சர்வதேச பிடியாணை ( சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டிருந்த,  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ராசநாயகம் தவனேசன்,  எனும்  48 வயதான குறித்த சந்தேக நபர், அபுதாபி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அபுதாபி சென்ற சி.ரி.ஐ.டி. எனப்படும்  பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால்  நேற்று  (11) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் குறித்த சந்தேக நபர் பிரதானமானவர் என கூறும் பொலிஸார், இறுதி யுத்த காலப்பகுதியில் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பட்டியலில் அவர் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபரிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share.
Leave A Reply