உறவினர்கள், அவரை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவரின் இரண்டு சிறுநீரகங்களும் காணவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பீகாரின் முசாஃபர்பூர் நகரில் வசிப்பவர் சுனிதா (38). இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால், அருகில் இருந்த ஆர்.கே.சிங் என்ற மருத்துவருக்குச் சொந்தமான தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஆர்.கே.சிங், சுனிதாவுக்கு கர்ப்பப்பை தொற்று இருப்பதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 3-ம் தேதி அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார்.

அதன் பிறகும் சுனிதாவின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. அதையடுத்து, உறவினர்கள் அவரை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவரின் இரண்டு சிறுநீரகங்களையும் காணவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, உடனடியாக அவர் பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதா காவல்துறையிடம் ஆர்.கே.சிங் குறித்து புகார் அளித்திருக்கிறார்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் ஆர்.கே.சிங், செப்டம்பர் மாதம் முதல் தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா, “என்னுடைய இரண்டு கிட்னிகளையும் திருடிய மருத்துவரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அவரின் கிட்னி, மாற்று அறுவை சிகிச்சைக்காக எனக்கு வேண்டும். ஏனென்றால் எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் உயிர் பிழைக்க வேண்டும். மேலும், இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், பணத்துக்காக ஏழைகளின் உயிருடன் விளையாடும் பேராசை பிடித்த மருத்துவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்” எனத்

இதைத் தொடர்ந்து, சுனிதா குறித்துப் பேசிய மருத்துவர்கள், “சுனிதாவுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு நாளும் நாங்கள் அவருக்கு டயாலிசிஸ் செய்துவருகிறோம்.

அவருடைய நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறோம். அந்தப் பெண்ணுக்கான மாற்றுச் சிறுநீரகத்துக்கு ஐ.ஜி.ஐ.எம்.எஸ்-ஸில் பதிவுசெய்திருக்கிறோம். சிறுநீரகங்கள் கிடைத்தவுடன், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். இருப்பினும் சுனிதாவுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

Share.
Leave A Reply