அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி.

இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? அமெரிக்காவின் சபாநாயகர் பதவியில் இருக்கின்ற நான்சி பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயம்.அவை எல்லாம் ஓகே. அது பற்றி எந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.

அவர் அந்தப் பயணத்தில் தைவானுக்கும் போய் கால்பதிக்க இருக்கின்றார் என்ற தகவல் கசிந்த போது கொதித்துப் போனது சீனா.

இந்த விடயத்தில் ஏன் சீனா கொதித்தப் போனது.அவர் அப்படி அங்கு போய் இறங்கினால் பெரும் அழிவுதான்.அமெரிக்கா நெருப்புடன் விளையாட நினைக்கக் கூடாது.

இது வெறும் வார்த்தைகள் மட்டும் என்று எண்ணிவிட வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்தது.அதற்கும் மேலாக சீன அதிபர் சீ சின்பிங் அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு உத்தியோகபூர்வமான கடிதத்தை எழுதி இந்த வேலையை மட்டும் செய்து எமது பொறுமையை சோதித்து விடாதீர்கள் என்றும் எச்சரித்திருந்தார்.

அந்த எந்தக் கதையையும் காதில் போட்டுக் கொள்ளாது கடந்த செவ்வாய் தைவானில் போய் இறங்கினார் நான்சி.

அவர் வருகின்ற விமானத்துக்கு என்ன நடக்கப் போகின்றது என பல மில்லியன் கணக்கானவர்கள் லைவில் கண்காணித்துக் கொண்டும் இருந்தார்கள்.

நான்சி ஏன் தைவான் போகக் கூடாது என்று ஆராய்வதாக இருந்தால், நாம் சுருக்கமாக சீனாவின் வரலாற்றை சற்றுப் பார்க்க வேண்டும்.

இன்று சீனாவின் பெரும் நிலப்பரப்பான பூமியை தேசியவாதிகள் என்ற குழு அன்று ஆண்டு வந்தார்கள்.

மாவோ சேதுங்கின் சீனச் செம்படை அந்த அரசினை விரட்டி விட்டு நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போது, தேசியவாதிகள் சீனாவில் இருந்து 158 கிலோ மீற்றர்கள் தள்ளி பக்கத்தில் இருந்த தைவான் என்ற தீவில் போய் அங்கு 1949 திசம்பர் 7ம் திகதி புதிய அரசை நிறுவிக் கொண்டார்கள்.

 

1970 வரையும் அந்த அரசைத்தான் ஐ.நா. சபையும் அப்போது அங்கீகரித்திருந்தது.

இப்போது அந்த அங்கீகாரத்தை சீனா பெற்றுக் கொண்டு ஐ.நா.வில் வீட்டோ அதிகாரத்தைக் கூட வைத்திருக்கின்றது.ஆனாலும் இன்றும் 16 வரையிலான நாடுகள் தைவானை தனி நாடாக அங்கீகரித்திருக்கின்றன.

இதனை சீனா ஏற்றுக் கொள்வதில்லை.இது தங்கள் நாட்டில் ஒரு பகுதி என்று அது உரிமை கோரி நிற்கின்றது.அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அங்கு போகும் போது அது தைவானுக்கு வழங்குகின்ற அங்கீகாரமாகிவிடும்.இதற்கு இடம் கொடுக்க சீனா தயாராக இல்லை.இதுதான் கதை.

இப்போது தைவான் பற்றி மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.நிலப்பரப்பு 35,980 சதுர கிலோ மீற்றர்கள்.மக்கள் தொகை 2 கோடி 23 இலட்சம். தலைநகர் தைபே. பணம் தைவான் டொலர். தற்போதய ஜனாதிபதி ச்சென் சுயி சுபியான்.

சீனாவுடன் ஒப்பு நோக்குகின்ற போது இமயமலைக்கும் இங்கே இருக்கின்ற சீகிரியக் குன்றுக்கு உள்ள வித்தியாசம் என்று இதனை கணக்குப் போடலாம். படைப் பலமும் அப்படித்தான்.

எனவே சீனாவுடன் பலப் பரீட்சையில் தைவான் ஒரு சில நாட்கள் ஏனும் தாக்குப் பிடிக்க இயலாது என்பது யதார்த்தம்.ஆனாலும் அமெரிக்க மற்றும் சில நாடுகளான தென் கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.எனவே அவர்களை நம்பித்தான் தைவான் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

இப்போது மீண்டும் நான்சி பெலோசி கதைக்கு திரும்புவோம்.அவர் 1940களில் பிறந்தவர்.

தற்போது வயது 82. இந்த வயதில் ஒரு வரலாற்றை பதித்து விட்டுப் போவோம்.சொல்கின்ற படி சீனா தன்னை கொன்றுபோட்டாலும் தான் வரலாற்றில் ஹீரோவாகி விடுவேன் என்று அவர் கணக்குப் பார்த்தாரோ என்னவோ தெரியாது.

எப்படியோ தைவானில் போய் அவர் இன்று ஹீரோவாகி இருக்கின்றார் என்பது மட்டும் உண்மை.ஆனால் இந்த நடவடிக்கையால் சீனா தனது பொறுமையில் எல்லையைக் கடந்து நிற்கின்றது.

இன்று அமெரிக்காவுக்கு சவாலாக சீனா தன்னை பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் வளர்த்துக் கொண்டு விட்டது.

உலகில் பல இடங்களில் அது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியும் வருகின்றது.அத்துடன் உலக நாடுகளும் சீனா விடயத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.

எந்த வினாடியும் நான்சி விமானம் சீனா ஏவுகணையால் வீழ்த்தப்படும் என்று எதிர்பார்த்தவர்களும் இருந்தார்கள்.

சீனாவும் அப்படித் தான் ஒரு கதையை பகிரங்கமாக பரப்பிக் கொண்டிருந்தது.இப்போது அவர் பாதுகாப்பாக தைவான் வந்து போய் விட்டார்.

முழு உலகமுமே சீனாவை ஏளனமாக பார்த்து சிரிக்கின்றது.இது சீனாவுக்கும் நன்றாகப் புரிகின்றது.அதனால் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சீன ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

இதேபோன்று அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் நம்பி உக்ரைன் இன்று ரஷ்யாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றது.

எல்லையில் நட்பு நாடுகள் இருந்தாலும் அவர்களினால் நேரடியாக களத்துக்கு வர முடியாத ஒரு நிலை அங்கு.

தைவான் கதை வேறு.எங்கோ இருக்கின்ற அமெரிக்காவை நம்பித்தான் தைவான் வீரம் காட்டிக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் போர்க் கப்பல்களும் விமானங்களும் பிராந்தியத்தில் இருந்தாலும் சீனாவுடன் மோதுவது இலகுவான காரியமாக இருக்கமாட்டது.அப்படியானால் ஏன் ஐரோப்பாவில் மறைமுகமான ஒரு போரில் இருக்கின்ற அமெரிக்காமேற்கு நாடுகள், இந்த நேரத்தில் சீனாவை சீண்டிப் பார்க்க வேண்டும்?

நமது பார்வையில் உக்ரைன் போர் மூலம் ரஷ்யாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைக்கின்ற யுத்தியைத்தான் அமெரிக்கா அங்கே செய்து கொண்டிருக்கின்றது என்பது எமது கணக்கு.அதேபோன்று சீனாவை மட்டம் தட்டுகின்ற ஒரு முயற்சியாகத்தான் இந்த ஏற்பாடும் இருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

உலக ஆதிக்கத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் நம்பர் வன் இடத்தை பாதுகாப்பதானால் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் ஒரு பலமான இராணுவக் கூட்டை உருவாக்க முனைகின்றது. சில நடவடிக்கைகளை அது இது விடயத்தில் எடுத்தும் இருக்கின்றது.

நான்சி தைவானில் போய் இறங்கி பாதுகாப்பாக போய்ச் சேர்ந்தது உலக அரங்கில் அமெரிக்காவுக்கு நல்ல பிளஸ் பொயிண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது சீனாவுக்கு பெருத்த அவமானம், தலைகுனிவு என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. நமது நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் நையாண்டி பண்ணுவது போல முழு உலகமுமே சீனாவை கோழையாகத்தான் இன்று சித்தரித்துக் கொண்டிருக்கின்றது.அதில் தவறுகளும் இருக்கமாட்டாது.

இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னரும் இதுபோன்ற ஒரு நிலை இருந்தது.ஆனால் அன்று இந்தளவுக்கு சீனா பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பலமாக இருக்கவில்லை.

ஆனால் இன்று அப்படி இல்லை.சீனா கணிசமான அளவுக்கு வளர்ந்து விட்டது.நாம் முன்பு சொன்னது போன்று இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா ஒரு முட்டுக்கட்டை போட முனைகின்றது.

அதேபோன்று, சீனாவை வம்புக்கிழுத்து ஏதாவது நவீன ஆயுதங்களை அது வைத்திருந்தால் அதனை வெளியில் எடுக்கின்ற ஒரு முயற்சியாகவும் இது இருக்கலாம்.

தற்காலத்து போர்த் தந்திரங்கள் அப்படித்தான் இருக்கின்றது.உக்ரைனில் நடப்பதும் அமெரிக்காவின் தேவைக்கான ஒரு போராகும் இதன் பின்னணியிலும் இதே கதைகள்தான் இருக்கின்றன.

