முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் முன்னிலையில் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக கடமையாற்றிய கடந்த 2009 பெப்ரவரி முதலாம் திகதிக்கும் அம்மாதம் 14 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், குருணாகலையில் அவர் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தி ஜனாதிபதி உள்ளிட்டோரை கொலை செய்ய சதிச் செய்ததாக சட்ட மா அதிபர் இந்த நால்வருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந் நிலையில் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், பயங்கரவாத தடை சட்டத்தின் திருத்தங்கள் பிரகாரம், குறித்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு பிணையளிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இருப்பதாக குறிப்பிட்டு பிணை கோரி வாதங்களை முன் வைத்தனர்.

பிரதிவாதிகள் கடந்த 13 வருடங்களாக விளக்கமறியலில் இருக்கும் நிலையில் அதனை விஷேட காரணியாக கருதி பிணையளிக்குமாறு அவர்கள் கோரினர்.

எனினும் வழக்குத் தொடுநர் குறித்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு முன் வைத்தது.

இந் நிக்லையில் பிணைக் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிப்பதாக நீதிபதி மகேன் வீரமன் அறிவித்த நிலையில், வழக்கு அன்றைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே படு கொலை வழக்கிலும் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே பிரதிவாதியாக குறிப்பிடப்ப்ட்டிருந்த போதும், அவரை அண்மையில் கம்பஹா மேல் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply