சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.
தனது 13 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேச தீட்சிதர் ஆகிய இருவரையும் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இப்போது சிறுமிக்கு 15 வயதாகிறது. சிறுமியை திருமணம் செய்துகொண்ட சிறுவனுக்கு 17 வயதாகிறது என்று காவல்துறை கூறுகிறது. இவர்கள் இருவரிடமும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
புகார் பெற்றபின் தாங்கள் விசாரணைக்காகச் சென்றபோது 13 வயது சிறுமியை ஒளித்து வைத்துக்கொண்டு, கைது செய்யப்பட்ட தீட்சிதர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாவட்ட சமூக நலத்துறைக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அந்தத் துறையின் அதிகாரிகள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்தக் கைது நடந்துள்ளது.
இருவரும் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மற்ற தீட்சிதர்களுக்கு தகவல் தெரிந்ததால் கோவில் கோபுர வாயில் முன்பு உள்ள சாலையில் சனிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் தடுப்புக்காவலில் எடுத்து பின்னர் விடுவித்தனர்.
இதுமட்டுமல்லாது சனிக்கிழமை மாலை 50க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோவில் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இரவு முதல் நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டம் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே பரபரப்பாகக் காணப்பட்டது.
குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவர் கைது- சிறுமிக்கு திருமணம் – தீட்சிதர் சிக்கியது எப்படி?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆரோக்கியராஜ் கூறுகையில், “குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து இந்த வழக்கில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியைப் பார்க்கச் சென்றோம்.
அப்போது, சிறுமியை மறைத்து வைத்து தீட்சிதர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண மண்டபத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது அங்கு திருமணம் நடந்ததற்கான பதிவுகள் இருந்தன.
அதன் மூலமாக கடந்த 2021 ஜனவரி 25ஆம் நாளன்று அதிகாலை 4.30 முதல் 6 மணிக்கு இந்த திருமணத்தைச் செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
“சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்பட ஆதாரம் எங்களுக்குக் கிடைத்தது.
அதன்பின் சமூக நலத்துறை சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்தோம்,” என்று புகார் அளித்த பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மீனா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
குழந்தை திருமணம் – ‘தீட்சிதர்கள் மீது மட்டும் நான்கு வழக்குகள்’
இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது.
”கடலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வருடம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் தீட்சிதர்கள் மீது மட்டும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
“குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், அதனால் அந்த குழந்தைக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஆனால் இதை நடைமுறை வழக்கமாகக் கருதி இவ்வாறு குழந்தைத் திருமணம் செய்து வருகின்றனர்.
ஆனால் இது சட்டத்துக்குப் புறம்பானது. தற்போது விதிமுறையை மீறி குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் கோவில் அலுவல் ரீதியாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்தது, கனக சபை மேடை மீது பக்தர்கள் ஏறி வழிபாடு செய்யத் தடை விதித்தது,
கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண் பக்தர் ஒருவரை சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.