இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத்தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் அது கைகூடவில்லை.
இதுவிடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகா் சாகல ரத்நாயக்காவை இரசகியமாக புதுடில்லிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் அனுப்பி வைத்தார்.
அதுவும் வெற்றியளிக்கவில்லை. சாகல ரத்நாயக்காவினால் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய்மோகன் குவாத்ராவையும் உயரதிகாரிகளையும் மட்டுமே சந்திக்க முடிந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைக் கூட சந்திக்க முடியவில்லை.
கடன் மறுசீரமைப்பு, இலங்கை ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் சந்தித்தல் என்கின்ற இரு விவகாரங்களுக்கு முயற்சிகளைச் செய்தபோதும் தெளிவான பதில் எவற்றையும் இந்தியா கொடுக்கவில்லை.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் முதல் பயணமாக இந்தியா செல்வதே வழமையானதாகும். ரணிலுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடன்மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவோ, சீனாவோ அவசரம் காட்டவில்லை. இந்தியா, இலங்கைத் தீவில் தனக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென எதிர்பார்க்கின்றது.
சீனா இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறது. இருதரப்பும் இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஆயுதமாக பயன்படுத்த முனைகின்றன.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்தமொரகொட பொருளாதார ரீதியான உறவுகளை இந்தியாவுடன் வலுவாகப் பேணுவதன் மூலம் தமிழர் விவகாரத்தை ஓரம்கட்டலாமென நினைக்கின்றார்.
அதற்காக பழைய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இரத்துச்செய்து புதிய உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கும் முயற்சிசெய்தார்.
இந்திய ஊடகங்களுக்கும் இது தொடர்பாக நோ்காணல்களை வழங்கினா். ஆனால் இந்திய அரசதரப்பு அதற்கான இணக்கங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
மிலிந்த மொரகொடவின் விருப்பங்களுக்கு இந்தியா சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்தியாவின் இலங்கை தொடா்பான வெளி உறவுக் கொள்கையிலேயே மாற்றங்களைச் செய்யவேண்டும்.
இலங்கை தொடா்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய விடயம் இலங்கையின் இறைமை ஆட்புலமேன்மை என்பன பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம் சமாதான வாழ்வு என்பனவும் பேணப்பட வேண்டும் என்பதே ஆகும்.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இக்கொள்கையிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. இனப்பிரச்சினைத்தீர்வும் இலங்கையின் பொருளாதார நெருக்கடித்தீர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று இந்தியா கூறியுள்ளது. அத்துடன் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நோக்கி இலங்கை நகர வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசியபோது ‘கூட்டுச்சமஸ்டி’ என்ற ஆட்சிப் பொறிமுறையை நோக்கி இலங்கை நகரவேண்டும் எனக் கூறியிருந்தார்;.
இந்த அடிப்படையில் கடந்த 04ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனுடன் சமூகவிஞ்ஞான ஆய்வுமையத்தினர் ஒருசந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது, சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினர் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் முதலாவது அரசியல் தீர்வாகும்.
இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது என்பதால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களை இவ் அழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.
எனவே அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் தேசிய இன அங்கீகாரம் இறைமை அங்கீகாரம், சுய நிh;ணய உரிமை அங்கீகாரம், சுய நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சமஸ்டி பொறிமுறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு அரசியல் யாப்பு சட்ட வடிவம் கொடுக்கும் போது தாயக ஒருமைப்பாட்டைப் பேணும் வகையிலான வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு , சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கக் கூடிய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசிய இனமாக பங்குபற்றுவதற்குரிய பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றை கொண்டிருத்தல் வேண்டும்.
வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகில் முஸ்லீம்களின் வகிபாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேசித்தீர்க்கலாம் என்றும் முஸ்லிம்கள் முன் வைக்கின்ற தனி அதிகார அலகுக் கோhpக்கையையும் சாதகமாக பாரிசீலிக்கலாம்.
இரண்டாவது 13ஆவது திருத்தம் பற்றியதாகும். 13ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்ட மத்திய அரசில் தங்கி நிற்கின்ற எந்த வித சுயாதீனமற்ற மாகாணசபை முறையினையே சிபாரிசு செய்துள்ளது என்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல என்றும் குறிப்பிட்டனர்.
தற்போது வெட்டிக்குறைக்கப்பட்ட 13ஆவது திருத்தமே நடைமுறையில் உள்ளது. இது அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக கூட கொள்வதற்கு தகைமை அற்றது.
மூன்றாவது ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதாகும். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன பாரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், பௌத்தசாசன அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு என்பன இதில் கூட்டாக செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி இவ்வாக்கிரமிப்புக்களை நிறுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நான்காவது அரசியல் கைதிகளின் விடுதலையாகும். அரசியல் கைதிகளில் 50 பேர் வரை சிறையில் இருக்கின்றனா;.
அதில் 34 பேர் 10 வருடம் தொடக்கம் 28 வருடம் வரையில் சிறையில் இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்தவுடன் நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே வழமையாகும்.
இலங்கையில் அது இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட் இவர்களின் விடுதலைக்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கவேண்டும்.
ஐந்தாவது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தமிழ் மக்கள் பாரிகார நீதியையே கோரியிருந்தனர். ஆனால் சார்வதேச சமூகம் நிலைமாறுகால நீதியையே சிபாரிசு செய்தது.
இந்த நிலைமாறுகால நீதி உண்மையை கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்ற நான்கு செயல் திட்டங்களை உள்ளடக்கியது.
இந்த நீதி வழங்கல் செயற்பாட்டில் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. சர்வதேச பொறிமுறையையே அவர்கள் கோருகின்றனர். எனவே சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் உதவவேண்டும்.
ஆறாவது தமிழா் தாயகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவவேண்டும் எனக் கோரப்பட்டது. அந்த அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ் மக்களையும் இணைக்கவேண்டும் என்றும் குறிப்பாக உள்ளுராட்சிச் சபைகளை இணைப்பது ஆரோக்கியமானது.
ஏழாவது தமிழக மக்களுடனான தாயக மக்களின் உறவினை இலகுவாக்குவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் மீள செயற்படுத்துவதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தும் காங்கேசன் துறை காரைக்கால் படகு போக்குவரத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்களே அவையாகும்.
இதற்கு பதிலளித்த துணைத்தூதுவர், அரசியல் தீர்வு, 13ஆவது திருத்தம், அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கோரிக்கைகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டதோடு ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதற்கு சில முயற்சிகள் நடப்பதாகவும் அபிவிருத்தி செயற்பாடுகளில் தாம் மிகுந்த அக்கறை கொள்வதாகவும் இந்திய முதலீட்டாளர்களுடன் இது பற்றி பேசுவதாகவும்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனவரி மாதமளவில் மீளத்திறப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளது எனவும் இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தையும் காங்கேசன்துறை – காரைக்கால் படகுப் போக்குவரத்தையும் அதேமாதத்தில் ஆரம்பிக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
மேலதிகமாக தமிழ் விவசாயிகளின் மண்ணெண்ணை உரத் தேவை பூத்திசெய்வதற்கு தான் முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி விடயத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்றும் ஆனால் தமிழ் மாணவர்களின் அக்கறை குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
(சி.அ.யோதிலிங்கம்)