இரண்டாம் பாதியில் எக்கச்சக்கமான லாஜிக் ஓட்டைகள், திரைக்கதையைக் குழப்பும் வகையிலான ஃப்ளாஷ்பேக்குகள்,

நம்பகத்தன்மை என்பதே இல்லாமல் வழிந்து திணிக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் எனப் பல வேகத்தடைகள் திரைக்கதையை டவுன்பஸ் வேகத்துக்கு மாற்றி நம்மை டயர்டாக்குகின்றன.

`Surrogacy’ என்று சமீபத்தில் ட்ரெண்டான வாடகைத்தாய் என்ற விஷயத்தை மையமாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் சென்டிமென்ட் மெடிக்கல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் தர முயற்சி செய்திருக்கிறார்கள்.

இரட்டை இயக்குநர்களான ஹரீஷ் நாராயணன் – ஹரி சங்கர். தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் 3டி படம் `அம்புலி’யை எடுத்தவர்கள், நேரடி தெலுங்கு படமான `யசோதா’வை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சமந்தா, வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா, உன்னி முகுந்தன், சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த யசோதா நம்மைக் கவர்ந்தாளா?


Yashoda Review | யசோதா விமர்சனம்

பிரபல மாடலிங் பெண் ஒருவர் கார் விபத்தில் இறந்துபோகிறார். அது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து,

சம்பத் தலைமையிலான காவல்துறை விசாரணையைத் தொடங்குகிறது. மறுபுறம், வாடகைத் தாய் முறையை கார்ப்பரேட் தொழிலாகச் செய்யும் வரலட்சுமியுடைய ‘இவா’ (Eva) நிறுவனம் ஒரு ஹைடெக்கான இடத்தில் பலத்த பாதுகாப்புடன் இயங்குகிறது.

அங்கு யசோதாவான சமந்தா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை, வாடகைத் தாய்களாக தனித்தனி சொகுசு அறையில் வைத்திருக்கிறார்கள்.

இந்த மையத்தின் பின்னணி என்ன, இப்பெண்களுக்கு அங்கே என்ன நேர்கிறது, மாடலிங் பெண்ணின் இறப்பிற்கும் இந்த மையத்திற்கு என்ன சம்பந்தம் என்பதை எல்லாம் சுவாரஸ்யம் குறையாமல் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

முதல் பாதியில் காவல்துறையின் விசாரணைப் பகுதி திரைக்கதையை வேகமெடுக்க வைத்தாலும்,

அந்த ஹைடெக் கூடத்தில் வாடகைத் தாய்களாக வந்து சேர்ந்திருக்கும் பெண்களின் சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை (?) காட்சிகள் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன.

வறுமையில் வாழும் பெண்கள், அவர்களுக்கு என்று தனித்தனியான சோகக் கதை எனப் பழைய சென்டிமென்ட் உத்திகள், நமக்கு அயர்ச்சியை மட்டுமே தருகின்றன.

அதேநேரம், அங்கே சமந்தாவின் குறும்புத்தனங்கள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன.

சமந்தாதான் `ஒன் உமன் ஆர்மி’ போல படத்தைத் தன் வயிற்றிலேயே சுமந்து திரை முழுவதும் நிறைந்திருக்கிறார்.

உடனிருக்கும் வாடகைத் தாய் பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மாயமானதால் ஏற்படும் குழப்பம், பதற்றம், அதிர்ச்சி, கோபம், அழுகை என எல்லா உணர்ச்சிகளையும் நடிப்பின்வழி நமக்குக் கடத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் ராஜ், முரளி சர்மா, ராவ் ரமேஷ் என நீளும் துணை நடிகர்கள் பட்டாளத்தில் சம்பத் ராஜ் மட்டுமே கவனிக்க வைக்கிறார்.

வரலட்சுமி, உன்னி முகுந்தன் கதாபாத்திரங்கள் சமந்தாவிற்கு அடுத்தபடியாக இருந்தாலும், அவர்களுக்கான ப்ளாஷ்பேக் காட்சிகள் படத்தில் ஒட்டவே இல்லை.

முக்கியமாக, அபத்தமான வகையில் எழுதப்பட்டுள்ள வரலட்சுமியின் கதாபாத்திரம், படத்தின் கதையோட்டத்தையே வேறு திசைக்குத் திருப்புகிறது. உன்னி முகுந்தன் கேரக்டரை எல்லாம் திகில் பாக்கெட் நாவல்களில்தான் படித்திருக்க முடியும்.

இடைவேளைக்குப் பின் வரும் முதல் காட்சியிலிருந்தே, க்ளைமாக்ஸை நோக்கி படம் ஜெட் வேகத்தில் விறுவிறுவென நகரத் தொடங்கி விடுகிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் எக்கச்சக்கமான லாஜிக் ஓட்டைகள், திரைக்கதையைக் குழப்பும் வகையிலான ஃப்ளாஷ்பேக்குகள்,

நம்பகத்தன்மை என்பதே இல்லாமல் வழிந்து திணிக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் எனப் பல வேகத்தடைகள் திரைக்கதையை டவுன்பஸ் வேகத்துக்கு மாற்றி நம்மை டயர்டாக்குகின்றன. குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட், ஈஸ்ட்மென் கலர் எம்.ஜி.ஆர் படங்களை நினைவூட்டுகிறது.

போதாக்குறைக்கு சமந்தாவின் சண்டைக் காட்சிகளில், கர்ப்பிணியான அவரின் நிறை மாத வயிறு எங்கே போனது,

ஒரு கர்ப்பிணியால் எப்படி இந்தளவுக்குச் சாகசங்களைச் செய்ய முடிகிறது, சொகுசு மையத்தின் ரகசிய மர்மங்களை சமந்தா தேடும்போது மட்டும் எப்படி சிசிடிவியிடமும், பாதுகாவலர்களிடமும் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கிறார்,

பாதுகாவலர்கள் எப்படி வரிசைக்கட்டி வந்து அவரிடம் சாகிறார்கள் எனப் பல கேள்விகளுக்கு நாமே ‘இது தெலுங்குப் படம் பாஸ்’ என்பதாகச் சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதனாலேயே, இடையிடையே வரும் உணர்வுபூர்வமான சென்டிமென்ட் காட்சிகளும் நீர்த்துப் போகின்றன.

விசாரணை அதிகாரி சம்பத் எல்லா குற்றப்பின்னணிகளையும், முடிச்சுகளையும் படத்திற்குத் திரைக்கதை எழுதியவரைவிடவும் எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறார்.

சமந்தா கை நீட்டும் இடங்களில் எல்லாம் ஆயுதங்கள் கிடைக்கின்றன. அதை வைத்து எதிரிகளை எளிதில் துவம்சம் செய்கிறார்.

அடுத்தடுத்த காட்சிகளையும் திருப்பங்களையும் நம்மாளும் எளிதில் கணித்துவிட முடிகிறது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வேகமெடுத்த திரைக்கதை, போகப்போகத் தளர்ந்து இறுதியில் பல மணி நேரம் ஓடும் ஒரு நீளமான வெப்சீரிஸின் தாக்கத்தைத் தந்து முடிகிறது.

மணிசர்மாவின் பின்னணி இசை ஓ.கே ரகம். சமந்தாவின் ஆக்‌ஷனையும் அழகையும் அட்டகாசமாய் படம் பிடித்திருக்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. மார்த்தான்ட் கே.வெங்கடேஷின் எடிட்டிங்தான் படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.

‘வாடகைத் தாய்’ என்ற பெயரில் வறுமையில் வாடும் பெண்கள் சுரண்டப்படுவதையும், அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள சட்டவிரோதமான செயல்களையும் மையக் கருவாக எடுத்ததெல்லாம் பாராட்டிற்குரியதுதான்.

ஆனால், வாடகைத்தாய் என்றாலே தவறானது என்ற ஒருவித பிற்போக்கான பிம்பத்தை ‘தாய்மை’யின் புனிதம் குறித்து வலிந்து திணிக்கப்பட்ட வசனங்கள் தந்து செல்கின்றன. அந்த வாட்ஸ்அப் மெசேஜை திரையில் ஃபார்வேர்டு செய்யாமல் இருந்திருக்கலாம்.
இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

எக்கச்சக்க துணைக் கதைகளும், லாஜிக் மீறலுடன் கூடிய திரைக்கதையும் இந்த ‘யசோதா’வை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்துவிடுகின்றன.

Share.
Leave A Reply