பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70.

வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

“இது அவரைக் கொல்வதற்கான முயற்சி, படுகொலை செய்வதற்கான முயற்சி,” என்று அவரது மூத்த உதவியாளர் ஒருவர் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் கூறினார்.

இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் பிறகு கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஜியோ டிவி தெரிவிக்கிறது.

ஏப்ரல் மாதம் அவர் ஆட்சி கவிழ்ந்த நிலையில், உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்திவந்தார் இம்ரான். அப்போதுதான் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இது தொடர்பான காட்சிகளில் அவர் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

இம்ரான்கான் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக பிடிஐ கட்சித் தலைவரும், மாகாண சுகாதார அமைச்சருமான யாஸ்மீன் ரஷீத் கூறினார்.

தகுதி நீக்கம்

பொதுப் பதவிகள் எதையும் இம்ரான்கான் வகிக்கக்கூடாது என்று கடந்த மாதம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணமான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.

பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்கள் தொடர்பாக தவறான விவரங்களைத் தாக்கல் செய்ததாகவும், அவை விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவற்றின் மூலம் வந்த வருவாய் விவரத்தையும் தவறாகக் காட்டியிருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், மோதிரம், கஃப்லிங்குகள் போன்றவை இந்த சர்ச்சைக்குரிய பரிசுப் பொருள்களில் அடக்கம்.

காயமடைந்த பிரிஐ பிரமுகர் பைசால்  ஜாவித்

இம்ரான் கான் மீது 3, 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பிரிஐ கட்சியின் பிரமுகர் இம்ரான் இஸ்மாயில் தெரிவித்துளளார்.

காயமடைந்த இம்ரான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொள்கலன் வாகனத்திலிருந்து இறங்கும்போது ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார்

 

Share.
Leave A Reply