இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்.

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா படுதோல்வி அடைந்திருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தியாவுக்கு இந்த முறையும் உலக கோப்பை கைகூடவில்லை.

2022 டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது இந்தியா.

ஆனால் அதை விட ஒருபடி மேலாக இந்தியாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இங்கிலாந்து.

முதல் அரையிறுதி ஆட்டத்தை போன்றே இரண்டாவது அரையிறுதியிலும் ஒரு அணியின் ஆதிக்கமே முழுவதுமாக மேலோங்கியிருந்தது.

ஆனால் அதை விட ஒருபடி மேலாக இந்தியாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இங்கிலாந்து.

பொய்த்துப் போன நம்பிக்கை

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா ஒருவேளை டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்தான் செய்திருக்கும். அதனால் எங்களுக்கு இது எந்தவிதத்திலும் பாதிப்பில்லை என பெரியளவில் நம்பிக்கையுடன் பேசினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.

ஆனால் அந்த நம்பிக்கை அவரது பேட்டிங்கில் துளியும் தென்படவில்லை.

 

இந்தியாவின் தோல்விக்கு தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். கே.எல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி இந்த தொடரில் ஒருமுறை கூட 50 ரன்களை கூட சேர்த்ததில்லை. அதே போல பவர்பிளேவில் அதிக ரன்களை குறிக்க இந்த இணை தவறியது.

இந்த உலக கோப்பை தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 அரை சதங்களை பதிவு செய்தார். ஆனால் இன்றைய முக்கிய ஆட்டத்தில் வெறும் 5 ரன்களில் நடையைக் கட்டினார்.

ரோஹித் சர்மா – கோலியுடன் இணைந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதுவும் நடக்கவில்லை. அவர் 27 ரன்களில் வெளியேறினார்.

குறுகிய பவுண்டரிகளை கொண்ட அடிலெய்டில் ஒரு சிக்சரை கூட ரோஹித் விளாசவில்லை.

இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை ஹிட் மேன் என அறியப்பட்ட ரோஹித்தால் சமாளிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை தந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி நிதானமாக விளையாடி அரைசதம் பதிவு செய்தார்.

முதல் 15 ஓவர்களில் இந்தியா வெறும் 100 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறிக் கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா களத்திற்குள் வந்து அதிரடி காட்டினார்.

பந்துகள் பவுண்டரியை நோக்கி பறக்க 33 பந்தில் 63 ரன்களை எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

எனினும், இந்தியாவின் வெற்றி பந்துவீச்சாளர்கள் கையில்தான் இருந்தது.
டி20 உலக கோப்பை


முதல் கோணல் முற்றிலும் கோணலானது

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப அமைந்தது புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவர். பெரும்பாலும் பந்துகள் அவுட் ஸ்விங்காக மாற, அதை லாவகமாக பவுண்டரிக்கு விளாசினார் ஜாஸ் பட்லர்.

முதல் ஓவரில் மட்டுமே 3 பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது இங்கிலாந்து.

இந்திய அணியின் பவுலர்களை மாற்றிப்பார்த்தும் இங்கிலாந்தின் ரன் மழையை நிறுத்த யாராலும் முடியவில்லை. பவர் பிளே முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. அதுவே இந்தியாவின் வெற்றியை கிட்டதட்ட பறித்த தருணம்.

இங்கிலாந்து அணி எந்த ஒரு சிறிய தவறையும் செய்யாமல், அற்புதமான ஷாட்களை ஆடி ரன் வேட்டையை தொடர்ந்தது. அலெக்ஸ் ஹேல்சும் ஜாஸ் பட்லரும் மாறி மாறி அரைசதம் விளாசினர்.

தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு விக்கெட்டை கூட இந்தியாவால் எடுக்க முடியாமல்போனது.

49 பந்துகளில் பட்லர் 80 ரன்களும் 47 பந்துகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுக்க, அதிரடி சிக்சருடன் அபார வெற்றியை ருசித்தது இங்கிலாந்து.

ரோஹித் சர்மா அணி களத்தை விட்டு சோகத்துடன் வெளியேறியது. கேப்டன் ரோஹித்தின் முகம் முற்றிலும் வாடிப்போன நிலையில், பயிற்சியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

தடுமாறிய இந்தியா

இங்கிலாந்து ஒரு அற்புதமான கிரிக்கெட்டை ஆடியிருந்தாலும் இந்தியாவின் பந்துவீச்சில் பெரிய சிக்கல் இருப்பது மீண்டும் தெளிவாகியிருக்கிறது. பவர் பிளேவில் தொடர்ந்து இந்தியா தடுமாறுகிறது.

புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் பெரியளவில் வேரியேஷன் இல்லாமல் போனது, அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுக்கத் திணறியது. ஃபீல்டிங் சொதப்பல், சுழற்பந்துவீச்சால் எந்த பலனும் கிடைக்காதது உள்ளிட்டவை இந்தியாவின் படுதோல்விக்கு பிரதான காரணிகளாக அமைந்தன.

இந்தியா அரையிறுதி வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தாலும் சில நல்ல போட்டிகளை விளையாடியிருக்கிறது என்றே நிபுணர்கள், விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

1992 உலக கோப்பையை போன்று இந்த தொடரிலும் பாகிஸ்தான் மேஜிக் நிகழ்த்துமா? அல்லது இதே அதிரடியில் இங்கிலாந்து கோப்பையை உச்சி முகருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“ஆட்டம் ஏமாற்றம் தருகிறது”

தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, ‘இன்றைய ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சு போதுமானதாக இல்லை என்று கூறினார்.

16 ஓவர்களில் ஒரு அணி வந்து சேசிங் செய்து வெற்றிபெறும் அளவுக்கு ஆடுகளம் அவ்வளவு மோசமாகவும் இல்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

நாக் அவுட் சுற்றை பொறுத்தவரை அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.

நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நாங்கள் பந்துவீச்சை தொடங்கிய விதம் சிறப்பாக இல்லை. நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம்.

புவி வீசிய முதல் ஓவர் ஸ்விங்கானது. ஆனால் சரியான இடத்தில் ஆகவில்லை. நாங்கள் நெருக்கடி அளிக்க நினைத்தோம்.

இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். பெரும்பாலான ரன்கள் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஸ்குயர் திசையில் இருந்தே கிடைத்தது’என்றார்.

 

Share.
Leave A Reply