திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 8 கோடி ரூபாயை ஆசீர்வாத பூஜைக்காக, பூசாரி ஒருவருக்கு வழங்கியுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அறிவித்தனர்.
திலினிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்ட ஜானகி சிறிவர்த்தனவை கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்குறிப்பிட்ட விடயம் அறிவிக்கப்பட்டது.
முறைப்பாடு செய்தவர்களிடம் இருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளதாக, சீ.ஐ.டியினர், மேலதிக நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
ஜானகி சிறிவர்தன, பணிப்பாளராக பதவி வகிக்கும் கிறிஸ் குழுமம் இந்தியாவில் இருந்து பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், கடந்த காலங்களில் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சீ.ஐ.டியினர் சுட்டிக்காட்டினர்.
பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு இந்த மோசடிகளை செய்வதற்கு உதவினார் என்று கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜானகி சிறிவர்தன, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.