முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர்,  வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றம்  விதித்த  இடைக்கால தடை  எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

இதனைவிட பிரதிவாதிகளான   மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலர் எஸ். ஆர். ஆட்டிகல  ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லப் போவதில்லை என நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ள நிலையில், அந்த உறுதிப்பாடும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, , விஜித் மலல்கொட மற்றும்  எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று முற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது இவ்வாரு பயணத் தடை நீடிக்கப்பட்டது.

மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டிருந்தனர்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதிவாதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக  பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும்ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவும் ஆஜராகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply