டுவிட்டர் நிறுவனம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் டுவிட்டருக்கு இறுதிச்சடங்கு நடப்பது போல் சித்தரிக்கும் படமொன்றை அந்நிறுவனத்தின் தலைவர் இலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க், கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ‍செலவிடப்பட்ட பணத்தை ஈடுசெய்வதற்கு இலோன் மஸ்க் திணறி வருகிறார்,

டுவிட்டரை வாங்கிய பின் உயர் அதிகாரிகள் பலரையும் பதவியிலிருந்து நீக்கிய அவர், அந்நிறுவனத்தின் சுமார் 7000 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.

டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் கடினமாக வேலை செய்ய வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு இணக்கம் தெரிவிக்கும் விசுவாச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 5 மணி வரை (இலங்கை, இந்திய நேரப்படி வெள்ளி காலை 3.30 மணிவரை) அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்கு இணக்கம் தெரிவிக்காத ஊழியர்கள் 3 மாத சம்பளம் வழங்கப்பட்டுபணியிலிருந்து நீக்கப்படுவர் என இலோன் மஸ்க் அறிவித்தார்

இதையடுத்து பெரும் எண்ணிக்கையான ஊழியர்கள் 3 மாத சம்பளத்தைப பெற்றுக்கொண்டு விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டுவிட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் #RIPTwitter எனும் ஹேஷ்டெக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கியுள்ளது.

இவ்வேளையில், கல்லறையில் டுவிட்டருக்கு இறுதிச்சடங்கு நடத்துவதாக சித்தரிக்கும் படமொன்றை இலோன் மஸ்க் இன்று பதிவேற்றியுள்ளார்.

#RIPTwitter என்பதை கிண்டலடிக்கும் விதமாகவும் அவர் இப்படத்தை வெளியிட்டிருக்கலாம்,

Share.
Leave A Reply