இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் விளையாட்டரங்கில் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்திய குழு 2 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் அதிசயிக்கதக்க வகையில் வெற்றி ஈட்டியது.
விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
7ஆவது ஓவரில் இந்தியா 4ஆவது விக்கெட்டை ழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 31 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக இந்தியா தோல்வி அடையலாம் என பரவலாக கருதப்பட்டது.
ஆனால், தோல்விப் பாதையில் இருந்த இந்தியாவை விராத் கோஹ்லியும் ஹார்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்;டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து மீட்டெடுத்து அபார வெற்றிபெற வைத்தனர்.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் மொஹமத் நவாஸ் இழைத்த தவறுகளும் இந்தியாவுக்கு பரபரப்பான வெற்றிக்கு வழிவகுத்தது.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நவாஸ் முதல் பந்தில் ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றி பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டத்தை எடுத்து விராத் கோஹ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அடுத்த பந்தில் அவசரமான இரட்டையைப் பெற்ற விராத் கோஹ்லி, இடுப்புக்கு மேலாக வந்த 4ஆவது பந்தை சிக்ஸாக விளாசினார். அத்துடன் நோபோலுக்கான கேள்வியையும் எழுப்பினார்.
அதனை மத்தியஸ்தர் நோபாலாக அறிவிக்க, பாகிஸ்தான் வீரர்கள் மத்தியஸ்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், இறுதியில் மத்தியஸ்தர்களின் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து விளையாடினர்.
ஆனால் அடுத்த பந்து வைடானதால் தொடர்ந்து ப்றீ ஹிட் அமுலில் இருந்தது.
நவாஸின் 4ஆவது பந்து விக்கெட்டைப் பதம்பார்த்தபோதிலும் பந்து தேர்ட் மேன் திசையை நோக்கிச் செல்ல 3 உதிரி ஓட்டங்களை இந்தியா பெற்றது.
ஆனால், அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு அதிகரித்தது.
அடுத்தப் பந்து லெக் சைடில் வீசப்பட ரவிச்சந்திரன் அஷ்வின் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மத்தியஸ்தர் வைட் என அறிவித்தார்.
கடைசிப் பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட பாகிஸ்தான் களத்தடுப்பாளர்கள் 30 யார் வட்டத்திற்குள் நிறுத்தப்பட்டனர். ஆனால் கடைசிப் பந்தை அஷ்வின் நிதானத்துடன் உயர்தி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
விராத் கோஹ்லி 53 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஹார்த்திக் பாண்டியா 37 பந்துகளில் ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தானைப் போன்றே இந்தியாவின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (4) 2ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சிலும் கே. எல். ராகுல் (4) 4ஆவது ஓவரில் நசீம் ஷாவின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த சூரியகுமார் யாதவ் 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்மிழந்தார். இது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
துடுப்பாட்ட வரிசையில் அக்சார் பட்டேல் 5ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட அனுப்பப்பட்டார். ஆனால், அவர் இல்லாத ஓர் ஓட்டத்தை அவசரப்பட்டு எடுக்கு முயற்சித்து வீணாக விக்கெட்டை தாரை வார்த்தார். (31 – 4 விக்.)
இதன் காரணமாக இந்தியா படுதோல்வி அடையுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் 5ஆவது விக்கெட்டில் அதிரடியாக 113 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 20 ஓவரகளில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் பாபர் அஸாம் (0) 2ஆவது ஓவரிலும் மொஹமத் ரிஸ்வான் (4) 4ஆவது ஓவரிலும் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். (15 – 2 விக்.)
ஆனால். அதனைத் தொடர்ந்து ஷான் மசூத், இப்திகார் அஹ்மத் ஆகிய இருவரும் பொறுப்பாகவும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானைப் பலப்படுத்தினர்.
இப்திகார் அஹ்மத் 34 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்கடையும் வீழ்ந்தினர். (120 – 7 விக்.)
எனினும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷான் மசூதுடன் 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷஹீன் ஷா அப்றிடி 31 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார்.
ஷஹீன் ஷா அப்றிடி 16 ஓடட்ங்களைப் பெற்றிருந்தபோது கடைசி ஓவரில் புவ்ணேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அவரிடமே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷான் மசூத் 42 பந்தகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
ஹரிஸ் ரவூப் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.