கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து,
அந்தக் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார். மூன்று ஆண்டுக்காலம் ஆட்சியை வழிநடத்திய போரிஸ் ஜான்சன் பொருளாதாரத்தை சரியாகக் கையாளவில்லை என அவருக்கு எதிராக அமைச்சர்கள் குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன்பிறகு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்ற 45 நாள்களில் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன?!
போரிஸ் ஜான்சன்
பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய திணறிய லிஸ் ட்ரஸ்!
தற்போது, பிரிட்டனில் உள்ள மந்தமான பொருளாதாரத்தை மீட்க பிரதமர் லிஸ் ட்ரஸ் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் வசதியானவர்களுக்கு வரி சலுகை போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அது பொருளாதார நிலைமையை சரி செய்யாமல் டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பைக் குறைக்க வழி செய்தது.
அதனால் அந்த பட்ஜெட்டை திரும்பப் பெற்றார் அவர். மேலும், தவறான பொருளாதார நடவடிக்கை எடுத்ததற்கு அவர் மன்னிப்பும் கேட்டார்.
நிதிநிலையை சரி செய்ய எடுத்த நடவடிக்கையில் நிதியமைச்சரின் ஆலோசனை குறைவாக இருந்ததாகக் கூறி அவரை பதவியிலிருந்து நீக்கினார் லிஸ்.
இதன்பிறகு முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக அறிவித்தார்.
அவர் புதிய பட்ஜெட்டை வரும் அக்டோபர் 30-ம் தேதி தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகியிருக்கிறார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும், பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய தவறியதால்தான் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரேஸில் உள்ளவர்கள் யார்?
அடுத்த பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் கேள்வி எழுந்துள்ளது. அதில் முக்கியமான நான்கு பேர் போட்டியில் இருப்பதாக பிரிட்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
இதில் பொருளாதாரத்தில் முன் அனுபவம் அதிகமுள்ள ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஆதரவு குரல் எழுந்துள்ளது.
ரிஷி சுனக்
புதிய கருத்துக்கணிப்பு!
இதை உறுதிப்படுத்தும் வகையில் யூ-கோவ் (YOUGOV) என்னும் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் 55% பேர் ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதில் 38% பேர் மட்டுமே லிஸ் ட்ரஸ் பதவியில் நீடிக்க வேண்டுமென எனக் கருத்து தெரிவித்திருந்தனர்.
லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்
இந்த நிலையில், லிஸ் ட்ரஸ் பதவி விலகியிருப்பது பிரிட்டன் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கும் பிரதமர் யாராக இருந்தாலும் அவருக்கு `பொருளாதார சீரமைப்பு’ என்னும் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது.
இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!