கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வெனிஸ்டர் (32). இவர் வீடுகளில் அழகு சாதன மரவேலைப்பாடுகளை ஏற்படுத்தும் தொழில் செய்து வருகிறார்.

இவர் மனைவி பத்மா (30). ஆண்டனி வெனிஸ்டரும் பத்மாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 8 வயதிலும், 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். ஆனாலும் குழந்தைகளை கவனிப்பதற்காக இவர்கள் இருவரும் கடந்த 3 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஆண்டனி வெனிஸ்டர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவர் மனைவி பத்மா செல்போணில் நீண்ட நேரம் யாரிடமோ சிரித்து பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

`யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்?’ என ஆண்டனி வெனிஸ்டர் கேட்டதால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆன்டனி வெனிஸ்டர் தன் மனைவி பத்மாவின் கழுத்தை நெரித்துள்ளார். மூச்சுத்திணறி பத்மா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் பயந்துபோன ஆண்டனி வெனிஸ்டர் வீட்டைவிட்டு பதற்றத்துடன் வெளியேறியுள்ளார்.

அதைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதியினர் பத்மாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பத்மாவின் பெற்றோர் அங்கு சென்று மயக்க நிலையில் கிடந்த பத்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பத்மா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து பத்மாவின் பெற்றோர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வடசேரி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆண்டனி வெனிஸ்டர் வடசேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

காதல் மனைவியை கழுத்து நெரித்து கணவன் கொலைசெய்த சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply