கேரளாவில் யானை துரத்தியதால் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை மலைப்பாதையில் சுமார் 8 கி.மீ தூரம் ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
கேரள மாநிலம், திருச்சூர் சாலக்குடியிலிருந்து வால்பாறை மலைப்பாதையில் அம்புஜக்சன் என்ற ஓட்டுநர் ஒரு பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு யானை பேருந்தை துரத்தத் தொடங்கியிருக்கிறது. யானையிடமிருந்து பயணிகளைக் காப்பாற்ற, பேருந்தை 8 கி.மீ தூரம் ரிவர்ஸ் கியரில் இயக்கியிருக்கிறார் அந்த ஓட்டுநர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இது குறித்து அம்புஜக்சன் கூறுகையில், “1994-ம் ஆண்டிலிருந்து இந்த வழித்தடத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறேன். யானை பேருந்தை நோக்கி வரும்போதே கவனித்துவிட்டேன்.
நான் பயப்படவில்லை. காரணம் பேருந்தில் பெண்கள், குழந்தை உட்பட 40 பயணிகள் இருந்தனர்.
அவர்களின் பாதுகாப்பு முக்கியம். அங்கு நான் பயந்தால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் அந்தக் கடுமையான மலைப்பாதையில் ரிவர்ஸ் கியரில் வந்தேன். 8 கி.மீ தூரம் ரிவர்ஸ் கியரில் வந்ததெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
யானை தொடர்ந்து பேருந்தை நோக்கி வரவர மக்கள் பயந்தனர். யானையின் நகர்வைப் பொறுத்து வாகனத்தை இயக்கினேன்.
நடத்துநர் ஜோஸ் பேருந்தின் பின் பகுதியில் நின்றுகொண்டு எனக்கு சிக்னல் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.
வனத்துறையினரும் எங்களுக்காகச் சாலையை க்ளியர் செய்துகொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் யானை சென்றுவிட்டது” என்றார்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “பேருந்தைத் துரத்திய யானையை அந்தப் பகுதி மக்கள் `கபாலி’ என்று அழைப்பார்கள். பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி வலம் வரும்.
அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் யானையை அடிக்கடி பார்த்திருப்பார்கள். அது எப்போதும் வேகமாகச் சாலையை கடந்து வனத்துக்குச் சென்றுவிடும். எதிர்பாராதவிதமாக இந்த முறை வாகனத்தைத் துரத்திவிட்டது” என்றனர்.