சீனா நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்திருந்த வேளை அமெரிக்கா நான்சியை வைத்து அந்த ஆட்டத்தில் இதுவரை பைடன் நிருவாகம் வெற்றி பெற்றுவிட்டது.

என்னதான் தைவான் ஆகாயப் பரப்பிலும் கடல் எல்லையிலும் போய் தனது ஆயுத பலத்தை சீனா தைவானுக்கு காட்டினாலும் அந்த அவமானத்தில் இருந்து அது விடுபட முடியாது.

ட்ரம்ப் அமெரிக்காவை ஒரு வம்பன் போல் ஆட்சி செய்து வந்ததால் அவர் ஈரான், வட கொரிய போன்ற நாடுகளைத்தான் அடிக்கடி சண்டைக்கு இழுத்துக் கொண்டு இருந்தார்.

ஒரு நேரத்தில் அவர் வடகொரிய அதிபரை நல்ல நண்பன் என்றும் வர்ணித்து வந்தார்.

அத்துடன் மத்திய கிழக்கில்தான் அவர் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.ஆனால் தற்போதய அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் இந்த நாடுகளை விட ரஷ்யாவும் சீனாவும்தான் தனது உலக வல்லாதிக்கத்துக்கு சவால்.

அதனை மட்டம் தட்டி வைத்தால் மட்டுமே அமெரிக்கா உலகில் தொடர்ந்தும் முதல்தர வல்லரசாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கருதுகின்றது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் இராணு முதன்மை ஸ்தானத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் தற்போது பைடன் கடுமையாக இறங்கி இருக்கின்றார்.

எனவே அவர் மத்திய கிழக்கு விவகாரங்களில் பெரியளவில் அக்கறை எடுத்துக் கொள்ளாதிருக்கின்றார்.

இது இஸ்ரேலுக்கு திருப்தி இல்லாத நிலையாக இருக்கின்றது.சீனா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகின்ற போது ஈரான் தனக்குப் பெரிய சவால் கிடையாது.

தேவைப்படும் போது அதனை தனக்கு மட்டம் தட்டி விடலாம் என்பதுதான் பைடன் நிருவாகத்தின் எண்ணமாக இருக்கின்றது.

இதனால்தான் ஈரான் அணு விவகாரத்தில் அவர் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை என்று நிற்கின்றார்.

இதனை இஸ்ரேல் எதிர்க்கின்றது.பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்பை தான் பாதுகாத்துக் கொள்வதாக பைடன் அவர்களுக்கு உறுதி கூறி இருந்தாலும் அதில் இஸ்ரேலுக்கு நம்பிக்கை இல்லை.

அது சொந்தக் காலில் நிற்க முனைவதனால் ஈரான் அணு உலைகளை தாக்கியும் வருகின்றது.

உக்ரைனில் சண்டையைத் துவங்கி விட்டு இப்போது அமெரிக்கா தைவான் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு வருகின்றது.

கடந்த 4 ம் திகதி முதல் சீனா தைவானைச் சுற்றி வம்புக்கு இராணுவ ஒத்திகைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது.

இதனால் எந்த இடத்தில் என்ன நடக்குமோ என்ற நிலை.இது வரை அமைதியாக வாழ்ந்த தைவான் மக்கள் இந்த விவகாரத்தால் தற்போது பெரும் அச்சத்துடனே அங்கு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளை தைவானும் ஒரு உக்ரைனாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.மேலும் சீனா தைவானுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றது.

உலக கைத்தொலைபேசி தொழிநுட்பத்தில் தைவான் முதல் இடத்தில் இருக்கின்றது.இது உலக ஆதிக்கப் போட்டியில் சிறிய நாடுகளை பலிக்கடாக்களாக்குகின்ற அமெரிக்காவின் வழக்கமான நடவடிக்கைவிளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாக சீனா அடுத்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாக இராணுவ ரீதியில் தலையிடுவதில்லை.

ஆனால் அமெரிக்கா எந்த இடத்தில் எப்போது போய் நுழைந்து கொள்ள முடியும் என்று சந்தர்ப்பம் பார்த்து செயலாற்றுவது அனைவரும் அறிந்த விவகாரமே.

எதற்கும் பயப்படாதீர்கள் நாங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டோம் என்று வேறு நான்சி தைவான் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டும் போய் இருக்கின்றார். தைவான் ஆட்சியாளர்கள் நான்சி வரவால் பெரும் சந்தோஷத்தில் இருக்கின்றார்கள். இது தமக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதுதான் அவர்கள் கருத்தாக இருக்கின்றது. உக்ரைன் போரால் உலகப் பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் தைவானிலும் நெருக்கடி என்றால் நிலமை எப்படி இருக்கும். குறிப்பாக நமக்கு உதவுகின்ற முக்கியமான ஒரு நாடு சீனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply