அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைக்கும் சுற்றறிக்கை, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சுற்றறிக்கை வருமாறு,
அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைத்தல்
கௌரவ நிதியமைச்சர் அவர்களால் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 2022.08.30 ஆம் திகதிய இடைக்கால வரவு செலுவுத் திட்ட உரை – 2022 இல் அரச துறையில் சீர்திருத்தங்கள் என்பதன் கீழ் 11:2 முன்மொழிவின் படி அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டதுடன், அதன்படி, ஓய்வூதிய பிரமாணக் குறிப்பில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு 2022.09.12 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2. அதன்படி 2022.01.06 ஆந் திகதி வெளியிப்பட்ட பொது நிருவாகச் சுற்றறிக்கை 02/2022, 2022.12.31 ஆந் திகதிக்குப் பின்னர் இரத்துச் செய்யப்படுவதுடன், கட்டாய ஓய்வு வயது அரசியலமைப்பின் மூலம் நீதித்துறை சட்டத்தின் மூலம் அல்லது குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிச் சேவை உத்தியோகத்தர்களைத் தவிர, ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த திருத்தம் ஏற்புடையதாகும்.
3. அதன்படி அமைச்சரவையின் இந்த முடிவின்படி, அரசாங்க உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறுதல் / பெறச்செய்தல் தொடர்பாக பின்வருமாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
3.1. 2023.01.01 ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அனைத்து அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக கருதி செயற்படுதல்.
3.2. 60 வயதுக்கு மேல் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் 2022.12.31 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் 60 வயது பூர்த்தியாகும் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களின் விருப்பப்படி 2022.12.31 அல்லது அதற்கு முன் ஓய்வு பெற வாய்ப்பளித்தல்.
3.3. அவ்வாறு ஓய்வுபெறவுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், உரிய நடைமுறைப்படி, தங்களது ஓய்வுபெறும் விண்ணப்பங்களை, உரிய நியமன அதிகாரியிடம் ஒப்புதல் பெற்று, அதனை ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல்.
3.4. பணி ஓய்வுக்கு முன்னரான லீவு தொடர்பில் 2010.09.30 ஆந் திகதிய பொது நிருவாக சுற்றறிக்கை 19/2010 இன் பந்தி 03 இன் படி செயற்படுதல்.
3.5. கட்டாய ஓய்வுபெறும் வயது 60 ஆக தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஏதேனும் ஒரு நிபுணத்துவ சேவையை பெற்றுக்கொள்ளத் தேவைப்பட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2018.02.20 ஆந் திகதிய பொது நிருவாக சுற்றறிக்கை 03/2018 இன் படி செயற்படுதல்.
4. ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் அட்டவணை “ட” இன் கீழ் ஓய்வூதிய உரித்துடைய உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய உரிமையைப் பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச சேவைக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக நீடித்தல் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும்.
5. ஓய்வு பெறச்செய்தல் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய ஓய்வு வயது 2023.01.01. முதல் 60 வயதாக திருத்தப்பட வேண்டும்.
6. இந்த சுற்றறிக்கை நிதி அமைச்சின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த விதிமுறைகளின்படி அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பது தொடர்பாக ஓய்வூதிய பிரமாணக் குறிப்பை திருத்தம் செய்வதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.எம்.பீ.கே. மாயாதுன்னெ
செயலாளர் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
தொலைபேசி : 0112 -682460
தொலைநகல் : 0112 -698460
மின்ன ஞ்சல் : pubad.aspension@gmail.com