ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஒரே பெண், 4 ஆண்களை திருமணம் செய்து, சுழற்சி முறையில் குடும்பம் நடத்தியது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள DG புதூரை சேர்ந்த சரவணன் என்பவர், நெசவு தொழில் செய்து வருகிறார்.

இவரது திருமணத்திற்காக வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் புளியம்பட்டியை சேர்ந்த திருமண அமைப்பாளர் மலர் என்பவரை அனுகி, திருமணத்திற்கு வரன் பார்க்குமாறு சரவணன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மலர் மூலமாக அந்தியூரை சேர்ந்த சில திருமண அமைப்பாளர்கள் இணைந்து, விருதுநகரை சேர்ந்த விஜயலட்சுமி எனபவரை தொடர்பு கொண்டனர்.

அப்போது அவர் விருதுநகரில் சரிதா என்ற பெண் இருப்பதாகவும், அந்த பெண்ணை சரவணனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கமிஷனாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

திருமணம்
இதனைதொடர்ந்து விஜயலட்சுமி கேட்ட கமிஷன் தொகையை தருவதற்கு, சரவணன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

 

இதனையடுத்து, கடந்த மாதம் 29 தேதி, விருதுநகரிலிருந்து சரிதா என்ற பெண்ணை புரோக்கர் விஜயலட்சுமி மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 8 நபர்களும், கோபி அருகே உள்ள சரவணன் இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர், சரவணனுக்கும், சரிதாவிற்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

பின்னர், கேட்டபடி கமிஷன் தொகை 1 லட்சத்து 20 ஆயிரத்தை விஜயலட்சுமி பெற்றுக்கொண்டு விருதுநகர் சென்று விட்டார்.

வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல்
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சரவணனுடன் குடும்பம் நடத்தி வந்த சரிதா, தனது உறவினர் ஒருவருக்கு, கணவர் சரவணனின் செல்போனை, அவர் இல்லாத நேரத்தில் எடுத்து அதிலிருந்த வாட்சாப்பில் குரல் பதிவு ஒன்றை அனுப்பி விட்டு அதனை அழிக்காமலேயே செல்போனை வைத்துவிட்டார்.

அந்த பதிவில், இங்கு இருந்து வெளியே வரமுடியவில்லை என்றும், சரவணனிடம் பெரிய தொகை எதுவும் இல்லை என்றும் சரிதா கூறியுள்ளார்.

தனக்கு அடுத்தாக வயதான ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும், அந்த திருமணம் முடிந்தபின் அவரிடமிருந்து பிரிந்து வந்து மீண்டும் சரவணணிடமே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மனைவியின் வாய்ஸ் மெசேஜ்
இதனிடையே, தனது செல்போனில் மனைவி சரிதா அனுப்பியிருந்த குரல் பதிவை சரவணன் திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தனது உறவினர் மற்றும் நணபர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சரவணனின் நண்பர்கள் மீண்டும் விருதுநகரை சேர்ந்த விஜயலட்சுமியை தொடர்பு கொண்டுள்ளனர்.

தங்கள் பகுதியில் உள்ள வேறு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்ய பெண் தேவைப்படுவதாகவும் அதற்கு புரோக்கர் கமிசனாக ஒரு லட்சம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

உறவினர்கள் சுற்றி வளைப்பு
இதனையடுத்து புரோக்கர் விஜயலட்சுமி, விருதுநகரில் செல்வி என்ற பெண் திருமணத்திற்கு தயாராக இருப்பதாக சரவணன் உறவினர்களிடம் தெரிவித்த பின்னர், விருதுநகரிலிருந்து அந்த பெண்ணை வாடகை காரில் விஜயலட்சுமி அழைத்து வந்துள்ளார்.

செல்வி என்ற பெண்ணுடன் கோபி வந்த திருமண புரோக்கர் விஜயலட்சுமியை, சரவணனின் உறவினர்கள் சுற்றி வளைத்து சரிதாவை பற்றி விசாரித்தனர்.

அப்போது, விஜயலட்சுமி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து சரவணன், தான் திருமணம் செய்த சரிதா மற்றும் புரோக்கர் விஜயலட்சுமி அவருடன் வந்த செல்வி என பெண் உட்பட மூவர் மீதும் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து, பிடிபட்ட மூவரையும் போலீசார் விசாரித்தனர். அப்போது சரிதா என்பவர் இதுவரை நான்கு பேரை திருமணம் செய்து அவர்களுடமிருந்து விலகி வந்து, தற்போது சரவணனை திருமணம் செய்தது அம்பலமாகியது.

திருமணம் – பணம் பறிப்பு
இதனையடுத்து புரோக்கர் விஜயலட்சுமி சரிதா மற்றும் செல்வி ஆகிய மூவரும் சேர்ந்து இதேபோல் மோசடியாக திருமணம் செய்வதாக கூறி, பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டுமெனக்கூறி, மோசடி கும்பலைச் சேர்ந்த 3 பெண்களையும் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக பங்களாபுதூர் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply