அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தகராறில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவாக வந்துள்ளது.
ஜூன் 23 பொதுக்குழுவில்தான் தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத்தலைவராக்கும் தீர்மானம் நிறைவேறியது.
அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் அவர் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கும் என்று அறிவித்தார்.
அந்த இரண்டாவது பொதுக்குழுவில்தான் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் எடப்பாடி அணி இந்த இரண்டாவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது.
அதிமுகவில் நடந்த மொத்த தலைமை மாற்றக் குழுப்பங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது ஜூன் 23 பொதுக்குழுதான்.
அது நடந்ததே செல்லாது என்று கூறத்தக்க வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு அதற்குப் பிறகு நடந்த எல்லா மாற்றங்களையும் இல்லாமல் செய்யும் வகையில் இருக்கும் என்று தோன்றுகிறது.
பின்னணி என்ன?
ஜுன் 23ம் தேதி பொதுக்குழுவில் சர்ச்சைக்குரிய முறையில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்பாடுகளை செய்து வந்தது.
இதற்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவும் ஓ. பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு சிறிது நேரம் முன்னதாக வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பில் பொதுக் குழுவை நடத்த அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம். ஆனால், வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
ஜூலை 11 பொதுக் குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.
அதிமுக பொதுக்குழு
இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார். அவர் முன்பாக இருதரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்து வந்தனர்.
இந்தப் பொதுக் குழுக் கூட்டம் விதிகளின்படி நடத்தப்படவில்லையெனவும் பொதுக் குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் ஆனால், இந்த பொதுக் குழுக் கூட்டம் தலைமை நிலைய நிர்வாகிகளால் கூட்டப்பட்டதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது.
வெடி வெடித்து கொண்டாட்டம்
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் வழக்குரைஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். விதிப்படியே பொதுக் குழு கூட்டப்பட்டதாகவும் ஜூலை 11ல் பொதுக் குழு கூட்டப்படும் என ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஜூலை 1ஆம் தேதி பொதுக் குழு நிர்வாகிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது என்றும் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டதால் கூட்டப்படும் கூட்டங்களுக்கு 15 நாள் முன்னறிவிப்பு அவசியமில்லை என்றும் அவர் வாதிட்டார்.
2,400க்கும் மேற்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாலேயே சிறப்பு பொதுக் குழுவை நிர்வாகிகள் கூட்டினர். இதில் விதிமீறல் ஏதுமில்லை என அவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பின்படி, அ.இ.அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருமே இணைந்துதான் கூட்டவேண்டுமென்றும் சட்ட ஆணையர் ஒருவரை நியமித்து இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது தீர்ப்பின் ஒரு பகுதி மட்டுமே வெளியாகியிருப்பதால், சட்ட ஆணையரை யார் நியமிப்பது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முழு தீர்ப்பும் இன்று மாலை வெளியாகும்போது, இதில் ஒரு தெளிவு கிடைக்கும்.
தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், “இது எங்கள் தரப்புக்குக் கிடைத்த வெற்றி. கழகத்தின் சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி.
ஜூன் 23ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை.
இரண்டு பதவிகளுமே செயல்பாட்டில் உள்ளன. மேலும், அந்தக் கூட்டத்தில் எவ்வித திருத்தமும் முன்வைக்கப்படவில்லை, நிராகரிக்கப்படவும் இல்லை. கட்சியை ஒருங்கிணைப்பாளர்தான் வழிநடத்த முடியும் என ஒருங்கிணைப்பாளர் எடுத்துவைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தீர்ப்பு எடப்பாடி கே. பழனிசாமிக்கு எப்படிப் பின்னடைவு?
சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, மீண்டும் சேர்ந்த பிறகு, ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியைத் தன்வசம் கொண்டுவர விரும்பிய எடப்பாடி கே. பழனிசாமி, ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில், அது குறித்த தீர்மானத்தைக் கொண்டுவர விரும்பினார்.
ஆனால், இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அந்தக் கூட்டத்திலிருந்து அவர் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டா். இதற்குப் பிறகு மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளாத இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில், எடப்பாடி கே. பழனிசாமி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்படுவதாகவும் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வுசெய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.கவின் விதிகளின்படி, தொண்டர்களேதான் நேரடியாகத் தலைவர்களைத் தேர்வுசெய்ய வேண்டுமென்பதால், விரைவில் அதற்கான தேர்தல் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அந்தப் பொதுக் குழு நடந்த தினத்தன்று அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் புகுந்தனர்.
அதற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையில் வன்முறை வெடித்தது. அந்தக் கட்டடம் மூடி சீல் வைக்கப்பட்டது. இதன் பிறகு ஒரு உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பின்படி அந்தக் கட்டடம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பொதுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
கட்சித் தலைமையகமும் அவர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகவே, கட்சியின் ஒரே தலைமையாக தான் உருவெடுக்க முடியுமென அவர் நினைத்திருந்த நிலையில், வெளிவந்திருக்கும் தீர்ப்பு அவருக்கு பின்னடைவை அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி, கட்சியின் இடைக் காலப் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டது செல்லாது.
முன்பிருந்ததைப் போலவே ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியுமே தொடர்வார்கள்.
கட்சி பொதுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்கள் வசம் இல்லாத நிலையில், கட்சியைவிட்டு நீக்கப்பட்டு, கட்சித் தலைமையகமும் பறிபோன நிலையில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு இந்தத் தீர்ப்பு புத்துயிர் அளித்துள்ளது.
ஆனால், ஒரு எதிர்க்கட்சியாக அரசுக்கு எதிராக விமர்சனங்களை இருதரப்பு எப்படி முன்வைக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தவிர, அரசுக்கு எதிரான போராட்டங்களை எந்தத் தரப்பு அறிவித்து, நடத்தும் என்பதும் கேள்விக்குரியதுதான்.
தற்போதைய சூழலில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்ற அமர்விடம் மேல் முறையீடு செய்யுமெனத் தெரிகிறது.