ரஷ்யாவிற்கு இன்னொரு பெயரும் உண்டு, “The Russian Bear” Bear என்பதே ஒர் ரஷ்ய சொல் ஆனாலும் ரஷ்யர்கள் அதனை அப்படி அழைக்க விரும்பவில்லை, மாறாக அதை “ Medved” என்று தான் அழைக்கிறார்,

Bear

அதாவது தேனை விரும்பி உண்ணும் விலங்கு என்பதே அதன் பொருள், Bear(கரடி )என்றழைத்து அதன் இயல்பான மூர்க்க குணத்தை அவர்கள் தட்டி எழுப்ப விரும்பவில்லை. அது பல காலம் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருக்கும், விழித்திருக்கும் காலங்களில் மூர்கமான போர்க்குணத்துடன் இருக்கிறது.

கண்டங்கள் தாண்டி மலைகளாகவும், நதிகளாகவும் ஊசியிலைக்காடுகளாகவும் பரந்து விரிந்த பனிப்பாலைவனமாகவும் மிக விசாலமாக இருக்கிற ரஷ்யா என்கிற நாட்டை இந்த நவீன யுக வேக ரயிலில் கூட சுற்றி வரவே ஏழு இரவுகளும் ஆறு நாட்களும் எடுக்கிறது. பதினொரு ( Time zones ) நேர மண்டலங்களை உள்ளடக்கியது.

மேலும் சொல்வதானால், ரஷ்யா பிரித்தானியாவை விட எழுபது மடங்கு பெரியது, அமெரிக்கா மற்றும் சீனாவை விட இரண்டு மடங்கு பெரியது, இந்தியாவை விட ஐந்து மடங்கு பெரியது. இருப்பினும் சனத்தொகை என்று பார்த்தால் வெறும் 140 மில்லியன்கள் மட்டுமே, கிட்டத்தட்ட பாகிஸ்த்தான் சனத்தொகை அளவு.

1812 ல் நெப்போலியன் ரஷ்யாவை படையெடுத்த காலத்தில் இருந்து அண்ணளவாக கணக்கிட்டுப்பார்த்தால் முப்பது வருடத்திற்கொருமுறை ரஷ்யா மேற்கு ஐரோயோப்பிய நிலத்தில் இருந்த வந்த படையெடுப்புக்களும் ஆக்கிரமிப்புக்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியிடம் இருந்து கைப்பற்றிய சில மத்திய கிழக்கு ஐரோப்பிய பிரதேசங்கள் பல சோவியத் யூனியனின் பகுதியாகின. அது பழம் பெரும் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கு நிகராக இருந்தது.

ரஷ்ய சர்வாதிகாரத்திற்கெதிராக 1949 ஆம் ஆண்டு The North Atlantic Treaty Organisation ( NATO) என்ற அமைப்பை ஐரோப்பியர்களும் வட அமெரிக்கர்களும் சேர்ந்து உருவாக்கினர் .

இதன் முழு நோக்கமே ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக சேர்ந்து போரிடுவதாகும்.

இதற்கு எதிராக ரஷ்யா Warsaw Pact என்று ஒரு அமைப்பை 1955 ல் தன் நேச நாடுகளுடன் சேர்ந்து உருவாக்கியது.

Warsaw Pact ஐ இரும்பினால் செய்யப்பட்ட ஒப்பந்தமாக ரஷ்யா நினைத்திருந்தாலும் அது 1980 களில் துருப்பிடிக்க தொடங்கியது,

1991 ல் கிழக்கு ஜேர்மனியின் சுவர் உடைந்ததும் Warsaw Pact மண்ணோடு மண்ணானது,

Russia. The modern names for the other republics are Estonia, Latvia, Lithuania, Belarus, Ukraine, Moldova, Georgia, Armenia, Azerbaijan, Kazakhstan, Turkmenistan, Uzbekistan, Tajikistan, and Kyrgyzstan. The capital of the Soviet Union was Moscow.

சோவியத் யூனியன் என்ற மாபெரும் கட்டமைப்ப்பு உடைந்து சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பதினைந்து புது நாடுகள் உருவாகின.

அன்றிலிருந்து ரஷ்யாவின் பதட்டம் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதை உலகம் அவதானிக்கிறது,

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் பலவற்றை NATO தன்னோடு இணைத்தமை ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது.

NATO இந்த நாடுகளை அதில் இணைக்க மாட்டோம் என்று ரஷ்யாவிற்கு உறுதி மொழி அளித்த போதும் அது அதனை கடைப்பிடிக்கவில்லை.

