2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனாவின் மக்கள் பெருமண்டபத்தில் ஆரம்பமான சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயம் (congress) வரலாற்று முக்கியத்துவமானதாக இருக்கின்றது.
சீனப் பொதுவுடமைக் கட்சியின் 90மில்லியன் உறுப்பினர்கள் தெரிவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி கொள்கைகளை வகுக்கும் கூட்டம் பேராயம் (congress) எனப்படும். சீனப் பொதுவுடமைக் கட்சி,
சீன அரசு, சீனப்படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களும் சீனாவின் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை என்று பொதுவுடமைவாதிகள் சொல்கின்றனர்.
இவற்றில் அதிக அதிகாரம் கொண்டது பொதுவுடமைக் கட்சியே. தகுதிக்கு முன்னுரிமை கொடுத்தல், நடைமுறைக்கு ஏற்பட மாற்றங்களைச் செய்தல் போன்றவற்றால் பொதுவுடமைக் கட்சி சீனாவில் நிலைத்திருக்கின்றது.
கட்சிக் கட்டமைப்பு
பேராயத்தினர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி நானூறு வரையிலான நடுவண் குழு உறுப்பினரை தெரிவு செய்வர்.
நானூறு உறுப்பினர்களும் politburo என்னும் 25 பேர் கொண்ட அரசியற்குழுவை தெரிவு செய்வர்.
அரசியற்குழு தனது நிலையியற் குழுவைத் தெரிவு செய்யும். தெரிவுக் குழுவின் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் இருப்பார்.
நடுவண் குழுவே பொதுச் செயலாளரைத் தெரிவு செய்யும். அரசுத் தலைவர்: (Head of the State) இவரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பேராயம் தெரிவு செய்யும்.
இது இரண்டாவது அதிகார மையமாகும். Politburo: அரசியல்குழு என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கை உருவாக்கும் அமைப்பாகும்.
25 உறுப்பினர்கள். பொதுச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது நடுவண் குழுவால் தெரிவு செய்யப்படும். Politburo Standing Committee: அரசியல் குழுவின் நிலையியல் குழு. இது அரசியல் குழுவால் தெரிவு செய்யப்படும்.
ஆயுட்கால அதிகாரம்
20வது பேராயத்தில் பொதுச் செயலாளரின் பதவிக்கால எல்லையான பத்து ஆண்டுகள் இல்லாமல் செய்யப்படும். அதன் படி சீனாவின் அதிகாரமிக்கவராக ஜீ ஜின்பிங் தொடர்ந்து பதவி வகிப்பார்.
ஒஸ்ரேலியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கெவின் ரட் அவர்க்ள் நீண்ட ஆயுளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த 69 வயதான ஜீ ஜின்பிங் இன்னும் 15 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என எதிர்வு கூறியுள்ளார்.
சீனாவின் அரசுத் தலைவராகவும் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் படைத்துறையின் உச்சத் தளபதியாகவும் பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் பொதுச்செயலாளராகவும் தளபதியாகவும் தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளார்.
உலக அமைதி, உலக பொருளாதாரம் ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் குழப்பமடைந்துள்ள நிலையில் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் ஆற்றிய உரை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது.
தைவானும் கொவிட்-19ம்
தைவானை சீனாவுடன் இணைப்பது அண்மைக் காலங்களாக ஜீ ஜின்பிங்கின் முதன்மை கொள்கையாக இருக்கின்றது. தைவானை சீனாவுடன் இணைப்பதை மீளவும் உறுதி செய்தார்
ஜீ. அமைதியான வழிகளில் இணைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்படும் என்ற ஜீ அது சரிவராது போனால் படை நடவடிக்கை மூலம் இணைக்க மாட்டேன் எனச் சொல்ல மாட்டேன் என்றார்.
ஆனால் எப்போது இணைப்பது என்பது பற்றி ஜீ ஏதும் சொல்லாத படியால் உடனடி போர் அபாயம் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். கொவிட்-19 பெருந்தொற்றை தைவான் மிகச் சிறப்பாக கையாண்டு உலகை வியக்க வைத்துள்ளது.
பெருந்தொற்றுக்கு எதிராக ஜீ சீனாவில் எடுத்த மிக இறுக்கமான நடவடிக்கைகள் சீனாவிலேயே அதிருப்தியைக் கிளறியுள்ளது. ஜீ தனது உரையில் கொவிட்-19இற்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.
பொருளாதாரம்
கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனா பெரும் சவால்களை எதிர் கொண்டதை சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயத்தில் உரையாற்றும் போது ஏற்றுக் கொண்ட ஜீ ஜின்பிங் சீனாவின் பல நகரங்களில் இளையோர் வேலையின்மை 20%இற்கு மேல் இருப்பதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
வீழ்ச்சியடைந்து செல்லும் கட்டிடங்களின் விலை சீனப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கையில் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது பற்றியும் ஜீ வாய் திறக்கவில்லை.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி உள்நாட்டுக் மக்களின் கொள்வனவையும் உயர்-தொழில்நுட்ப மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டாதாக இருக்கும் என்றார் ஜீ. அவர் பீஜிங்கில் உயர்-தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றி உரியாற்றுகையில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒடுக்கக் கூடிய நகர்வுகள் வாசிங்டனில் எடுக்கப்படுகின்றது.
சீனாவின் இளையோருக்கு போதிய வேலைவாய்ப்பை வழங்க சீனப் பொருளாதாரம் குறைந்தது 7%ஆவது வளர வேண்டும் ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி 2022-ம் ஆண்டு சீனப் பொருளாதாரம் 3.2% மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜீயின் உரையில் உணவு உற்பத்தியின் தன்னிறைவு அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
20வது பேராயம் நடை பெறுவதால் 2022இன் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரம் வெளியிடுவதை சீன அரசு தாமதப் படுத்தியுள்ளது.
பாதுகாப்பு
இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த ஜீ ஜின்பிங்கின் உரையில் அதிக தடவைகள் இடம்பெற்ற வார்த்தை பாதுகாப்பு ஆகும். சீனா அச்சுறுத்தப்படுவதாக காட்ட முயன்ற ஜீ அதை தன்னால் மட்டும் காப்பாற்ற முடியும் எனக் கட்ட முயன்றார். பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு போக வேண்டும் என்றார் ஜீ ஜின்பிங்.
வெளியுறவு
உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட சீனாவிற்கு உலக அரங்கில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் அதை கோடிட்டு காட்டினார்.
தனி ஒரு நாடு உலக ஆதிக்கத்தை செலுத்துவதையும் பனிப்போர் மனப்பாங்கையும் ஜீ தனது உரையில் மறுதலித்திருந்தார்.
தன் பதவிக் காலத்தை தன் ஆயுள்வரை நீடிக்க முயலும் ஜீ ஜின்பிங் இனித்தான் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.