• தனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் இருப்பதாக கலுஹானா கூறுகிறார். ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மனைவிகள் தெரிவிக்கின்றனர்.
நைரோபி: கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா.
61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார்.
இந்த மனைவிகள்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளனர்.
இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று உள்ளது. இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார் கலுஹானா.
இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூடியூபில் இவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது. ஆக உயர்வு அதிக பெண்களை மணந்தது பற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான் உள்ளார். அவருக்கு மொத்தம் 1000 மனைவிகள் இருந்தனர்.
நானும் அரசர் சாலமோன் போன்றவன். பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனமாக தெரிகிறேன்.
இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும்” என்றார்.
இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர்.
அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்” என்றார்.
இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், ‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன.
நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்” என்றார். இந்த மெகா குடும்பத்தைப் பற்றிய ஆவணப்படம் வெளியான இரண்டு நாட்களுக்குள் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் கடும் விமர்சனமும் செய்துள்ளனர். ‘அனைவரும் நன்றாக இருப்பதாக மனைவிகள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் சொல்வதை என்னால் உணர முடியவில்லை..
அவர்கள் கண்களில் சோகத்தை மட்டுமே நான் காண்கிறேன்” என்று ஒரு பயனர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
எது எப்படியோ… இன்று கென்யாவின் கல்யாண மன்னனாக கலுஹானா வலம் வருகிறார்.