இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, கடன் வழங்கிய நாடுகளுடன், கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத தேவையாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவையும் சீனாவையும் சமாளித்தால் தான், அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க கூடிய நிலை காணப்படுகிறது.

ஜப்பானைக் கொண்டு, சர்வதேச கடன் வழங்குநர்களின் மாநாட்டைக் கூட்டுகின்ற முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கொள்கை அளவில் ஜப்பான் இதற்குத் தயாராக இருப்பதாக கூறினாலும், அதிகாரபூர்வமாக அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, சர்வதேச கடன் வழங்குநர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை வகிக்க ஜப்பான் இணங்கியிருப்பதாக கூறியிருந்தார்.

அவர் அதனை அறிவித்த சில மணிநேரங்களிலேயே, டோக்கியோவில் இருந்து மறுப்பு வெளியானது.

இதுவரை அவ்வாறான எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று ஜப்பான் அறிவித்தது.

ஜப்பானின் இந்த அறிவிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கை விவகாரத்தில் ஜப்பான் அசட்டையாக இல்லை என்பதையே அது எடுத்துக் காட்டியது.

இலங்கையுடன் நீண்டகால நட்புறவைப் பேணி வருகின்ற நாடுகளில் ஒன்று ஜப்பான். பௌத்த மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளும், பிணைப்புகளும், இந்த உறவுகளை வலுப்படுத்தியிருந்தது.

அத்துடன், இலங்கைக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பெருமளவிலான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது ஜப்பான்.

இலங்கைக்கு குறைந்த வட்டியுடன் நீண்டகால சலுகைக் கடன்களை வழங்குகின்ற ஒரு நெருங்கிய பங்காளியாகவும் ஜப்பான் விளங்கி வந்தது.

ஆனால், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் அண்மையில் சீர்குலைந்து போய் விட்டது.

அதற்கு முக்கியமான மூலகாரணம், சீனா. இரண்டாவது காரணம், ஆட்சியில் இருந்த கோட்டா அரசாங்கம்.

நல்லாட்சி அரசாங்கத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம், சர்வதேச சமூகத்தை கையாண்ட முறை, இலங்கையை பல நாடுகளில் இருந்து அந்நியப்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

சீனாவின் செல்லப்பிள்ளையாக நடந்து கொள்வதன் மூலம், சர்வதேச சவால்களைச் சமாளித்து விடலாம் என்ற கணிப்பில் கோட்டா அரசாங்கம் செயற்பட்டது.

சீனாவின் செல்வாக்கு அதிகரித்த அந்த நிலையானது, பிற நாடுகளுடனான உறவுகளை நேரடியாகப் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான உறவுகளை இலங்கை கெடுத்துக் கொண்டது.

ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து ‘குவாட்’ அமைப்பாக செயற்படுகின்றன..

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை எதிர்கொள்வதற்கு இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன.

இது சீனாவுக்கு மிகவும் அச்சத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள ஒரு விடயம். இந்தக் கூட்டு இலங்கையில் செல்வாக்குப் பெறுவதையோ, செல்வாக்குச் செலுத்துவதையோ, சீனா விரும்பவில்லை.

அதனால், இலங்கையில் தனக்கு வசதியான அரசாங்கம் உருவாகிய போது, இந்த நாடுகளின் முக்கியமான திட்டங்களை ஓரம்கட்டுவதற்கு இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து பெறும் 480 மில்லியன் டொலர்கள் கடனுதவியுடன், கொழும்பில் போக்குவரத்து சமிக்ஞை வலையமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட திட்டங்களைச் செயற்படுத்த செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு இரத்துச் செய்யப்பட்டது.

அதுபோன்றே கொழும்பில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்துவதற்கு 1.5 பில்லியன் டொலர்கள் செலவிலான ஒரு திட்டமும் முன்வைக்கப்பட்டது.

அதற்கு மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அனுமதியும் அளித்தது. அதைவிட, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான உடன்பாடு ஒன்றிலும் இலங்கை கையெழுத்திட்டது.

இந்த மூன்று திட்டங்களும், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இரத்து செய்யப்பட்டன.

அவற்றில் இருந்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று ‘குவாட்’ பங்காளிகளும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் நெருக்கடி ஏற்பட்ட போது, இந்தியாவுடன் வேறு வழியின்றி சமரசம் செய்து கொண்ட இலங்கை அரசாங்கம், மேற்கு கொள்கலன் முனையத்தை அமைக்கும் பொறுப்பை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கியது.

சீனாவின் பேச்சைக் கேட்டு, மூன்று ‘குவாட்’ பங்காளிகளையும் பகைத்துக் கொண்ட இலங்கை அரசாங்கம், இப்போது அதன் பலாபலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு காரணமாக இருந்த கோட்டா அரசாங்கம் பதவியில் இருந்து விலகி விட்டாலும், ராஜபக்ஷவினரின் நிழல் அரசாங்கம் தான், இன்னமும் நீடிக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தவுடன், ஜப்பானுடனான உறவுகளை கெடுத்து விட்டார்கள், அதனைச் சீரமைப்பது கடினம் என்று கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஜப்பான் மீண்டும் இலகு ரயில் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான போது, அதனை ஜப்பானிய தூதரகம் மறுத்திருந்தது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை சீரமைப்பதும், ஜப்பானிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதும், இப்போது அரசாங்கத்துக்கு முக்கியமான சவால்களாக உள்ளன.

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொண்டமைக்கு, அந்த நாட்டுடனும் ஷின்சோ அபேயுடனும் இருந்த நெருங்கிய நட்புறவு மாத்திரம் காரணம் அல்ல.

மீண்டும் ஜப்பானுடன் தொடர்புகளையும் உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்வதும் தான். அந்தப் பயணத்தின் போது ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அந்தப் பேச்சுக்கள் இலங்கைக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பது, கடன் வழங்குநர்களின் மாநாட்டைக் கூட்டுவதற்கான அனுசரணையை பெற்றுக் கொள்வது, புதிய முதலீடுகளை பெறுவது போன்றவற்றையே மையப்படுத்தியிருந்தது.

ஆனாலும் ஜப்பானின் கோபத்தையோ, அது எடுத்த நிலைப்பாட்டையோ, ரணில் விக்கிரமசிங்கவின் பயணம் மாற்றியமைக்கத் தவறி விட்டது.

அதனால் தான், ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இணை அனுசரணை பற்றி அறிவித்தவுடன், ஜப்பானில் இருந்து மறுப்பு வெளியாகியிருக்கிறது.

அதற்காக ஜப்பான், இலங்கையிடம் இருந்து விலகிச் செல்ல முனைகிறது என்று அர்த்தமில்லை.

இலங்கை தொடர்பான ஜப்பானின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஜெனிவாவிலும் பார்க்க முடிந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், வழக்கமாக ஜப்பான், இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதில்லை. இந்த முறையும் கூட, ஜப்பான் வாக்களிக்காமலேயே இருந்தது.

ஆனால், இலங்கையிடம் இருந்து ஜப்பான் நிறையவே மாற்றங்களையும், நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறது.

நாட்டின் தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற கேள்வி ஜப்பானுக்கு இருக்கிறது.

அதற்கு முக்கியமான காரணம், ஜனாதிபதி மாறியிருக்கிறாரே தவிர அரசாங்கம் மாறவில்லை. அதே அரசாங்கத்தின் அதே அமைச்சர்கள், அதேகொள்கையே பின்பற்றப்படுகிறது.

அரச முறைமை மாற்றம் செய்யப்படாமல், சீரமைக்கப்படாமல், ஒழுங்குபடுத்தப்படாமல், இங்கு கொட்டப்படும் நிதி வீண் விரயமாகவே இருக்கும் என்கிறது ஜப்பான்.

அதனால் புதிய முதலீடுகள், கடன்களை வழங்குவதில் இருந்து விலகியிருக்கவே ஜப்பான் விரும்புகிறது. அதேவேளை, நெருக்கடி கால மனிதாபிமான உதவிகளை ஜப்பான் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

கடன் வழங்குநர்களுக்கான கூட்டத்தைக் கூட்டுவதற்குக் கூட ஜப்பான் பின்னடிக்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது என்றால், நிதியுதவி வழங்கும் விடயத்தில், அது எந்தளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

Share.
Leave A Reply