பல தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அரசியலமைப்பின் 34வது சரத்திற்கு அமைய, இலங்கை நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே, குறித்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சில தமிழ் அரசியல்வாதிகள், ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பெறுபேறாக இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டில் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த விசாரணை அறிக்கை நீதி அமைச்சர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இந்த கைதிகளின் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த செய்ய குற்றச்சாட்டில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இணக்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் சிறைத் தண்டனையை அனுபவிக்க இருக்கும் கால எல்லை குறைக்கப்பட்டு, கொழும்பு – மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் 4 கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர், தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறு கோரி முன்வைத்த மேன்முறையீட்டை வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும், இரண்டு தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில் அடங்குகின்றனர்.

பொங்கல் தினத்தில் மேலும் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை.

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தில் மேலும் ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி எண்ணியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளும்னற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

தீபாவளி தின தேசிய நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது, பொங்கலுக்கு இன்னுமொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்கும் தனது கோரிக்கைக்கு, ஜனாதிபதி கொள்கை ரீதியில் இணக்கத்தை வெளியிட்டார் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு நன்றி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கும், நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பிற்கும் இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி விசேட இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனைகளின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்ததாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

அதேபோன்று, சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதியான ரகுபதி சர்மாவின் விடுதலையை தாம் விசேடமாக வலியுறுத்தியதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது.

அதேபோன்று, சுமார் 10 வருடங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Share.
Leave A Reply