இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்த முறை உளவாளிகளின் சோதனையான வாழ்க்கை, தண்ணீர் மாஃபியா என இருவேறு விஷயங்களைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் இது எதற்கான படம் என்ற குழப்பம் ஏற்படவே செய்கிறது.

தேச நலனுக்காகக் கஷ்டப்படும் உளவாளியின் மிஷனில் தண்ணீர் மாஃபியா கார்ப்பரேட் வில்லனை இணைத்தால் அதுதான் `சர்தார்’.

காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரியும் விஜய பிரகாஷ் ஒரு பப்ளிசிட்டி விரும்பி. காவல்துறை குறித்த ஒரு விஷயம் ட்விட்டரில் டிரெண்டானால் அதற்கு அவரே காரணமாக இருப்பார்.

அப்படி ஒரு விளம்பரத்துக்காக தன் பார்வைக்கு வரும் ஒரு தேசத்துரோக வழக்கைக் கையில் எடுக்கிறார்.

அதில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு பெண் மூலம், தண்ணீர் மாஃபியா, நாட்டின் நலனுக்காக உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஓர் உளவாளி, பக்கத்து நாடுகள் செய்யும் சதித்திட்டம் எனப் பல அரசியல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

அந்த உளவாளி யார், அவருக்கும் விஜய பிரகாஷுக்கும் என்ன சம்பந்தம், தண்ணீர் மாஃபியாவில் சம்பந்தப்பட்டிருக்கும் வில்லனுக்கும், அந்த உளவாளிக்கும் என்ன சம்பந்தம் எனப் பல கிளைக்கதைகளை ஒன்றிணைத்து விடைகளைச் சொல்கிறது மீதிக்கதை.

கோட் நேம் ‘சர்தார்’ என்னும் சந்திரபோஸ், காவல் ஆய்வாளர் விஜய பிரகாஷ் என இருவேறு பரிமாணத்தில் உலவும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் கார்த்தி.

ஆனால், நம்மை ஈர்ப்பது என்னமோ வயதான கார்த்தி மட்டுமே. சர்தார் என்ற பெயரில் அந்த முதிர்ச்சிக்குரிய நடுக்கம், உடல்மொழி,

அதே சமயம் பயிற்சிகள் பெற்ற ஓர் உளவாளிக்கான சாகச சண்டைக் காட்சிகள் என ஒரு நடிகராக அப்ளாஸ் பெறுகிறார். வில்லனாக வரும் சங்கி பாண்டேவுக்கு டப்பிங், லிப் சின்க் உள்ளிட்ட பிரச்னைகள் தட்டுப்பட்டாலும், மிரட்டலான வில்லனாக நம்பும்படி நடித்திருக்கிறார்.

நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன். ரஜிஷாவுக்கு மட்டும் பிளாஷ்பேக்கில் மனதில் நிற்கும் வேடம். கம்பேக் கொடுத்திருக்கும் லைலாவின் பாத்திரம்தான் கதையின் ஆரம்பப் புள்ளி,

ஆனால், அதைத் தாண்டி படத்தில் அவருக்குப் பெரிதாக வேலையில்லை. லைலாவின் மகனாக வரும் ரித்விக்கின் காட்சிகள் மற்றும் போலீஸாக வரும் கார்த்தியின் பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டையும் இணைத்துக் காட்டும் அந்த ஒப்பீடு நல்லதொரு எமோஷனல் எபிசோடு.

அதேபோல, இரண்டு மகன்கள் நேரடியாக ராணுவத்தில் பணியாற்றி பாராட்டுகளைப் பெறுவது, அதே குடும்பத்தில் உளவாளியாகப் பணியாற்றும் ஒருவன், சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்படுவது போன்ற காட்சியமைப்புகள், நாம் பெரிதும் அறிந்திராத உளவாளிகளின் இருத்தலியல் பிரச்னையை எடுத்துக் காட்டுகின்றன.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஏறுமயிலேறி’ பாடல் கதையின் ஓட்டத்தின் நடுவே ஸ்பீட் பிரேக்கராக வந்தாலும் ஈர்க்கவே செய்கிறது.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளில் அதிரடியாகக் கோணங்களை மாற்றி அப்ளாஸ் அள்ளுகிறது.

