ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில், கடந்த வியாழக்கிழமை (06) நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், புதிதாக ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்தப் பிரேரணை, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், பேரவையின் 46 ஆவது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட பிரேரணையை வலியுறுத்துகிறது.
அந்தப் பிரேரணை, அதே அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கையை அனுமதிக்கிறது.
அந்த அறிக்கையில்தான், இலங்கையில் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக, பயணத்தடையும் பொருளாதாரத் தடையும் விதிப்பது தொடர்பாக குறிப்பிடப்படுகிறது.
அதேபோல், அவ்வாறானவர்களுக்கு எதிராக உறுப்பு நாடுகள், தத்தமது நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும். எனவே, இம்முறையும் அந்த நடவடிக்கைகளையே பேரவை வலியுறுத்துகிறது எனலாம்.
இம்முறை, மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2021 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்த போதிலும், இம்முறை அந்த எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.
அதேபோல், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை 11இலிருந்து 7 ஆக குறைந்துள்ளது. எனவே, பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளின் எண்ணிக்கை 14 இலிருந்து 20 ஆக இம்முறை அதிகரித்துள்ளது.
பிரேரணையை வாசிக்கும் போது, அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களை, மனித உரிமைகள் பேரவை மறந்துவிட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.
ஏனெனில், நாட்டில் பொதுவாக ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி, அடக்குமுறை போன்றவையே விசேடமாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும், போர்க்காலத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களும் புலிகளின் மனித உரிமைகள் மீறல்கள் என்பன மட்டுமே விசேடமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ஆயினும், பிரேரணையின்படி, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, வெளிநாடுகள் நடவடிக்கை எடுப்பதாயின், போர்க்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கலாம்.
உண்மையிலேயே, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் என்னும் போது, வெளிநாடுகளில் உள்ளோருக்கு அக்கால சம்பவங்களே ஞாபகத்துக்கு வருகின்றன.
பிரேரணையின் பிரகாரம், உறுப்பு நாடுகள் இலங்கையில் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக, தத்தமது நாடுகளில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்;
பயணத்தடை மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என்று இருந்த போதிலும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம், எந்தவொரு நாட்டுக்கும் இல்லை.
எனவே, பிரேரணை எந்தளவுக்குப் பயன்தரும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் சந்தேகம் எழுப்பி இருந்தன.
எனினும், ஏற்கெனவே சில நாடுகள் இலங்கையில் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக, ஞாயிற்றுக்கிழமை (09) வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
அச்செய்தியின்படி, மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, கனடா பயணத்தடை விதிக்கப்போகிறது. அதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளும் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக, வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான தகவல்கள், சாட்சியங்களை திரட்டி, பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் பொறிமுறையும் 2021 வருட பிரேரணை மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதிலும், பெரும்பாலும் போர்க்கால சம்பவங்கள் தொடர்பான தகவல்களும் ஆதாரங்களுமே இருக்கலாம் என ஊகிக்க முடியும்.
இந்தப் பொறிமுறையைப் பற்றி, இலங்கை அரசாங்கம் மிகவும் குழப்பம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பொறிமுறையைப் பற்றிக் குறிப்பிடும், இவ்வருட பிரேரணையின் எட்டாவது வாசகத்தை, வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுவதன் மூலம் அது தெரிகிறது. தகவல் திரட்டும் பொறிமுறையின் மூலம், பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடிய போர் வீரர்களை வேட்டையாட, முயன்று வருவதாக அவர் கூறுகிறார்.
இது, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இருந்து, பாடப்படும் பழைய பல்லவியாகும். அதேபோல், ‘போர் வீரர்களை வேட்டையாடுவது’ என்ற சொற்பிரயோகத்தைக் கொண்டு, சிங்கள மக்களின் இன உணர்வைத் தூண்டி, மக்கள் ஆதரவைத் தேட முயல்வதேயாகும்.
மனித உரிமைகள் என்னும் போது, படையினர் வடக்கு – கிழக்கில் செய்தவற்றை மட்டும் குறிப்பிடவில்லை.
புலிகள் செய்தவற்றையும் அரச படைகள் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டங்களின் போது செய்தவற்றையும் மனித உரிமைகள் பேரவை அதில் உள்ளடக்குகின்றது.
