தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உல்ள கந்திலி பகுதியில் இருந்த கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணின் தாத்தா தன்னை அடித்ததால் அவருடைய பேத்தியை கொன்றதாக, அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த செல்ரப்பட்டி ஊராட்சி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் கடந்த ஜூலை 23ஆம் தேதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் சடலத்தை மீட்ட கந்திலி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தற்கொலையா? கொலையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தது.

ஒற்றை செருப்பில் தொடங்கிய விசாரணை

மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் காலில் அணிந்திருந்த ஒற்றை செருப்பை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக காணாமல் போன நபர்களின் பட்டியல் குறித்து விசாரிக்கும் போது, சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண் செல்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் சந்தோஷ் பிரியா என்பது தெரியவந்தது.

பெண் சடலம் மீட்பு

சந்தோஷ் பிரியா கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போய் உள்ளார். பல்வேறு இடங்களில் அவரை தேடிய அவரது பெற்றோர் மகள் குறித்து எந்த விதமான தகவலும் கிடைக்காததால் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காணாமல் போன இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசுத் தேர்வு எழுத முயற்சி

பட்டதாரியான சந்தோஷ் பிரியா தனியார் கல்வி நிறுவனத்தில் குரூப் 4 அரசு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கல்வி நிறுவனத்திற்கு சென்ற சந்தோஷ் பிரியா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வீடு திரும்பவில்லை.

சந்தோஷ் பிரியா

காட்டிக் கொடுத்த செல்போன்

போலீசார் இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு வந்ததில் கொலை செய்யப்பட்ட சந்தோஷ் பிரியாவின் செல்போன் ஐஎம்இஐ எண்ணை வைத்து, அவரது செல்பேசியை வேறு ஒரு நபர் உபயோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் செல்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் தன்னிடம் சில ஆயிரம் ரூபாய்க்கு இந்த செல்போனை விற்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து கந்திலி போலீசார் செல்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (25) என்பவரை தேடினர். இதை அறிந்து எலவம்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரண் அடைந்துள்ளார். பிறகு அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவின் தாத்தாவான சீனன் தன்னை ஊர் மக்கள் முன்பு அடித்து அவமானப்படுத்தியதன் காரணமாக தற்போது சந்தோஷ் பிரியாவை கொலை செய்ததாக மகேந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரன்

இந்த விவகாரத்தில் மகேந்திரன் கூறியதாக போலீஸார் தரப்பில் கூறிய தகவல்கள் வருமாறு:

“மகேந்திரன் நான்கு வருடங்களுக்கும் மேலாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை எனது விருப்பத்தை சொல்லியும் சந்தோஷ் பிரியா அவரை மதிக்கவில்லை.

இந்த நிலையில், சந்தோஷ் பிரியா வீட்டில் தனியே குளித்துக் கொண்டிருக்கும்போது அவரது உள்ளாடைகளை திருடியுள்ளார் மகேந்திரன்.

அதை சந்தோஷ் பிரியாவின் தாத்தா மற்றும் உறவினர்கள் பார்த்துவிட்டு அவரை கடுமையாக திட்டியும் அடித்துயும் அவமானப்படுத்தி ஊரை விட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் வேறு மாநிலத்திற்கு சென்று வேலை செய்ததாக மகேந்திரன் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

“சந்தேகம் வரவில்லை’

இந்த நிலையில், பல வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்து துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் மகேந்திரன்.

அப்போது மீண்டும் சந்தோஷ் பிரியாவை அவர் பார்த்தபோது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவரை அமரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

அதன் காரணமாக அவரை சந்தோஷ் பிரியா கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

பிறகு சந்தோஷ் பிரியாவின் உடலை ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டதாகவும் ஒரு மாதம் கடந்த நிலையில் யாருக்கும் சந்தேகமும் வராததால் வழக்கம் போல மகேந்திரன் வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால், கிணற்றிலிருந்து சந்தோஷ் பிரியாவின் உடலை மீட்ட பிறகு அவரது செல்பேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவருக்கும் சந்தோஷ் பிரியாவுக்கும் இருந்த பிரச்னை தெரிய வந்தததால் அவரை கைது செய்துள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கந்திலி போலீசார் மகேந்திரன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்ற அனுமதியுடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Share.
Leave A Reply