நடிகர்கள்: ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி, மாளவிகா ஷர்மா, ரைஸா வில்ஸன், அம்ருதா, ஐஸ்வர்யா தத்தா, பிரதாப் போத்தன்; இசை: யுவன் சங்கர் ராஜா; இயக்கம்: சுந்தர் சி.

பொன்னியின் செல்வன், தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபத்து இந்த வாரம் காஃபி வித் காதல், லவ் டுடே, நித்தம் ஒரு வானம், பனாரஸ் என ஏகப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள காஃபி வித் காதல் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

இந்தப் படத்தின் கதை இதுதான்: ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த், டிடி ஆகியோர் சகோதர, சகோதரிகள். ஏற்கனவே சம்யுக்தாவைத் திருமணம் செய்திருக்கும் ஸ்ரீகாந்துக்கு ஒரு நாள் ரைஸா வில்சனுடன் உறவு ஏற்படுகிறது.

ரைஸா வில்சனை அவருடைய தம்பி ஜீவாகுக்கு நிச்சியம் செய்கிறார்கள். ஜீவா ஏற்கனவே ஐஸ்வர்யா தத்தாவுடன் ஒரு லிவ் – இன் உறவில் இருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா அவரை கழற்றிவிடுகிறார். இதனால், அவர் மாளவிகா சர்மாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால், மாளவிகா சர்மாவை அவருடைய தம்பி ஜெய்க்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள். மாளவிகா சர்மாவின் சொத்துக்காக ஜெய் அவரைக் கல்யாணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டாலும் அவர் உண்மையிலேயே சிறுவயதுத் தோழி அம்ருதாவைக் காதலிக்கிறார்.

ஆனால், ஜெய் இத்தனை ஆண்டுகளாக ஏதும் சொல்லாததால், அவர் தன் குடும்ப நண்பரான ஆனந்த் நாகை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

சுந்தர் சி இயக்கியிருக்கும் இந்தப் படம் மிகுந்த அயற்சியை ஏற்படுத்துவதோடு, எங்காவது தூர தேசத்திற்குப் பறந்துபோய்விடலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறது The Hindu நாளிதழின் இணைய விமர்சனம்.

“இந்தப் படத்தின் கதை ஆர்வமேற்படுத்துவதாக இருக்கிறது. ஆனால், அறிமுகம், திரைக்கதையைக் கையாண்டவிதம், படத்தில் வரும் பிரச்சனைக்குத் தீர்வு ஆகியவை பெரிய அளவில் ஏமாற்றமளிக்கின்றன.

உதாரணமாக ஜீவா மூன்று ஆண்டுகளாக லிவ் – இன் உறவில் இருக்கிறார். இருவரும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.

ஆனால், அந்தப் பெண் தனது தற்போது பெரிய நட்சத்திரமாக இருக்கும் பழைய நண்பனைப் பார்த்தவுடன் அவனுடன் சென்றுவிடுகிறாள். ஜீவா மனமுடைந்து போகிறார்.

ஆனால், நமக்கு எவ்விதம் உணர்வும் ஏற்படுவதில்லை. காரணம், படத்தின் உணர்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

எல்லாவித உணர்வுகளையும் படத்தில் எதிரொலிக்கச் செய்ய முயன்றிருக்கிறார் சுந்தர் சி. ஆகவே, ஒரு சந்தோஷமான குடும்பப் பாட்டு, ஒரு சோகப் பாட்டு, ஒரு குத்துப் பாட்டு என நகர்கிறது படம்.

படத்தில் வரும் சீரியஸான பிரச்சனைகளை இயக்குநரே மிகச் சாதாரணமாக கையாளுவதால், நமக்கு எந்தப் பிரச்சனையையும் சீரியஸாக எடுக்கத் தோன்றுவதில்லை. உதாரணமாக, ஸ்ரீ காந்திற்கு ஒரு பெண்ணோடு உறவு இருக்கிறது.

அந்தப் பெண்ணை ஜீவாவுக்கு நிச்சயம் செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பிரச்சனை. ஆனால், இதை காமெடியாகக் கடந்திருக்கிறார்கள்.

படத்தில் வரும் பெரிய பெரிய மோதல்களை, பிரச்சனைகளை வாட்ஸப்பில் வரும் ஏதாவது ஒரு மொக்கை வசனத்தைப் போன்ற ஒன்றைச் சொல்லி தீர்த்துவைத்துவிடுகிறார்கள். யோகி பாபுவும் ரெடின் கிங்க்ஸ்லியும் வரும் காமெடி காட்சிகளும் பெரிதாக ஒர்க் – அவுட் ஆகவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசையோ அல்லது யாருடைய நடிப்போ படத்தை தூக்கி நிறுத்த எந்த விதத்திலும் உதவவில்லை” என்கிறது The Hindu.

சிரிப்புக்குப் பஞ்சமில்லை

சுந்தர்.சி படம் என்றாலே சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியிருக்கிறார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய தளம்.

“முக்கோண காதல் கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல என்றாலும் அதை மீண்டும் ஒரு முறை புதுப்பித்து அழகாக திரைக்கதை அமைத்து, அற்புதமான ஒரு ஜாலியான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

பல வருட காலமாக ஒரு நல்ல வெற்றிக்கு ஏங்கும் ஜீவாவிற்கு கம் – பேக்காக இப்படம் அமைந்துள்ளது.

அவருடைய எதார்த்தமான நடிப்பு மீண்டும் ‘சிவா மனசுல சக்தி’ ஜீவாவை நினைவூட்டுகிறது. பிரிந்த காதலை நினைத்து கலங்கும் காட்சிகளில் சிறந்த நடிகராகவும் திகழ்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரீ கொடுத்திருக்கிறார் ஶ்ரீகாந்த். அவருக்கு மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம். மனைவி இருக்கும் போதே வேறு பெண்ணுடன் சபலம் கொண்டு, பின் தன் தவறை உணர்ந்து திருந்தும் மியூசிக் டீச்சராக சிறப்பாக நடித்துள்ளார்.

ஜெய்க்கு மற்றுமொரு ஜாலியான ரோல், அதனை தரமாக செய்துள்ளார். மேரேஜ் காண்ட்ராக்டர்களாக வரும் யோகி பாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

மறைந்த பிரதாப் போத்தனின் நடிப்பு யதார்த்தம். திவ்யதர்ஷினிக்கு ஒரு குட்டி கேரக்டர் என்றாலும் அதை அழகாக செய்து இருக்கிறார்.

சுந்தர்.சி படம் என்றாலே சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியிருக்கிறார். சில காட்சிகள் குடும்ப ரசிகர்களுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தலாம்.

இது போன்ற ஒரு கடினமான கதையை வைத்துக்கொண்டு அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து படத்தை ஜாலியாக கொண்டு சென்று இறுதியில் படம் முடிந்து வெளியே வருபவர்கள் ஒரு புன்சிரிப்புடனும் ஒரு நல்ல இதயபூர்வமான படம் பார்த்த திருப்தியில் வருகிறார்கள்

மொத்தத்தில் காபி வித் காதல் – ஆனந்தம்” என மிக பாசிட்டிவான ஒரு விமர்சனத்தைத் தந்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

இயக்குநர் சுந்தர். சி. தனது வழக்கமான பாணியில் சென்றிருந்தால் இன்னும் கலகலப்பான திரைப்படமாக வந்திருக்கும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.

“கதையில் இருக்கும் குழப்பம் உங்கள் தலையைச் சுற்ற வைக்கிறதென்றால், பலவீனமான திரைக்கதையும் சுமாரான நடிப்பும் நம்முடைய மனநிலையை இன்னும் மோசமாக்குகின்றன. இதற்கு நடுவில், “ஒய்ஃபை ஒய்ஃபா பார்த்தா பிரச்சனைதான். ஒய்வை லைஃபா பாரு”, “அட்ராக்ஷன் ஆயிரம் பேரு மேல வரலாம். ஆனால், அஃபெக்ஷன் ஒருத்தர் கிட்டத்தான் வரும்” அரதப் பழசான வசனங்கள் வேறு.

படத்தில் இடைவேளைக்கு முன்பாக, குழப்பங்களை வைத்து செய்யும் தனக்கே உரிய காமெடிக்குத் திரும்பும்போது படத்தல் கலகலப்பு அதிகரிக்கிறது. இந்தக் காட்சிகளில் நடிகர்களும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அந்த வழியிலேயே இயக்குநர் சென்றிருந்தால், படம் எவ்வளவு பொழுதுபோக்காக அமைந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. அப்படிச் செய்திருந்தால், இப்படி சுவையில்லாத ஒரு கலவைக்குப் பதிலாக காஃபி வித் கலகலப்பு வந்திருக்கும்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும் மிக நிராசையான முயற்சியாக அமைந்திருக்கிறது.” என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

Share.
Leave A Reply