திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது சொத்துமதிப்பு குறித்த அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
இந்தியாவின் பெரிய நிறுவனங்களான விப்ரோ, ஓஎன்ஜிசி, நெஸ்ட்லே நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட அதிக சொத்து இருப்பதை அறிந்து அனைவரும் வியப்பு.
இந்தியாவில் செல்வம் குவியும் திருக்கோயில்களில் ஒன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம். இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
பலரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பெருமாளுக்கு சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் அங்கு செல்வம் குவிந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் திருமலை திருக்கோயிலின் உபரி வருமானம் ஆந்திர அரசின் பாண்டுகளில் முதலீடு செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின.
இதனால் பக்தர்கள் பலரும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துவந்தனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த வெள்ளையறிக்கையைக் கடந்த சனிக்கிழமை தேவஸ்தானம் வெளியிட்டது.
இதன் மூலம் அதன் முதலீடுகள் குறித்த பல தகவல்கள் கிடைத்தன.
திருப்பதி உண்டியல் காணிக்கை எதற்கெல்லாம் பயன்படுகிறது?
அந்த அறிக்கையின்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் 10.3 டன் தங்கத்தையும் ரூபாய் 15 ஆயிரத்து 938 கோடி பணத்தையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மொத்தம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 300 கோடியாகும். மேலும் உபரியாக இருக்கும் தொகையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த தேவஸ்தான அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி திருமலை திருப்பதியின் சொத்துமதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி என்பதைத் தெரிவித்தார்.
2019 ம் ஆண்டு ரூ.13 ஆயிரத்து 25 கோடியாக இருந்த டெபாசிட் தொகை தற்போது ரூ.15 ஆயிரத்து 938 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று 2019-ம் ஆண்டில் 7,339.74 டன்னாக இருந்த தங்க இருப்பு தற்போது 2.9 டன் அதிகரித்து 10.3 டன்னாக அதிகரித்தது. தேவஸ்தானத்துக்கு நாடுமுழுவதும் 7,123 ஏக்கர் பரப்பில் 960 சொத்துகள் உள்ளன.
திருப்பதி தேவஸ்தானத்தின் செல்வம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளன.
எனவே பக்தர்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் இதுகுறித்த வெளிப்படைத்தன்மை எப்போதும் பின்பற்றப்படும் என்றும் தேவஸ்தானத்தின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி
ஓர் ஆண்டில் 2.5 கோடி பக்தர்கள் செலுத்தும் காணிக்கைத் தொகை கணிசமாக சேர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளது.
வங்கி டெபாசிட்களின் மூலம் ஆண்டுக்கு 668 கோடி ரூபாய் வட்டி வசூலாகிறது. இதைக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3,100 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அறிக்கை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1933-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன் சொத்துமதிப்பு இன்று நாட்டின் பல நிறுவனங்களின் சொத்து மதிப்பைவிட அதிகமாக இருப்பது பலருக்கும் வியப்பைத் தந்துள்ளது. குறிப்பாக விப்ரோ, நெஸ்ட்லே, ஓஎன்ஜிசி நிறுவனங்களின் சொத்துமதிப்பைவிட தேவஸ்தானத்தின் சொத்துமதிப்பு அதிகம்.
இன்று நாடுமுழுவதும் பல மாநிலங்களில் கோயில்கள் கட்டிவரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துமதிப்பு பலரின் விழிகளை விரியவைத்துள்ளன.