யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் கார்கள் மற்றும் கட்டடங்கள் அழிக்கப்பட்டன

யுக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

என்னென்ன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது?

சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.

தரை இலக்குகளைத் தாக்குவதற்கு, தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆயுதப் பற்றாக்குறையின் அறிகுறியாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“சமீபத்திய தாக்குதல்களில் தரை இலக்குகளுக்கு எதிராகப் பல்வேறு ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க விஷயம்,” என்கிறார் சர்வதேச வியூக ஆய்வுகள் நிறுவனத்தின் ராணுவ நிபுணரான டக்ளஸ் பாரி.

“அங்கு சில பிரச்னைகள் இருக்கலாம் என்று நினைக்கிறோம். முழுமையாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் பகுதியளவு ஆயுதப் பற்றாக்குறை இருக்கலாம்,” என்றும் அவர் கூறுகிறார்.

போரின் தொடக்கத்தில் யுக்ரேனில் உள்ள நில இலக்குகளைத் தாக்க ரஷ்யா துல்லியமான வழிகாட்டுதல் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. ஆனால் கோடையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

ரஷ்யாவின் ஆயுதங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சில மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

“அவர்களின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன என்று களத்திலுள்ள ரஷ்ய தளபதிகளுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்” என்று பிரிட்டிஷ் உளவு அமைப்பான ஜி.சி.எச்.க்யூ-வின் தலைவர் சர் ஜெரேமி ஃப்ளெமிங் கூறுகிறார்.

என்ன ஆதாரங்கள் உள்ளன?

ரஷ்யாவின் ஏவுகணை கையிருப்பு தொடர்பான தகவல் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியம். மேற்கத்திய உளவு அமைப்புகள் எதன் அடிப்படையில் இதைக் கூறுகின்றன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சமீபத்திய தாக்குதல்கள் தொடர்பான படங்களில் சில தடயங்கள் உள்ளன.

இணையத்தில் பகிரப்பட்டுள்ள சில படங்களில் ‘S-300’ என்ற ஏவுகணைகளின் சிதைவைக் காணமுடிகிறது. இவை வான்வழி இலக்குகளைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆயுதங்கள்.

S-300 ஏவுகணைகள் தரை இலக்குகளைத் தாக்கும் வகையில் ரஷ்யாவால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன என்று சில சமூக ஊடகப் பதிவுகள் கூறுகின்றன.

ஆன்லைனில் பகிரப்படும் படங்களை உன்னிப்பாக கவனித்து, அதில், தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் S-300 ஏவுகணைகளுடன் ஒத்துப்போகும் சிதைவுகளின் மூன்று படங்களை பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு உறுதிசெய்தது.
யுக்ரேன்

சிதைவுகளில் காணப்படும் எழுத்தை S-300 ஏவுகணைகளின் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவை ஒரே மாதிரியாக இருந்தன. அவற்றின் வடிவங்களும் ஒப்பிடத்தக்க வகையில் இருந்தன.

தரைவழித் தாக்குதலுக்கான ஏவுகணை பற்றாக்குறை காரணமாக இந்த ஏவுகணைகளை ரஷ்யா மறு உருவாக்கம் செய்வதாக சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.


ஏவுகணை

“அவர்கள் தங்கள் ஆயுதங்கள் குறைவதையும் அவற்றை மேலும் உற்பத்தி செய்யும் திறனையும் பார்த்துவிட்டு, S-300 ஏவுகணைகள் போன்றவற்றை மறு உருவாக்கம் செய்வதே அடுத்த சிறந்த வழி என்பதை உணர்ந்தார்கள்” என்று இன்டெலிஜென்ஸ் சர்வீசஸ் எனும் அமைப்பைச் சேர்ந்த லூயிஸ் ஜோன்ஸ் கூறுகிறார்.

தரை இலக்குகளைத் தாக்க வான்வழி ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதற்கு அதன் விமானப்படையின் செயல்பாட்டு வரம்புகளும் காரணமாக இருக்கலாம்.

யுக்ரேன் படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்தே ரஷ்யாவின் விமானப்படை குறிப்பிடத்தக்க வகையில் எந்தப் பெரிய தாக்குதலையும் நடத்தவில்லை.

இவை யுக்ரேனின் ஏவுகணைகளாக இருக்க வாய்ப்புள்ளதா?

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளிடமும் இந்த S-300 ஏவுகணைகள் உள்ளன. சமீபத்திய தாக்குதல்களில் அழிவு ஏற்படுத்தியதாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.

ரஷ்ய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்காக யுக்ரேன் அதைப் பயன்படுத்துகிறது. யுக்ரேனின் ஏவுகணைகளே தரையில் விழுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ரஷ்யா கூறுகிறது.


S-300 ஏவுகணை ஏவுதளம்

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான எவ்ஜெனி போபோவ் பிபிசியிடம் பேசுகையில், யுக்ரேனிய ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளே குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள் போன்ற பொதுமக்களின் பகுதிகளை சேதப்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.

சிதைவுகளை வைத்து இது எந்த நாட்டு ஏவுகணை என்று கூறுவது கடினம் என ஆயுத நிபுணர்கள் கூறுகின்றனர்.

S-300 ஏவுகணைகளை ஒத்த வேறுவகை ஏவுகணைகளும் இதே மாதிரியான சிதைவைக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கான பதில் தெளிவற்றது என ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்டியூட்-இன் பாதுகாப்பு நிபுணர் சித்தார்த் கௌஷல் கூறுகிறார்.

சமீபத்திய தாக்குதல்களின் போது யுக்ரேனிய அமைப்புகள் தவறாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் தான் காணவில்லை என்கிறார் வியூக மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தைச் சேர்ந்த அயான் வில்லியம்ஸ்.

பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதால் சிதைவுகளின் படத்தை வைத்து திட்டவட்டமாகச் சொல்வது கடினம் எனக் கூறும் அவர், யுக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் நகர மையங்களில் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்.

வேறு என்ன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது?

ரஷ்யா சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களுடன் போரைத் தொடங்கியது. பிப்ரவரியில் தொடங்கிய இந்த மோதலின் முதல் 11 நாட்களில் சுமார் 600 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் மதிப்பிட்டுள்ளது.

தரைவழி, கடல்வழி, வான்வழி என ரஷ்யத் தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஏவுகணை

ரஷ்ய ஆயுதங்களின் வகைகளில் இஸ்கந்தர் ஏவுதளங்களில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளும், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட காலிபர் ஏவுகணைகளும் அடங்கும்.

மேலும், KH-101 மற்றும் KH-555 வான்வழி ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் Tochka-U என்ற ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த வகை ஏவுகணைத் தாக்குதலுக்கு கடந்த ஏப்ரலில் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானர்.

ஜூன் மாத இறுதியில் நடந்த க்ரெமென்சுக் ஷாப்பிங் சென்டர் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் KH-22 அல்லது நவீன வகை KH-32 என்பது பிபிசியின் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

இவை கப்பல்களைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பழைய ஏவுகணைகள் என்பதால் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருவது மேலும் தெளிவாகிறது.

Share.
Leave A Reply