந்த காலத்தில் அரப் இதற்கு நல்ல உதாரணமாகக் கொள்ளப்படக் கூடியவர்;. ஆனால், இப்போதெல்லாம், பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்முடன் ஒன்றுமறியா, சிறுபிள்ளைத்தனமான,  இளைஞர்களைத்தான் தம்கூட வைத்திருக்கின்றார்கள்.

உதாரணமாக அவ்வாறானவர்கள் துடிப்புடன் இருப்பார்கள், பெரிய எதிர்பார்ப்புக்கள், சமூக பிரக்ஞையின்றி, சொன்னதை சொன்னபடி செய்வார்கள்;. தலைவர் சொன்னால் ‘ஆமா சாமி’ போடுவார்களே தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்கள்.

ஆனால். வயதில் மூத்த, பக்குவமான, அறிவாளியான ஒருவரை இவ்வாறு கையாள முடியாது. அவருக்கு உரிய அந்தஸ்து, சிலவேளை சம்பளம் கொடுக்க வேண்டும். இவ்வாறான சுயமாக சிந்திக்கும் யாரையும் தன்னுடன் வைத்திருந்தால் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்பார், அறிவுரை சொல்ல முற்படுவார். இது அந்த அரசியல்வாதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

எனவேதான், இப்போது முஸ்லிம் எம்.பிக்கள் பொதுவில் ஒரு இளைஞர் கூட்டத்தை தம்முடன் வைத்திருக்கின்றார்கள்.

இவர்களில் சிலருக்கு இன்னும் வாக்குரிமை கூட வந்திருக்காது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர் என்றால், இப்போதிருக்கின்ற அரசியல் தலைவர்களைத்தான் ‘மிகப் பெரிய தலைமைத்துவ முன்னோடி’, ‘சமூகத்தின் காவலன்’ என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதுவும் குறித்த அரசியல்வாதிக்கு சாதகமானதே.

இந்த வகைக்குள் அடங்கும் ஒரு கூட்டமே முகநூல் போராளிகள் என்ற வகையறாவாகும். குறித்த அரசியல்வாதியைச் சூழ இருப்பவர்களுள் சிலரும் தொலைவிலிருந்து வேறு சிலரும் இப்படியாகச் செயற்படுகின்றர்கள்.

அரசியலும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் இங்கிதமும் இல்லாமல் இவர்கள் சில வேளைகளில் போடுகின்ற கூத்து முகத்தை சுழிக்க வைக்கின்றது.

முன்னைய காலங்களில் அரசியல்வாதிகளுடன் ஒரு அடியாள் கூட்டமும் அடிவாங்குவதற்கு சிலரும் இருந்தார்கள். அதுதான் முகநூலில் வேறுபரிமாணம் எடுத்திருக்கின்றது.

எங்களது தலைவர் எது செய்தாலும் சரி, எம்.பியின் முடிவு முற்றுமுழுதாக சமூகத்திற்காக எடுக்கப்பட்டது என்று தாங்கள் நம்புவது மட்டுமன்றி அதனை நியாயப்படுத்துவதற்காக, தலைவரின் மானமும் போவது கூட தெரியாமல், முகநூலில் வாதம் நடத்துகின்ற பலர் உருவாகியுள்ளனர்.

தேர்தல் காலத்தில், அரச தொலைக்காட்சியானது வாக்குகள் எண்ணப்படும் வரைக்கும்; ஆட்சியில் இருப்பவர்களின் புகழைப் பாடிவிட்டு, நள்ளிரவுக்குப் பிறகு வெற்றியடையும் வேட்பாளரின் புகழை பாடத்தொடங்கும்;.

அதுபோலதான் இந்த முகநூல் போராளிகளும். தான்சார்ந்த எம்.பி. முடிவை மாற்றியதும் மறுகணமே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.

இது ‘தொப்பி அளவான’ எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொதுவானதே. கடந்த காலங்களில் சட்டமூலங்களுக்கு வாக்களித்தது தொடக்கம் இந்த ஜனாதிபதி தெரிவுவரை அதை நாம் கண்டோம்.

தேசிய அரசியலிலும் சரி, முஸ்லிம் அரசியலிலும் சரி அரசியல்வாதி ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள்தான் பிரதானமாக தீர்மானிக்கின்றார்கள். இதனை பலமுறை சொல்லியாயிற்று.

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் தாம் பதவியிழந்து, அதிகாரமிழந்து சாய்மனையில் ஒய்வெடுக்கும் போதுதான் இதனை புரிந்து கொள்வார்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Share.
Leave A Reply