ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் கண்காணிப்புப்பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு நீண்டகாலம் கடந்திருக்கின்ற போதிலும், கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் இன்னமும் போதியளவிற்குப் பூர்த்திசெய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், அரசியல் மறுசீரமைப்பும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவுவதற்கென மேலும் 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ள அவர், இவ்வாறானதொரு தருணத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், நேற்றைய தினம் மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது உரம் மற்றும் விவசாயத்துறை சார்ந்த சாதனங்களைக் கொள்வனவுசெய்து விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் நேற்று அறிவிக்கப்பட்ட 40 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக மிகவும் வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களின் உணவு மற்றும் போசணைத்தேவையைப் பூர்த்திசெய்தல், பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கான உதவிகளை வழங்கல் உள்ளடங்கலாக பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கென மேலும் 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்தார்.

அதன்படி கடந்த ஜுன் மாதத்திலிருந்து அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி 240 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை இங்கு வழங்கப்படும் உதவிகள் சில சந்தர்ப்பங்களில் அரசியல்மயப்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டிய சமந்தா பவர், எனவே ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேசக்கட்டமைப்புக்களுடன் இணைந்து இவ்வுதவிகள் உரிய தரப்பினரைச் சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டியதன் தேவை குறித்தும் பிரஸ்தாபித்தார்.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வெகுவாக முன்னேற்றமடைந்திருந்த இலங்கையின் தற்போதைய நிலையும், அதன்விளைவாக இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் தீவிர நெருக்கடிகளும் மிகுந்த கவலையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவித்த அவர்,

இவ்வாறானதொரு தருணத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

அத்தோடு இலங்கைக்கான விஜயத்தின்போது ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர்கள், விவசாயிகள், பெண்தலைத்துவக்குடும்பங்கள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை நேரடியாகக் கேட்டறிவதுடன் அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்துவதற்குமே தான் வருகைதந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இச்செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது அரசியல் மறுசீரமைப்பும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று சமாந்தரமானதாக அமையவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.

அதேபோன்று சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான இடைவெளி உறுதிசெய்யப்படுவதுடன் ஊழல்மோசடிகள் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும்.

மேலும் கடன்மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவும், ‘பாரிஸ் கிளப்’ உறுப்புநாடுகளும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்திருப்பதுடன் சீனாவும் ஒத்துழைப்புடன் செயற்படுமென எதிர்பார்க்கின்றோம்.

கடன் மறுசீரமைப்பு உள்ளடங்கலாக இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம்செலுத்துவதற்கு அப்பால், பொறுப்புக்கூறத்தக்க கடன்நிலை மற்றும் வர்த்தகம் என்பன தொடர்பில் உரியவாறான திட்டமொன்று உருவாக்கப்படவேண்டும்.

மேலும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது பயங்கரவாத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், சிவில் சமூக அமைப்புக்களின் இடைவெளியை உறுதிசெய்தல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது மீளுறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த செயற்திட்டமொன்றே தேவையாக இருக்கின்றது எனவும் நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் கண்காணிப்புப்பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு நீண்டகாலம் கடந்திருக்கின்ற போதிலும், கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் இன்னமும் போதியளவில் பூர்த்திசெய்யப்படவில்லை.

நீதியைப் பெற்றுக்கொள்வதும் காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுமே பாதிக்கப்பட்ட தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இன்னமும் தாய்மார் காணாமல்போன தமது பிள்ளையின் புகைப்படத்துடன் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளில் அமெரிக்கா ஓர் துடிப்பான உறுபபினராக விளங்குவதுடன் மேற்படி கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply