பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் பிரபு குரலில் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார் நடிகர் ஜெயராம்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக தயாராகி உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், நாசர், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்தநிகழ்வில் பேசிய நடிகர் ஜெயராம், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை குறிப்பிட்டு, நடிகர் பிரபு குரலில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அப்போது சிவாஜி குடும்பத்திடம் பிரபு குரலில் பேசுவதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ஜெயராம்.
பின்னர் இயக்குனர் மணிரத்னம் போலவும் மிமிக்ரி செய்து அசத்தினார் ஜெயராம்.
இவரின் மிமிக்ரி திறமையைப் பார்த்து திரைபிரபலங்களும், ரசிகர்களும் அசந்து போயினர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஜெயராம் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்து திரைத்துறையில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.