தாய், மகன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், பெத்தகோன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த வீரானந்தம் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியின் மகன் ஹரி. தாயும், மகனும் பொன்னமராவதி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இவர் கணவர் வீரானந்தம் பக்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இவர் தன் மனைவி, மகனுக்கு குடும்பச் செலவுக்குப் பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செலவுக்குக்கூட பணமின்றி அவர் சிரமப்பட்டு வந்திருக்கிறார்.

மனவிரக்தியிலிருந்த ஜெயபாரதி, வீட்டைத் தாழ்ப்பாளிட்டு கடந்த 10-ம் தேதி தன்னுடைய மகனுடன் சேர்ந்து விஷம் கடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த இரண்டு நாள்களாக மேலாக வீடு பூட்டியே கிடந்திருக்கிறது. வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வந்த நிலையில்தான், சந்தேகமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னமராவதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
ஜெயபாரதி – அவர் மகன்
ஜெயபாரதி – அவர் மகன்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் அழுகிய நிலையில் இறந்துகிடந்தனர்.

இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன்பு ஜெயபாரதி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கடிதத்தில், “என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. என் குடும்பச் சூழ்நிலை என் உடல்நிலை, மனஅழுத்தம் காரணமாக இப்படி பண்ணிக்கிட்டேன்.

என்னுடைய உடலை என் தகப்பனாரிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்த பிறகுகூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.

கடந்த 8 வருடங்களாக என் கணவர் எங்களுக்கு எதுவும் பண்ணவில்லை. கணவராகவோ அல்லது தந்தையாகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம், `நீ போய் உங்க அப்பாவிடம் இரு!’ என்று சொல்லிப்பார்த்தேன். அவனும் கேட்கவில்லை. என் கூடவே விஷம் அருந்திவிட்டான்.

இந்த வீட்டிலிருந்து, நான் சேர்த்து வைத்திருக்கும் ஒரு குண்டூசிகூட என் கணவருக்கோ, தகப்பனார் வீட்டுக்கோ போகக்கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புதுக்கோட்டையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply