பிரித்தானிய அரச குடும்பத்தில் இனவாதத்தை அம்பலப்படுத்திய பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஹாரி – மேகன் மார்கல் தம்பதியினருக்கு மனித உரிமைகளுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹாரி, ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹொலிவூட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் பிரித்தானிய அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர்.

அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர்.

மேலும், பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசப்பட்டது.

அரசு குடும்பத்தின் இந்த பேச்சால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட சிந்தித்து இருக்கிறேன்.

உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள், நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறிவிட்டனர்.

அரண்மனைக்குச் சென்றபோது என்னுடைய கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், சாவி ஆகிய அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.

அதனால், அரண்மனையை விட்டு வெளியேற முடியவில்லை. ஒரு கோல் டாக்சியை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரி கூறுகையில், “அந்த சமயத்தில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அரச குடும்பத்தில் சிக்கி கொண்டிருந்தேன் என்பது தெரியாமலேயே, மாட்டிக் கொண்டிருந்தேன்.

இப்போது, என் தந்தை, அண்ணன் வில்லியம்ஸ் சிக்கிக்கொண்டுள்ளனர். அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் எனது தந்தை, என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்” என தெரிவித்தார்.

இதையடுத்து, 2020ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது. பிரித்தானிய அரச குடும்பத்தில் இன்வெறி பார்க்கப்படுவதாக இளவரசரே குற்றம் சாட்டி, அரச குடும்பத்தில் இருந்து விலகியது பரவலாக பேசப்பட்டது.

உயரிய பதவி, சமூக அந்தஸ்து, செல்வம் ஆகியவற்றை உதறி தள்ளியதால், உலகமெங்கும் சமத்துவத்தை விரும்புவர்கள் தம்பதிகளை பாராட்டினர்.

இந்தநிலையில் தம்பதிகளுக்கு, மனித உரிமைகளுக்கான உயரிய விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மாற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் உழைப்பவர்களுக்கு ‘ரோபர்ட் எஃப் கென்னடி ரிப்பிள் ஆஃப் ஹோப்’ விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில் ஹாரி – மேகன் மார்கல் தம்பதியினருக்கு எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply