பார்வையற்ற காதலர்களுக்கு அண்ணனைப்போல துணை நின்று சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைத்ததோடு ரூ.1 லட்சம் ரூபாயும் அளித்து ஆசீர்வதித்த வடபழனி போலீஸாரின் செயல், பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
பார்வையற்ற காதலர்களுக்கு அண்ணனைப்போல துணை நின்று சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைத்த வடபழனி போலீஸாரின் செயல், பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
நவம்பர் 7-ம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடந்த பல்வேறு திருமணங்கள் மத்தியில் ஒரு திருமணம் மட்டும் தனிக்கவனம் பெற்றது.
லயன்ஸ் கிளப்பினர், வடபழனி ஏ.சி பாலமுருகன், வடபழனி காவல்நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு உள்ளிட்ட போலீஸார் பூக்களைத்தூவி வாழ்த்த, ஆனந்த கண்ணீருடன் பார்வையற்ற பாலு – தமிழரசி காதலர்களின் திருமண நிகழ்ச்சி கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியூட்டி, பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படியொரு திருமணம் குறித்து புதுமாப்பிள்ளை பாலுவிடம் பேசினோம்.
பாலு-தமிழரசி
“என்னோட சொந்த ஊர் ஜோலார்பேட்டை. அப்பா, அம்மா கட்டட வேலைக்குப் போற கூலித்தொழிலாளிங்க.
பிறக்கும்போதே எனக்கு ரெண்டு கண்ணும் தெரியல. போகாத ஹாஸ்பிட்டல் இல்லை. நரம்பு பிரச்னை இருப்பதால பார்வை கிடைக்குறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க.
ஆனாலும், வீட்டுல என்னை எம்.ஏ, பி.எட் வரைக்கும் படிக்க வச்சாங்க. நானும் நண்பர்களும் மதுரவாயல்ல தங்கி காலேஜ் படிச்சோம்.
அப்போ, ஆனந்த் பாபு சார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரா இருந்தார். அவரோட அறிமுகம் கிடைச்சது.
எங்களை மாதிரி மாற்றுத்திறனாளிங்களை சாதாரணமா இருக்கறவங்களே கண்டுக்க மாட்டாங்க. நல்லா பழகமாட்டாங்க. ஆனா, ஆனந்த் பாபு சார், அந்த ரகம் கிடையாது. காவல்துறையில இருந்தும் எனக்கு அப்ப இருந்து இப்போவரை அவர் வழிகாட்டியா மட்டுமில்ல, கஷ்டம்னா ஓடிவந்து உதவுற அண்ணனாவும் பல்வேறு உதவிகளை செய்துக்கிட்டு வர்றார்.
டிகிரி முடிச்சதும் என்னை பி.எட்டிற்கு ஃபீஸ் கட்டி அவர்தான் படிக்க வச்சார். அதோட, எம்.ஏ படிக்கவும் பல்வேறு உதவிகளைச் செய்தார்.
அவரை நான் அண்ணன்னு சொன்ன மாதிரியே, இப்போ அண்ணனா இருந்து எங்க திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். நானும் மனைவி தமிழரசியும் கம்ப்யூட்டர் பயிற்சிக்குப் போகும்போது நட்பானோம்.
ஒருகட்டத்துல மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனா, திருமணம் செய்துக்கிறதுக்கான பொருளாதார வசதிகள் எங்கக்கிட்ட இல்ல.
என்னோட அப்பா நாலு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டார். அதேபோல, தமிழரசி வீடும் எங்களைவிட ரொம்ப ஏழ்மை நிலைமையில் இருந்தது.
அவங்க அப்பா, அம்மா ரெண்டுப் பேருமே கூலித்தொழிலாளிங்க. அவங்க அக்காவுக்குப் பண்ணின திருமண செலவுகளே அதிகம். இந்த நிலையில், ஆனந்த் பாபு சார்கிட்ட சொன்னப்போ, ‘நான் இருக்கேன்’ன்னு ஒரேயொரு நம்பிக்கை வார்த்தைதான் சொன்னார்.
வடபழனி ஏ.சி பாலமுருகனுடன் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு
அவர் சொன்னமாதிரியே திருமணத்தைப் பண்ணி வச்சதோட சாப்பாடு செலவு, திருமண ஏற்பாடுன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார்.
அதோட, தற்போது அவர் இன்ஸ்பெக்டரா இருக்குற வடபழனி காவல்நிலையம் சார்பா எங்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்து வாழ்த்தியிருக்காங்க.
அவங்களோட ஆசீர்வாதத்தோட புது வாழ்க்கையைத் தொடங்கப்போறோம்” என்று நன்றிப்பெருக்குடன் பேசும் பாலு,
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். இப்போதுவரை பணி கிடைக்கவில்லை என்று தனது வேதனையைப் பகிர்ந்துகொள்கிறார். தங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் இரண்டு குடும்பத்தையும் காப்பாற்ற உதவியாக இருக்கும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார்கள்.
இதுகுறித்து, வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு நம்மிடம் பேசும்போது,
“இந்த உதவியை நான் மட்டுமே செய்யல. எல்லாம் எங்கள் வடபழனி ஏ.சி பாலமுருகன் சார் தலைமையில்தான் செய்தோம். நாமக்கல் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் சார்பில் 25,000 ரூபாயும் டெக்ஸ் ஷாப் சார்பில் 25,000 ரூபாயும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, பாலு திருமணத்திற்காக நாங்கள் லயன்ஸ் கிளப்பை நாடியபோது அதன் தலைவர் அசோக் பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்ஸி என அனைத்து சீர் வரிசைகளையும் கொடுத்து திருமணத்தையும் நல்லபடியாக முடித்துக்கொடுத்தார்கள்.
எங்கள் காவல்நிலைய நண்பர்கள் சார்பாக ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இன்னும் உதவத் தயாராக இருக்கிறோம்” என்று கூறி நெகிழவைக்கிறார்.