‘சர்தார்’ கார்த்தியின் சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்பராயன். குறிப்பாக அந்த வில்சேரில் வரும் மாஸ் சீன், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் அட்டகாசமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்த முறை உளவாளிகளின் சோதனையான வாழ்க்கை, தண்ணீர் மாஃபியா என இருவேறு விஷயங்களைக் கையில் எடுத்திருக்கிறார்.

ஆனால், ஒரு கட்டத்தில் இது எதற்கான படம் என்ற குழப்பம் ஏற்படவே செய்கிறது. குடி தண்ணீர், பெட் பாட்டில் அதன் பின்னுள்ள அரசியல் என்பதற்கான காட்சிகள், வசனங்கள் அனைத்திலுமே பழங்கால வாட்ஸ்அப் மெசேஜ்களின் வாடையே அடிக்கிறது.

தண்ணீர் அரசியல் குறித்து இறங்கி ஆராயாமல் மேலோட்டமாக நாளிதழ் செய்திகளை மட்டுமே வைத்து தரவுகளை அடுக்கியதாகவே காட்சிகள் நகர்கின்றன. அதிலும் இந்தியாவில் நீர்வளத்தை அபகரிக்க சீனச்சதி என்பது எல்லாம் ஏக்கர் கணக்கில் காதில் பூந்தோட்டம்.

போகிற போக்கில் எல்லா முதன்மை பாத்திரங்களும் தரவுகளைப் பேசுகின்றன. போதாக்குறைக்குச் சிறுவன் ரித்விக்குமே அரசியல் பேசுவது, வயதுக்கு மீறிய விவகாரங்களை அலசுவது என்று காட்சி அமைப்புகள் யதார்த்தத்தை எக்குத்தப்பாக மீறுகின்றன.

வில்லனாக வரும் சங்கி பாண்டே சர்வதேச நீதிமன்றத்தில் தன் தண்ணீர் நிறுவனம் சார்பாக வாதாடுவது, எக்ஸ் RAW அதிகாரி என்பதால், அதன் தலைமையகத்துக்கே சென்று தன் அதிகாரத்தை (?) காட்டுவது என ஒரு சதவிகிதம் கூட லாஜிக் இல்லாத காட்சிகள் தலைசுற்ற வைக்கின்றன.

என்னதான் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட விஸ்வாசமான உளவாளி என்றாலும், ‘சோழன் வருவான் மாரி பெய்யும்’ என்பது போன்று ‘கோட் ரெட்’ வரும் என்றே தன் வாழ்நாளில் பாதியை ஒருவர் வெளிநாட்டுச் சிறையில் கழிப்பது என்ன லாஜிக்கோ!

தமிழ் சினிமாவில் வில்லன் தேவையென்றால், ஏதோவொரு கோட்ஷூட் கார்ப்பரேட் ஆசாமியை இறக்குமதி செய்வது என்ற சம்பிரதாயம் இதிலும் தொடர்கிறது.

இதெல்லாம் தாண்டி, பாலிவுட் போலவே, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரி என்றால் பாகிஸ்தான் மற்றும் சீனாவை வாலன்டியராக ஷேர் ஆட்டோவில் ஏற்றிவிடுவது போன்றவை கற்பனை வறட்சியையே காட்டுகின்றன.

லாஜிக் குறைபாடுகள் ஒரு டஜன் இருந்தாலும், எங்குமே தேங்கி நிற்காத திரைக்கதை மற்றும் கார்த்தியின் நடிப்பு மட்டுமே இந்த `சர்தாரை’ காப்பாற்றுகின்றன.

 

 

Share.
Leave A Reply