செக் றெப்பப்ளிக், ஹங்கேரி, பல்கேரியா, றுமேனியா , எஸ்ரோனியா , அல்பேனியா என்று ஒவ்வொன்றாய் NATO வுடன் இணைவதை எச்சரிக்கை உணர்வுடன் ரஷ்யா கவனித்து வந்தது, சில நாடுகள் ஐரோப்பிய யூனியனோடு இணைந்தன. இதுவும் ரஷ்யாவிற்கு ஒவ்வாத ஒன்றுதான்.

முன்னாள் சோவியத் யூனியனின் சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்க கொள்ளவே அவசர அவசரமாக இந்த நாடுகள் மேற்கோடு இணைந்தன என்பது ஓர் உலக கணிப்பு.

ஐரோப்பிய யூனியனுக்கு நிகராக ரஷ்யா CSTO ( Collective Security Treaty Organisation) என்ற கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது,

இதில் கிறிகிஸ்ரான் , ரஜிஸ்கிஸ்ரான் மற்றும் ஆர்மேனியா சேர்க்கப்பட்டது. இதனை அரசறிவியலார்கள் “ poor man’s Europe “ என்றழைக்கிறார்கள். இது ஒரு போதும் ஐரோப்பிய யூனியனின் பலத்திற்கு இணையாக மாட்டாது என்பது அவர்கள் கணிப்பு.

மேலும் ஜோர்ஜியா , உக்ரைன் மற்றும் மோல்டோவா போன்ற நாடுகளும் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தவை தான்,

NATO மற்றும் ஐரோப்பிய யூனியனோடு இணைவதில் இந்த நாடுகள் ஆர்வம் காட்டினாலும் இந்த நாடுகள் ரஷ்யாவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதனாலும் அவர்கள் நிலத்தில் ரஷ்ய படைகள் இருப்பதனாலும் எரிவாயுக்காக ரஷ்யாவில் உக்ரைன் தங்கியிருப்பதனாலும் அது மேற்குடனும் ரஷ்யாவுடனும் ஓர் நடுநிலையான உறவை பேணிப்பாதுகாத்து வந்தது.

ஆனால் 2013 ல் உக்ரைன் பிரதமர் விக்றர் யனுகோவிற்ச் விலாங்கு மீன் போல இரண்டு பக்கமும் நட்புறவை பேணுவது போல பாசாங்கு செய்து வந்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஐரோப்பிய யூனியனோடு கைச்சாத்திட ஆயத்தமாகியது,

அது பின்னர் அந்த உறவு ஐரோப்பிய யூனியனுடன் அங்கத்துவம் என்ற அளவிற்கு வளர்ந்து விடும் பின்னர் அது NATO வுடனும் சேர்ந்து விடும் என்பதனாலும் விலாடிமியர் பூட்டினுக்கு உடனடியாக உக்கிரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

ரஷ்யாவின் ஒரே warm water port என்றழைக்கப்படும் Sevastopol என்கிற துறைமுகத்தின் அமைவிடம் கிரிமியாவாக இருந்தது.

அப்படி கிரிமியாவை இணைக்காமல் போயிருந்தால் ஒர் காலத்தில் உக்ரைன் அமெரிக்காவிற்கும் மேற்கிற்கும் இந்த துறைமுகத்தில் கடற்படைத்தளம் அமைத்து குடுத்துவிட்டிருக்க கூடும்.

இந்த காலகட்டத்தில் ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உக்ரைனில் மேற்குற்கு சாதகமான எதிர்கட்சியை வளர்க்க நிதியுதவியும் கல்வி உதவிகளையும் வழங்கின.

2014 Feb 22 ல் கிரிமியாவை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின் உக்கிரைன் பிரதமர் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் மேற்கிற்கு சார்பான ஆட்சி அதிகாரம் உக்ரைன் தலைநகரான Kiev ல் உருவானது.

கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிய பின் விலாடிமியர் பூட்டின் “ ரஷ்யா தன் இடத்தை கண்டெடுத்து விட்டது இனி ஒரு போதும் அது இந்த நிலையில் இருந்து பின்வாங்காது” . என்று உரையாற்றினார.

மேலும் கிழக்கு உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் 60 வீதமான மக்களை புதிய இடைக்கால நிர்வாக உக்ரைன் ஆட்சியார்கள் அடிமைப்படுத்துகிறார்கள் என்று காரணம் காட்டி கிழக்கு உக்ரைன் பிரிந்து தனிநாடு ஆக வேண்டும் என்று மறைமுகமாக சின்ன விரிசல்களை பெரிதாக்கி அந்த நாட்டில் இன முரண்பாடுகளை மறைமுகமாக வளர்த்தெடுத்து கொழுந்து விட்டு எரிய வைத்தது.

இதனால் கிழக்கு உக்ரைன் ஆன லுஹான்ஸ் மற்றும் ரொன்ஸாக் ல் இனப்பிரச்சனை உருவானது . கிழக்கு உக்ரைன் ரஷ்யாவிற்கு நேச நாடாக தனி நாடு ஆனால் அதை தன் buffer zone ஆக வைத்துக்கொள்ளலாம் என்பது ரஷ்யாவின் உள்நோக்கமாக இருந்தது.

அந்த அரசியல் நகர்வை இந்த வாரம் ரஷ்ய அதிபர் தனது படைகளை கிழக்கு உக்ரைன் அனுப்பி நிறைவேற்றியுள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ் மற்றும் ரொன்ஸாக் ஐ உக்ரைனில் இருந்து பிரித்து அவைகளை சுயாட்சி பிரதேசங்களாக ஒருதலைப்பட்சமாக பிரகடனப்படுத்தி இருப்பது NATO ற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.

ஒரு நாட்டை படையெடுத்து அதில் ஒரு பகுதியை தனிநாடாக பிரகடனப்படுத்துவது உலக அரசியல் ஒழுங்கிற்கு புறம்பானது, உக்ரைன் இறையாண்மைக்கு புறம்பானது என்றெல்லாம் NATO வும் அதன் சார்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன, இருந்தும் இதை அமெரிக்கா அறைகூவுவது முரண்நகை. ஏனெனில் அமெரிக்கா பல நாடுகளை படையெடுத்து பிரித்ததும் சேர்த்தும் உலகறிந்த ஒன்று.
.
இதுவரை செய்வதறியாது இருதலைப்கொள்ளியாக அமைதி காத்த ஜேர்மனி NATO வுடன் சேர்ந்து இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு ரஷ்யாவோடு இணைந்து நடத்தி வந்த NORD Stream 2 திட்டத்தை இடைநிறுத்தி வைத்திருக்கிறது.

மற்றும் NATO வும் அதன் நட்பு நாடுகளிள் தலைவர்களும் ரஷ்ய அதிபருக்கு மிக நெருக்மான பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்குகளை தாங்கள் முடக்கியுள்ளதாகவும் ரஷ்ய வங்கிகளை முடக்கியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த பொருளாதார முடக்கங்கள் எல்லாமே மூன்று வருடங்களுக்கு முன்னர் செய்த ஒன்று தான் என்றும் மீண்டும் இவற்றை புதிய முடக்கங்கள் என்று அறிவிப்பது செத்த பாம்பை அடிக்கும் செயல் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். பேலும் இப்படிப்பட்ட முடக்கங்களை ஏற்கனவே எதிர்ப்பார்த்த ரஷ்யா பொருளாதாரத்தில் கீழே விழாமல் இருக்க நிதி களஞ்சிய்த்தில் போதுமான சேமிப்பை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஆட்சியை கவிழ்க்க ரஷ்யா பல மில்லியன் ராணுவத்தின் உயிரைக்கொடுத்த கடனும் ரஷ்யா மேல் ஜேர்மனிக்கு உண்டு அதனாலும் வர்த்க ஒப்பந்தங்களினாலும் ரஷ்யாவோடு ஜேர்மனி பின்னிப்பிணைந்துள்ளது. ஜேர்மன எவ்வளவு தூரம் ரஷ்யா மீது எதிர்ப்பை காட்ட முடியும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

Sevestatopol என்பது ரஷ்யாவின் பிரதானமான பனியால் உறையாத ஓர் துறைமுமாக இருந்தாலும், கருங்கடலில் இருந்து வெளியேறி மத்திய தரைக்கடலில் நுளைவதற்கான கடல் பாதை Montreux Convention of 1936 என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் Bosporus நீரிணை NATO ல் அங்கத்துவம் வகிக்கும் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது,

ஆகவே அந்த நீரிணையில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடே ரஷ்யாவிற்கு இருக்கிறது. அப்படி அது Bosporus நீரிணையை கடந்து Aegean கடலை அடைந்தே Gibraltar நீரிணையை அடைந்து அட்லாண்டிக் கடலை அடைந்து பின் சூஸ் கால்வாய் சென்றே இந்திய சமுத்திரத்தை அடைய முடியும்,

அதிலும் நிறைய NATO நாடுகளுக்கு சொந்தமான கால்வாய்களினூடு செல்ல முடியாத நிலை உண்டு. குறிப்பாக GUIK gap ( Greenland, Iceland, U.K.) என்ற NATO விற்கு சொந்தமான வடக்கு கடல் கால்வாய் தடைதான்.

