இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ 10) பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிகளுக்கு நேசக்கரம் நீட்டி, இவ்வாரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்ததுடன், அடுத்த வருடம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு (பெப்ரவரி 4) முன்னதாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணப்போவதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், அவரின் அழைப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பெருமளவுக்கு ஐயுறவு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கான திகதியும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த காலத்தில் இலங்கையின் தலைவர்கள் பலர் தமிழ் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தருவதாக உறுதியளித்த போதிலும், பெரும்பாலும் அவர்கள் தீர்வினை பெற்றுத்தர தவறியுள்ளனர்.

மிக அண்மைக்காலத்தில் மைத்திரிபால சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கம் 2015 – 2019 காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு முயற்சித்தது. எனினும், அதில் தோல்வி கண்டது. அந்த அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் கட்சிகளுக்கு அது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

“நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வினை காண்போம். எமது நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடவேண்டிய தேவையில்லை. எமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்கமுடியும்” என்று விக்ரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறினார்.

வடக்கு, கிழக்கில் இருந்து கூடுதல் எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்றதுடன், முழுமையாக ஒத்துழைக்க தயாராய் இருப்பதாகவும் அறிவித்தது.

பல தசாப்தங்களாக பல்வேறு சிங்கள தலைவர்களுடன் அரசியலமைப்பு மூலமான இணக்கத் தீர்வினை காண்பதற்கு முயற்சித்து வந்திருக்கும் 89 வயதான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இம்முறை ஜனாதிபதியின் உறுதிமொழி உண்மையும் நேர்மையும் வாய்ந்ததாக இருக்குமென நம்புவதாக கூறியிருக்கிறார்.

உத்தேச பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தென்னிலங்கை தலைமைத்துவம் ஒற்றையாட்சி அரசியலமைப்பை கைவிட தயாராக இருக்கவேண்டும் என்று வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

சமஷ்டி முறை மீது கவனம்

தமிழ் கட்சிகளிடையே வெளிப்படையான வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும், அந்த கட்சிகளை இவ்வாரம் பேச்சுவார்த்தையொன்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைத்தார்.

சமஷ்டி முறையொன்றின் கீழ் பயனுறுதியுடைய அதிகாரப்பரவலாக்கலை அடைவதையே நாம் எல்லோரும் பொது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்” என அவர் கூறினார்.

திட்டமிட்டபடி தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு இடம்பெறவில்லை. அந்த சந்திப்பை நடத்துவோம் என்று நம்பிக்கை வெளியிட்ட சுமந்திரன் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் ‘அக்கறை’ குறித்து சந்தேகம் கிளப்பினார்.

நவம்பர் 14 பட்ஜெட் உரைக்குப் பிறகு இடம்பெற்ற தேநீர் விருந்தின்போது ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை குறித்து தான் கேட்டதாக சுமந்திரன் சொன்னார்.

“ஜனவரியில் தான் யாழ்ப்பாணத்துக்கு வருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். அவர் அறிவித்த இவ்வார சந்திப்பு குறித்து நான் கேட்டபோது நாங்கள் விரும்பினால், இவ்வாரமே சந்திக்கமுடியும் என்று அவர் பதிலளித்தார்.

அவரது பதில் கருத்தூன்றிய முறையில் செயல் முனைப்புடன் எதையும் செய்வதில் அக்கறை கொண்டவராக அவர் இருப்பதை காட்டவில்லை” என்று அவர் கூறினார்.

பெருமளவிலான அதிகாரப்பரவலாக்கலுக்கும் அரசியல் தீர்வுக்குமான தேவையே இலங்கையில் இந்தியாவின் ஈடுபாட்டுக்கான மையமாகவும் இருந்து வந்திருக்கிறது.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை காண்பதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் மதிப்பிடக்கூடிய முன்னேற்றத்தை காட்டவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இந்திய தூதுக்குழு விசனம் தெரிவித்தது.

இலங்கை அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தின் ஏற்பாடுகளின் போதாமைகள் குறித்து தமிழ்க்கட்சிகள் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்திருக்கின்ற போதிலும், அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை இந்தியா இடையறாது வலியுறுத்தி வந்திருக்கிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சிக்கின்ற அதேவேளை ஏனைய தமிழ் கட்சிகளுக்கு கூட்டமைப்பு அண்மையில் விடுத்த அழைப்பு வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

சமஷ்டி முறையை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவந்ததே அவரின் இந்த வரவேற்புக்கான காரணமாகும்.

ஜனாதிபதி பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக இருந்தாலும் கூட, சமஷ்டி அரசியலமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்கு வெளிப்படையாக அவர் தயாரில்லாத பட்சத்தில் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது பொன்னம்பலத்தின் கருத்தாக இருக்கிறது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் பாராளுமன்றத்தில் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து நினைவுபடுத்திய பொன்னம்பலம்,

சமஷ்டி முறையை அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறினார். அதனால் ஜனாதிபதியுடன் நாம் எதை பேசப்போகிறோம்? 

தனது அரசாங்கம் நியாயப்பாடும் உறுதிப்பாடும் கொண்டது என்றும் சகல தரப்புகளுடனும் தான் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருப்பதாகவும் உலகுக்கு காண்பிக்க அவர் விரும்புகிறார். அதனால் பேச்சுவார்த்தை மேசையில் நாம் இருக்கவேண்டியது அவருக்கு தேவையாகவுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை காணப்போவதாக அளிக்கும் உறுதிமொழியில் ஜனாதிபதி உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பாரானால், அந்த பேச்சுவார்த்தைக்கான முன்னிபந்தனை சமஷ்டி முறையாகவே இருக்கவேண்டும்.

அது பற்றி அவர் வெளிப்படையானவராக இருக்கவேண்டும். சிங்கள மக்களுக்கு பொய்கூறக் கூடாது என்று பொன்னம்பலம் ‘த இந்து’ ஊடகத்துக்கு கூறினார்.

மேலும், தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு குறித்து அவர் பெரும் உற்சாகம் காட்டவில்லை என்ற போதிலும், இவ்வருட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இலங்கை உள்மனச் சோதனையை செய்வதற்கும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கமான முறையில் அணுகுவதற்கும் மெய்யான வாய்ப்பொன்றை கொடுத்திருக்கிறது.

தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக தென்னிலங்கை மக்கள் உணர்கிறார்கள். தங்களது பெயரில் தலைவர்கள் போரை முன்னெடுத்ததை, தங்களது பெயரில் தலைவர்கள் இனவாத அரசியலை முன்னெடுத்ததை கண்ட சிங்கள மக்கள், இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக தங்களுக்கு தலைவர்கள் கூறியவற்றை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.

ஒரு நாடு என்ற வகையில் நாம் சேர்ந்து செயற்பட முடியுமானால் நிலவரங்களை நிச்சயமாக சரிசெய்யமுடியும் என்று பொன்னம்பலம் கூறினார்.

-மீரா ஸ்ரீனிவாசன்)

Share.
Leave A Reply