அதேவேளை, இம்முறை பொருளாதார குற்றங்கள் மூலம், மனித உரிமைகளை மீறியோர் பற்றியும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம், இவ்வாறான தகவல் திரட்டும் பொறிமுறையை ஆரம்பிப்பதைப் பற்றி, அரசாங்கம் அவ்வளவு அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. சம்பவங்கள், இலங்கையிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும். அவற்றைப் பற்றி பாதுகாப்புத் துறையினர் நிச்சயமாக தகவல்களைத் திரட்டி வைத்திருக்க வேண்டும்.
உயர்ஸ்தானிகரின் அலுவலகம் திரட்டியிருக்கும் தகவல்கள் பொய்யானவை என்றால், எதிர்க்காலத்தில் இலங்கையர்களுக்கு எதிராக அவற்றைப் பாவித்து, வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது, அரசாங்கம் தம்மிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு, உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் தகவல்களை நிராகரிக்க முடியும்.
“வெளிநாட்டுக் கொள்கையின் தோல்வியே இந்தப் பிரேரணை” என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
“அரசாங்கம் கடந்த காலத்தில், மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியதன் விளைவே, தற்போதைய பிரேரணை” என்று முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் தற்போது ஆளும் கட்சியிலிருந்து விலகி ‘டலஸ் அழகப்பெருமவின் குழு’வில் சேர்ந்து இருப்பவருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறியிருக்கிறார். இந்த இரண்டு கருத்தும் உண்மையே! ஆனால், அவர்கள் இருவரும் வேறு நோக்கங்களை மனதில் வைத்தே, இந்தக் கருத்தை வெளியிடுகிறார்கள்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர்களுடன் அல்லது வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரேரணைகளை தடுத்து இருக்கலாம் என்பதே நீதி அமைச்சரின் வாதமாக இருக்கிறது. அதாவது, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா, இல்லையா என்பதைப் பற்றி, அவருக்கு அக்கறை இல்லை. மீறப்பட்டு இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது ஒரு புறமிருக்க, பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசி, பிரச்சினைகளைச் சமாளித்து இருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அதுதான் நீதி அமைச்சரின் நீதியாகும்.
மஹிந்தவினதும் கோட்டாபயவினதும் காலத்தில், வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஜீ.எல் பீரிஸ், மனித உரிமைகள் பேரவைக்கு தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறியதன் விளைவே, தற்போதைய பிரேரணை என்று கூறுகிறார். அது முற்றிலும் உண்மையே!
போர் முடிவடைந்து ஒரு வாரத்தில், அதாவது 2009 மே மாதம் 23ஆம் திகதி, அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். 26ஆம் திகதி அவர் திரும்பிச் செல்லும்முன், அவரும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என, பான் கி மூன் அதில் நம்பிக்கை வெளியிட்டார். அதில் மஹிந்தவும் கையொப்பமிட்டார்.
அதுவே, மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் எழுத்து மூலமாக, சர்வதேசத்துக்கு வழங்கிய முதலாவது வாக்குறுதியாகும்.
அடுத்த நாள், இலங்கை தூதுக்குழு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றை சமர்ப்பித்தது.
அதில், இந்தக் கூட்டறிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இலங்கை விடயத்தில், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது பிரேரணை அதுவேயாகும். அதற்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்தன. அதுவே இலங்கைக்கு ஆதரவாக மிகப் பெரும் ஆதரவை பெற்ற பிரேரணையாகும்.
அதையடுத்து 2012, 2013. 2014, 2015, 2017, 2019, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக, பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம், அவை அனைத்தையும் நிராகரித்த போதிலும், அவற்றில் இலங்கையின் பொறுப்புகளாகக் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதாக ஏற்றுக் கொண்டது.
ஆனால் அரசாங்கம், கடந்த 13 ஆண்டுகளில் அவற்றில் மிகச் சிலவற்றை தவிர, ஏனையவற்றறை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறும் ஜி.எல் பீரிஸ்தான், 2009 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த 13 ஆண்டுகளில் ஆறு ஆண்டுகள் வெளிநாட்டு அமைச்சராக இருந்தார்.
எனவே, ஆரம்பத்தில் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைப் பற்றி, “நீங்களே விசாரணை செய்து காட்டுங்கள்” என்று கூறிய சர்வதேச சமூகம், இப்போது தாமாக முன்வந்து, அவற்றை விசாரிப்பதாகக் கூறுகிறது.
-எம்.எஸ்.எம் ஐயூப்–