கத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் செர்பிய அணிக்கு எதிராக பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அடித்த ஒரு கோல் கால்பந்து ரசிகர்களாலும் நிபுணர்களாலும் மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாகப் பாராட்டுப் பெற்றிருக்கிறது.
தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த பந்தை கிட்டத்தட்ட தலைகீழாகவே சுழன்று காலால் உதைத்து கோலுக்குள் திணித்த அற்புதத்தை கால்பந்து உலகம் இப்போது திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
செல்போன்கள், கணினிகள், தொலைக்காட்சித் திரைகளில் அந்தக் காட்சியை கால்பந்து ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஃபிபா தர வரிசையில் செர்பிய அணி 21-ஆவது இடத்தில் இருக்கிறது. கோப்பையை வெல்லும் கணிப்புகளில் அந்த அணி இல்லை.
ஆனால் முதல் நிலையில் இருக்கும் பிரேசில் அணிக்கு எதிரான செர்பியாவின் ஆட்டம் சில தவறுகளைத் தவிர சிறப்பாகவே இருந்தது.
இந்தப் போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
இப்போதைய பிரேசில் அணி நெய்மார் மூலமாகவே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. கத்தாரில் மிகவும் விருப்பத்துக்குரிய அணியாக இருப்பதையும் லுசைல் அரங்கில் நிரம்பி வழிந்த மஞ்சள் நிற ஆடைகள் மூலமாகக் காண முடிந்தது.
ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் அரங்கத்தில் இருந்தவர்களால் எதையும் கொண்டாட முடியவில்லை.
அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் அதிர்ச்சிகரமான தோல்விகளைச் சந்தித்த நிகழ்வுகளால் பல கால்பந்து நிபுணர்கள் உறுதியான கணிப்புகளைக் கூறுவதையே தவிர்த்து வருகின்றனர்.
செர்பியாவின் முதல்பாதி ஆட்டமும் அப்படித்தான் இருந்தது. நெய்மார், வினிசியஸ், ரிச்சர்லிசன் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும் 62-ஆவது நிமிடம் வரை செர்பிய அணிக்கு எதிராக பிரேசிலால் கோல்கள் எதுவும் அடிக்க முடியவில்லை.
செர்பியாவின் காப்பரணை தகர்க்க முடியாமல் முதல் பாதியில் திணறிக் கொண்டிருந்து உலகின் முதல்நிலை அணி.
கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோல் கீப்பரின் உடலிலும் சில நேரங்களில் கோல் கம்பத்திலும் பட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன.
பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மார் எவ்வளவோ முயன்று் கோல் வலைக்குள் பந்தைக் கொண்டு செல்ல முடியவில்லை.
முதல் பாதியில் ஆட்டம் கோல் இல்லாத இன்னொரு சமநிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றியது.
55-ஆவது நிமிடத்தில் பெனால்டி இடத்துக்கு அருகே இருந்து ப்ரீகிக் மூலம் நெய்மர் உதைத்தும் கோலாக மாறவில்லை. 60-ஆவது நிமிடத்தில் கோல் வலைக்கு மிக அருகில் இருந்து அலெக்ஸ் சாண்ட்ரோ அடித்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பிவிட்டது.
முதல் கோலை அடிக்க 62-ஆவது நிமிடம் வரை பிரேசில் காத்திருக்க வேண்டியிருந்தது. 62-ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கடத்திக் கொடுத்த பந்தை செர்பிய வீரரின் கால்களைத் தாண்டி கோலுக்குள் அடித்தார் ரிச்சர்லிசன்.
அதன் பிறகு 73-ஆவது நிமிடத்தில்தான் அந்த அதிசயமான கோல் அடிக்கப்பட்டது. இப்போதும் வினிசியஸ்தான் கோல் அடிப்பதற்கு உதவி செய்தார்.
அவர் நேரத்தியாகக் கடத்தி அளித்த பந்தை ரிச்சர்லிசன் தடுத்து நிறுத்தும்போது, அது தலைக்கு மேலே உயர்ந்துவிட்டது. உடனடியாகச் சுதாரித்து தலைகீழாக பக்கவாட்டில் சுழன்று காற்றில் பறந்து கொண்டிருந்த பந்தை வலதுகால் மூலமாக கோலுக்குள் உதைத்தார்.
பிரேசில் வீரர்களின் பல நேர்த்தியான உதைகள் கோலாக விடாமல் தடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்த செர்பிய கோல்கீப்பர் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் கணிக்காத திசையில் சென்ற பந்து வலைக்குள் புகுந்தது.
காற்றில் பறந்து கொண்டிருக்கும் பந்தை உதைப்பதை ஆங்கிலத்தில் “வாலி” (Volley) என்பார்கள். அத்தகைய உதைகளுள் இது அற்புதமான உதை என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கோலுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் கூறுகளை சிலர் ஆராய்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
நெய்மாரின் காயம்
செர்பியாவுடனான போட்டியின்போது நெய்மாருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. 80-ஆவது நிமிடத்தில் அவர் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். தலையில் கைவைத்து கண்கலங்கியபடி இருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.
கணுக்காலில் அவருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகு அவரது நிலை பற்றிய அறிவிப்பு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலின் அடுத்த ஆட்டம் சுவிட்சர்லாந்து அணியுடன் வரும் திங்கள்கிழமை நடக்க இருக்கிறது.
பிரேசிலின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்படும் அணிகளில் அர்ஜென்டினாவும் பிரேசிலும் முதல் வரிசையில் இருக்கின்றன.
ஆனால் ஒப்பீட்டளவில் பலம் குறைந்த சௌதி அரேபிய அணியிடம் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்திருப்பதால், அந்த அணியின் அடுத்த இரு ஆட்டங்கள்தான் அதன் அடுத்த சுற்று வாய்ப்பை உருவாக்கப் போகின்றன.
பிரேசில் அணி இருக்கும் ஜி பிரிவில் செர்பியா தவிர சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகள் இருக்கின்றன.
சுவிட்சர்லாந்து அணி 15-ஆவது இடத்திலும், கேமரூன் அணி தர வரிசையில் 43-ஆவது இடத்திலும் இருக்கின்றன. முதல் போட்டியில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை வைத்திருக்கும் பிரேசில் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற நாடு பிரேசில். இதுவரை 5 முறை சாம்பியனாகி இருக்கிறது. இதுவரையிலான எல்லா உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு உண்டு.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரராக நெய்மார் களமிறங்கும் மூன்றாவது உலகக் கோப்பை போட்டி இது.
இந்த மூன்று போட்டிகளிலும் பிரேசில் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2002-ஆண் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு காலிறுதியிலும் அரையிறுதியிலும் தோல்வியடைந்து வெளியேறியிருக்கிறது.