தனியார் வகுப்பு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்க சங்கிலியை அறுத்த , இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

மடக்கி பிடிக்கப்பட்ட நபரை இராணுவத்தினர் மீட்டு செல்ல முற்பட்டமையால் பதட்டமான நிலைமை உருவாகிய நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனியார் வகுப்புக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை சிறுமியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த நபர் அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் சிறுமி நிலைமை தடுமாறி கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளானார்.

அதனை அவதானித்த ஊரவர்கள் ஒன்று திரண்டு வழிப்பறி கொள்ளை சந்தேக நபரை துரத்தி சென்று மடக்கி பிடித்ததுடன் , சிறுமியை சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.

மடக்கி பிடிக்கப்பட்டவரிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , குறித்த நபர் காங்கேசன்துறை கொல்லன்கலட்டி பகுதியை சேர்ந்தவர் எனவும் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிய வந்ததுடன், சிறுமியிடம் அறுத்த சங்கிலியும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பலாலி காவல்துறையினருக்கு ஊரவர்கள் அறிவித்த நிலையில் , காவல்துறையினருக்கு முன்னதாக இராணுவ தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து , குறித்த நபரை மீட்டு தம்முடன் அழைத்து செல்ல முற்பட்டனர்.

அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பலாலி காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply