” ‘விஸ்வரூபம்2’ எடிட்டர் மகேஷ் நாராயணன், கௌதம்மேனன், ஹெச். வினோத், பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் தொடர்பில் இருந்தனர். அவர்களில் ஒருவரின் பட அறிவிப்புதான் பிறந்தநாளுக்கு வெளிவருகிறது என அப்போது தகவல் இருந்தது…”
கமலின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறது மணிரத்னம் – கமல் பட அறிவிப்பு. கமலின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் `ராஜ்கமல்’ நிறுவனம், மணிரத்னத்தின் `மெட்ராஸ் டாக்கீஸ்’, உதயநிதி ஸ்டாலினின் `ரெட் ஜெயன்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 35 ஆண்டுகளுக்குப் பின் ‘நாயகன்’ கூட்டணி இணைந்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து மேலும் விசாரித்தோம்.
மணிரத்னம் – கமல் பட அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே, அன்று காலையில் இருந்து ஹெச்.வினோத் – கமல் கூட்டணியின் பட அறிவிப்பு வருகிறது என்றுதான் கோடம்பாக்கத்தில் தகவல் ஓடியது.
கமல் ‘விக்ரம்’ முடித்த கையோடு சில இயக்குநர்களிடம் கதைகள் கேட்க ஆரம்பித்தார். ‘விஸ்வரூபம் 2’ எடிட்டர் மகேஷ் நாராயணன், கௌதம் மேனன், ஹெச்.வினோத், பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் தொடர்பில் இருந்தனர்.
அவர்களில் ஒருவரின் பட அறிவிப்புதான் பிறந்தநாளுக்கு வெளிவருகிறது என அப்போது தகவல் இருந்தது.
ஆனால், மணிரத்னம் – கமல் பட அறிவிப்பு பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. இருவரும் மீண்டும் இணைந்தது பற்றி கோடம்பாக்கத்தில் உலாவும் பேச்சு இதுதான்.
“கமலும் மணிரத்னமும் பக்கத்து பக்கத்துத் தெருவில் வசித்து வந்தாலும் இருவரையும் மீண்டும் இணைத்தது ‘பொன்னியின் செல்வன்’தான்.
அதில் கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பார். அதன் இசைவெளியிட்டு விழாவில்கூட பங்கேற்றுப் பேசினார்.
அதில் கமல், ”பொன்னியின் செல்வன்’ படத்தை ஒன்று மணிரத்னம் எடுப்பார் அல்லது நான் எடுப்பேன் என்று நினைத்தேன்.
மணிரத்னம் வைராக்கியமாக எடுத்துவிட்டார். நான் முயற்சி செய்தேன், ஆனால் மணிரத்னம் தொடர்ச்சியாக முயன்று வென்றிருக்கிறார்.
மணிரத்னத்தின் வெற்றிப் பட்டியல்களில் மிக முக்கிய வெற்றிப் படமாக இது இருக்கும். இதனை நான் மேடை அலங்காரத்துக்காகச் சொல்லவில்லை’ என்ற கமலின் பேச்சு, இப்போது உண்மையாகியிருக்கிறது.
அந்த விழாவிலேயே ’நாம் அடுத்து இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்ற பரஸ்பர எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கிறது. இதற்கிடையே லைகா நிறுவனம் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து ஒரு படம் கொடுக்க விரும்பியது.
‘ரஜினியின் கால்ஷீட் இருக்கிறது. ‘தளபதி’க்குப் பிறகு உங்கள் கூட்டணி இணையட்டும்’ என விரும்பியது, இது தனி ட்ராக். ஆனால், மணிரத்னமோ கமலுக்கான ஒன்லைன் ஒன்று தோன்ற அதைக் கமலிடமும் பகிர்ந்திருக்கிறார்.
இப்படித்தான் இருவரும் மீண்டும் இணைவது பற்றிப் பேச்சு ஆரம்பமானது. தற்போது இந்தப் படத்தின் ஒரு தயாரிப்பாளராக உதயநிதி இணைந்திருக்கிறார்.