பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து எடின்பரோ நகருக்கு எடுத்து செல்லப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரித்தானியா மகாராணி எலிசபெத் (வயது 96) கடந்த 08 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு லண்டனில் இறுதிச்சடங்கு 19 ஆம் திகதி நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மகாராணி எலிசபெத் உடல், ‘ஓக்’ மரத்தில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, நேற்று அவருக்கு பிடித்தமான பால்மோரல் கோட்டையில் இருந்து கருப்பு நிற காரில் புறப்பட்டது.

பால்மோரல் கோட்டையில் இருந்து அந்த கார் 175 மைல் தொலைவில் உள்ள ஸ்கொட்லாந்து தலைநகரான எடின்பரோ நகருக்கு 6 மணி நேர பயணத்துக்கு பின்னர் நேற்று மாலை போய்ச் சேர்ந்தது.

வழியெங்கும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் வரிசையில் அமைதியாக நின்று காரில் வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மகாராணியின் உடல் எடுத்துச்செல்லப்பட்ட காரைத் தொடர்ந்து வந்த காரில் மகாராணியின் மகள் இளவரசி ஆனி வந்தார். எடின்பரோ நகருக்கு எடுத்துச்செல்லப்பட்ட ராணியின் உடல், அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது.

இன்று மகாராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு ஒரு ஊர்வலம் நடத்தப்படுகிறது.

தேவாலயத்தில் மன்னர் சார்லசும், அரச குடும்பத்தினரும் வழிபாட்டில் கலந்து கொண்டு, மகாராணியின் உடலைப்பெற்றுக்கொள்வார்கள். அதன் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு 24 மணி நேரம் வைக்கப்படுகிறது.

நாளை செவ்வாய்க்கிழமையன்று மகாராணியின் உடலை அவரது மகளான இளவரசி ஆனி தனி விமானத்தில் லண்டன் எடுத்துச்செல்கிறார். அங்கு புதன்கிழமை முதல் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மகாராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மகாராணியின் உடலுக்கு பல இலட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

Share.
Leave A Reply