ரஷ்யா 2014 ல் கிரிமியாவை தன்னோடு பலவந்தமாக இணைத்தது ரஷ்யாவின் சர்வாதிகாரம் என்ற தினுசில் மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரைனின் இழப்பிற்காக வருந்தியது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை என்பது உலகத்திற்கு வெளிச்சமாக தெரிந்த ஒரு விடயம்.
கிரிமியாவை இணைத்த கையோடு ரஷ்யா Sevestapol துறைமுகத்தில் அதன் கடற்படை பலத்தை அதிகரிக்கும் முகமாக பதினெட்டு போர்க்கப்பல்களை தயார் நிலையில் அங்கு நிறுத்தியுள்ளது. கருங்கடலில் இருந்து வரும் ஆபத்துக்களை சந்திக்க ரஷ்ய தயார் நிலையில் உள்ளது.

இதற்கு முகம் கொடுக்கும் விதமாக அமெரிக்கா தனது NATO கூட்டாளிகளான ரொமேனியாவில் தனது புஜ பலத்தை அதிகரிக்கும் அதே நேரம் துருக்கியை Bosporus நீரிணையில் ரஷ்யாவை தடுக்க கோரும்.

இன்று NATO. ல் அங்கத்துவம் வகிக்கும் துருக்கி உக்ரைன் எல்லையில் படைகளையும் கன ரக வாகனங்களையும் குவித்த வண்ணம் உள்ள ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கண்டிக்கும் அதே நேரம் துருக்கி கருங்கடல் எல்லைகளை ரஷ்யா மற்றும் உக்ரைனோடு பகிர்ந்து கொள்கிற நாடு என்பதனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பது அறிவான செயலாக இருக்காது என்றும் அறிக்கை விட்டிருந்தது.

ஆனால் இன்றைய நிலை கைமீறி விட்டது. துருக்கி NATO ல் அங்கம் வகித்த போதிலும் அது ரஷ்யாவுடன் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் ராஐதந்திர உறவில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துருக்கி போலவே உக்ரைன் கூட மேற்கு அதற்கு வலிந்து கட்டி செய்யும் மிலிட்டரி படைக்குவிப்பு உதவுகளை உபத்திரம் என்றே எண்ணியது , இப்படி உக்ரைனை ரஷ்ய படைகளை தாக்கி கைப்பற்றும் நிலைக்கு இன்று மேற்கின் செயல் இட்டுச்சென்றிருக்கிறது.

உக்ரைனை அச்துறுத்தும் ரஷ்யாவை ஜேர்மனி கண்டும் காணாமல்்இருந்ததை பற்றி அமெரிக்கா விசனம் தெரிவித்திருந்தது. ஜேர்மனிக்கு எரிவாயுவை வழங்கும் நாடாக ரஷ்யா இருப்பதனால் ஜேர்மனி அப்படி இருக்கிறது என்பது அமெக்காவிற்கு தெரியாத ஒன்று அல்ல.

எரிவாயு தேவைக்காக ரஷ்யாவில் தங்கி இருக்கும் ஜேர்மனியையும் இதர ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவோடு பகையை வளர்க்க அமெரிக்கா ஏன் தூண்டியது?

அமெரிக்காவிடம் இப்போது Shale எரிவாயு தாராளமாக இருக்கிறது. அதனது தேவைக்கு மேலேயே இருக்கிறது. ஐரோப்பாவிற்கு எரிவாயு தேவைப்படுகிறது. ரஷ்யாவின் வெளியுறவு கொள்கைகளோடு முரண்பட முட்டுக்கட்டையாக இருப்பது இந்த எரிவாயுத்தேவைக்கு அதில் அவை தங்கி இருப்பதனால் தான்.

ரஷ்யாவின் South Stream மற்றும் Turk Stream எனப்படும் எரிவாயு திட்டங்கள் உக்ரைன் ஊடாக செல்லாமல் உக்ரைனை தவிர்த்து செல்வதனால் உக்ரைனுக்கு அதலிருந்து கிடைக்க கூடிய கணிசமான வருமானம் அதற்கு கிடைக்காமல் போய்விட்டது. இது உக்ரைனை மேலும் பொருளாதாரத்தில் வீழ்த்தும் ஓர் யுக்தி. மேற்குடன் நட்புறவில் இருப்பதனால் இப்படி ரஷ்யா அதை தள்ளி வைத்திருந்தது.

அமெரிக்காவிற்கு ஐரோப்பிய எரிவாயு சந்தையை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல அட்லான்டிக் கடல் வழி pipe line களினூடே கடத்த வேண்டும், Liquefied Natual Gas என்னும் திரவ வடிவத்தில் கடத்த வேண்டும் அதை மீண்டும் விநியோகிப்பதற்குமுன் எரிவாயு வடிவத்திற்கு மாற்ற வேண்டும் அதற்கு ஐரோப்பிய நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் LGN terminal களை உருவாக்க வேண்டும். அதை ஏற்கனவே பல NATO நாடுகளான போலந்து மற்றும் லத்துவேனியாவில் உருவாக்கி வருகிறது. செக் றெப்பப்ளிக் இப்படியான terminal களை உருவாக்கி வருகிறது.

இன்று ஐரோப்பிய யூனியனில் கிட்டத்தட்ட முப்பது LNG terminal கள் உள்ளன. போர்ச்சூழலில் ரஷ்யா எரிவாயுவை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு வழங்க மறுத்தால் ்அந்த நாடுகளுக்கு இந்த terminal களிலிருந்து எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்பதும் உறுதி. ஆகவே ரஷ்யாவிற்கு அந்த பிடிமானம் கூட buffer state ஆக இருந்து வருகிற அயல் நாடுகளிடம் இன்று கிடையாது.

ரஷ்யாவுடம் இருந்து கிடைக்கும் எரிவாயு ஒப்பீட்ளவில் விலைகுறைவாக இருந்தாலும் அதை பெற்றுக்கொள்ளும் நாடுகள் ரஷ்ய வெளிவிவகார கொள்கைகளில் முரண்பட முடியாதபடி அந்த வர்த்தக உறவு அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்,

அமெரிக்க எரிவாயு முற்று முழுதாக ரஷ்ய சந்தையை கைப்பற்ற முடியாது ஏனெனில் ரஷ்ய எரிவாயு மலிவானது.

ரஷ்யா தனது எரிவாயுவை விற்க வேறோர் சந்தையை தேர்ந்தெடுத்து விட்டது, அது சீனாவிற்கு 2020 ல் இருந்து விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. $400 billion பெறுமதியான எரிவாயுவை வாங்குவதற்கான முப்பது வருட ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை அது சீனாவுடன் செய்திருக்கிறது.

சீனாவோடிருந்த பழைய அரசியல் பொருளாதாரம் சார்ந்த சித்தாங்களில் இருந்த முரண்பாடுகளை கொண்டாட சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் நேர அவகாசம் கிடையாது, சீனாவின் one belt road என்ற உலகெங்கும் வியாபித்திருககும்ம் கடற்படை தளங்களும் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தமும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இன்று நிலவும் பகையும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாட்டை இரு பெரும் வல்லரசுகளையும் ஒர் அணியாக சேர வைத்திருக்கிறது.

ஆகவே இந்த உலகம் இவ்வளவு காலமும் இருந்து வந்தது போன்று bipolar world என்று சொல்லப்படும் இருமுனை அரசுகளின் ஆதிக்கத்தில் அல்லாமல் multipolar என்ற பலமுனை வல்லரசுகளின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது.

ஆகவே யார் யாரெல்லாம் எப்போது எந்தெந்த நாடுகளோடு எப்பேர்பட்ட நலன்களுக்காக கூட்டு சேர்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சர்வாதிகார வெறி கொண்டு ஆண்களினால் நடாத்தப்படும் இந்த வீர விளையாட்டின் சிக்கி சின்னாபின்னமாகப்போவது வழமைபோல் யார் எதற்காக போராடுகிறார்களல என்று போரின் காரணங்கள் ஏதும் அறியாத சாதாரண மக்கள் தான்.

மீண்டும் ஓர் cross fire ல் சிக்கிய அவர்கள் மேலும் அகதி முத்திரை குத்தப்படும். ஊர் பேர் தெரியாத நாடுகளில் கையேந்தி நிற்பார்கள் , அவர்கள் கதைகளும் இலக்கிய வடிவம் பெற்று லிபரல் மேற்கினால் கொண்டாடப்படும்.

கௌரி பரா

Share.
Leave A Reply